அண்டை நாட்டின் எல்லைக்குள் பதுங்கிய தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் முதல் முறையாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. மணிப்பூரில் 20 ராணுவ வீரர்களைத் தீவிரவாதிகள் கொன்றதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 38 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.
மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஜூன் 4-ஆம் தேதி இரவே பதிலடியாகத் தாக்குதல் நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்திடம் திட்டத்தை ராணுவம் முன்வைத்ததாகவும், ஆனால், வங்கதேசம் சென்றிருந்த பிரதமர் திரும்பும் வரையில் அமைதி காத்து, ஜூன் 7-ஆம் தேதி உள்துறை ஒப்புதல் அளித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தின் சிறப்புப் பிரிவு வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தீவிரவாத முகாம்களுக்கு 5 கி.மீ. தொலைவில் ஹெலிகாப்டர் மூலம் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அனைத்து நவீன ஆயுதங்களுடன் சென்ற இந்திய ராணுவ வீரர்கள், ஒரு ஹாலிவுட் படத்துக்கு இணையாகத் தாக்குதல் நடத்தி, முகாம்களை அழித்துவிட்டுத் திரும்பியுள்ளனர். இதை சாதனை என்று கூறுவதைவிட தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் இந்திய அரசு இனி கடைப்பிடிக்க இருக்கும் புதிய அணுகுமுறை என்று கருதலாம்.
இந்தத் தாக்குதல் மியான்மருக்குள் நடக்கவில்லை என்று அந்த நாட்டு அதிபரின் தலைமை அலுவலக முகநூல் பக்கத்தில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் இந்திய பகுதியில் நடந்தது என்றும், எந்தத் தீவிரவாத இயக்கமும் மியான்மர் பகுதிக்குள் செயல்பட நாங்கள் அனுமதித்ததில்லை என்றும், எங்கள் பகுதிக்குள் அண்டை நாடு நுழைந்து தாக்குதல் நடத்த அனுமதியோம் என்றும் கூறப்பட்டுள்ளது. மியான்மர் தனது தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் இத்தாக்குதல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்று மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கருத்துத் தெரிவித்தவுடன், பாகிஸ்தான் அமைச்சர் செüத்ரி நிஸôர், "பாகிஸ்தான் மியான்மர் அல்ல. இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளால் எங்களைப் பணிய வைத்துவிட முடியாது' என்று எதிர்வினை புரிகிறார்.
அதேபோன்று, மணிப்பூரில் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (காப்லாங்) தீவிரவாத அமைப்புக்கும் சீனாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிடுகிறது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகுதான் சீனா இத்தகைய அறிவிப்பை வெளியிடுகிறது.
இவ்வாறு, எல்லை கடந்துபோய் அல்லது எல்லை மீறிய தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை ஒடுக்கவும் செய்வோம் என்று உலகுக்கும் அண்டை நாடுகளுக்கும் எடுத்துரைத்திருப்பதால், இந்திய ராணுவத்தின் தார்மிக மனநிலை மேம்பட்டுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பது உண்மையே. தீவிரவாதத்துக்கு பலியான ராணுவ நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மட்டும்தான் இந்திய ராணுவத்தின் எதிர்வினையாக இருந்த நிலை மாறி, இப்போது பதிலடியாக எந்த அளவுக்கும் சென்று தாக்க முடியும் என்பதை இந்திய ராணுவம் நிரூபித்துள்ளதால், ராணுவத்தினர் அனைவருக்கும் இது பூரிப்பான மனநிலையை, நம்பிக்கையை அளித்துள்ளது.
பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று பதுங்கும் தீவிரவாதிகளுக்கும் மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளில் பதுங்கும் தீவிரவாதிகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
பாகிஸ்தான் பகுதியில் பதுங்கி வாழும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிப்பதும், அவர்களுக்கு சில நாடுகள் பண உதவி அளிப்பதும் உலகம் அறிந்த ஒன்று. ஆனால் மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளில் பதுங்கித் தாக்குதல் நடத்தும் தீவிரவாதக் குழுக்களுக்கு இந்த நாடுகள் எந்தவிதமான ஆதரவையும் தருவதில்லை. அவர்களது பகுதிக்குள் தீவிரவாதிகள் நுழைகிறார்கள், முகாம் போடுகிறார்கள் என்பதைத் தவிர இந்த நாடுகள் பாதுகாப்பு அளித்து, வளர்ப்பதில்லை. இந்தக் குழுக்கள் பலவும் சமூக விரோதச் செயல்கள் மூலம் தன்னிச்சையாக நிதி திரட்டுகின்றன.
மியான்மரிலும், வங்கதேசத்திலும் அவர்கள் அனுமதியோடு அல்லது தகவல் தெரிவிக்காமல் சில கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளே சென்று தீவிரவாத முகாம்களை அழிப்பதால் பெரும் மன வருத்தங்களோ, ராஜீய உறவு முறிவோ ஏற்பட்டு விடாது. ஆனால், பாகிஸ்தான் பகுதிக்குள் சில கிலோ மீட்டர் உள்ளே செல்வது, காஷ்மீர் தீவிரவாதிகளைத் தாக்குவதற்காகத்தான் என்றாலும்கூட, பாகிஸ்தான் இதனைப் பெரிதுபடுத்தும். எதிர்த் தாக்குதல் நடத்தும்.
பாகிஸ்தானைப் பொருத்தவரை, அமெரிக்கா எந்த அனுமதி இல்லாமலும் தகவல் சொல்லாமலும் உள்ளே வந்து தாக்குதல் நடத்தலாம். அதைத் தட்டிக் கேட்கும் துணிவு கிடையாது. தீவிரவாதிகளைத் தேடி இந்தியா உள்ளே வந்துவிடக் கூடாது. அதை சர்வதேச அரசியல் ஆக்கிவிடும்.
ஒன்று மட்டும் நிச்சயம். உத்தரகண்ட், மணிப்பூர், நாகாலாந்து, சத்தீஸ்கர், அஸ்ஸôம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நக்ஸலைட் குழுக்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு மிகத் தெளிவான எச்சரிக்கையாக இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது. இனிமேல் யாருடைய விமர்சனங்களையும், முதலைக் கண்ணீரையும் பொருள்படுத்தாமல் தீவிரவாதக் குழுக்களை இந்திய ராணுவம் துணிந்து எதிர்கொள்ளவும் தாக்கி அழிக்கவும் தயாராகிவிட்டது.
இதுவரை குட்டக்குட்ட குனிந்து கொண்டிருந்த இந்திய ராணுவம் தலை நிமிரவும் பயங்கரவாதக் குழுக்களை துணிந்து எதிர்கொள்ளவும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறை புதிது மட்டுமல்ல, சரியானதும்கூட!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.