தலையங்கம்

நிதிநிலை அறிக்கை 2015 - I

நிதிநிலை அறிக்கையின் குறிக்கோள்கள் மூன்று. ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கும், வாக்குறுதிகளுக்கும், திட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பது;

ஆசிரியர்

நிதிநிலை அறிக்கையின் குறிக்கோள்கள் மூன்று. ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கும், வாக்குறுதிகளுக்கும், திட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பது; தேசத்தின் நிதி நிர்வாகத்தை சாதுர்யமாகக் கையாண்டு, பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தித் தனது சாதனைகளின் அடிப்படையில் அடுத்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு முயற்சிப்பது; அரசின் வரி வருவாயை உறுதிப்படுத்தி, நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது ஆகியவைதான் நிதியமைச்சரின் முனைப்பாக இருக்க முடியும். மேலே குறிப்பிட்ட மூன்று குறிக்கோள்களையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாவது முழுமையான நிதிநிலை அறிக்கை கணிசமாகவே நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது.

கடந்த முப்பதாண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் எல்லா நிதிநிலை அறிக்கைகளைவிடவும் தெளிவான, குழப்பமே இல்லாத, இலக்குகளை சரியாக அடையாளம் கண்டு அவற்றை எட்ட எத்தனித்திருக்கும் நிதிநிலை அறிக்கை இதுவாகத்தான் இருக்கும். இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பிலும் புத்திசாலித்தனமும் தெரிகிறது; நேர்மையும் பளிச்சிடுகிறது. ஒளிவுமறைவு இல்லாத தெளிவான அணுகுமுறையும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மாற்றம் இல்லாத பொருளாதார நிலைத்தன்மையும் இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்.

கருப்புப் பணம், இந்தியாவில் உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, மத்திய தர வகுப்பினரின் நலன் ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையின் அடிப்படை அம்சங்கள். சிறுதொழில் முனைவோர் நலன், நீர்ப்பாசன வசதியை அதிகரிப்பது, கட்டமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை தருவது ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கை முன்னுரிமை அளித்திருக்கும் ஏனைய பிரச்னைகள். இந்த நிதிநிலை அறிக்கையின் இன்னொரு பாராட்டுக்குரிய அம்சம், அதன் தொலைநோக்குப் பார்வை.

தனது முதல் நிதிநிலை அறிக்கையிலேயே, வருமான வரிக் குறைப்பு, எல்லாத் தரப்பினருக்கும் சரமாரியாக சலுகைகள், தன்னை "ஏழைப் பங்காளன்' என்று காட்டிக் கொள்வதற்காக மானியங்களை அதிகரித்து நிதிப் பற்றாக்குறைக்கு வழிகோலும் அறிவிப்புகள் என்று எதையும் செய்யாமல் இருந்ததற்காகவே நிதியமைச்சர் அருண் ஜேட்லியை முதலில் பாராட்ட வேண்டும். இதற்கு அனுமதி அளித்த பிரதமரையும் பாராட்ட வேண்டும்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் தாங்கள் செய்ய இருக்கும் பொருளாதார மாற்றங்களுக்கான அடித்தளத்தை இந்த நிதிநிலை அறிக்கை மூலம் செய்ய முற்பட்டிருக்கிறார் அருண் ஜேட்லி. இந்த நிதிநிலை அறிக்கை வணிகக் கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்குச் சாதகமான ஒன்று என்று விமர்சிப்பவர்கள், ஏதாவது விமர்சிக்க வேண்டுமே என்பதற்காக விமர்சிக்கிறார்கள் அல்லது முழுமையான விவரம் தெரியாமல் விமர்சிக்கிறார்கள். மலருக்கு நோகாமல் தேனை உறிஞ்சும் வண்டைப் போல நிதியமைச்சர் அருண் ஜேட்லி செயல்பட்டிருக்கிறார் என்பது, நிதிநிலை அறிக்கையைக் கூர்ந்து படித்தவர்களுக்கும், நிதி நிர்வாகம் பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கும் மட்டும்தான் தெரியும்.

அருண் ஜேட்லியின் இந்த நிதிநிலை அறிக்கையின் மீது சாட்டப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு, இது வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கை என்பது. இந்தக் குற்றச்சாட்டை இடதுசாரிக் கட்சிகளோ, பல்வேறு மாநிலக் கட்சிகளோ சொன்னால்கூடப் பரவாயில்லை. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு வாரி வழங்கிய, வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் வரியைப் பாதிக்குப் பாதியாகக் குறைத்து, உலகிலேயே மிகக் குறைவான வணிகக் கூட்டாண்மை நிறுவன வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றிய காங்கிரஸ் கட்சி கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அது போகட்டும், நிதியமைச்சர் அருண் ஜேட்லி எப்படி வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் காதில் பூச் சுற்ற முற்பட்டிருக்கிறார் என்பதுதான் மிகவும் சுவாரஸ்யமான செயல்பாடு. புத்திசாலித்தனமான அணுகுமுறையும்கூட.

முதலாவது, செல்வ வளமை வரி (வெல்த் டாக்ஸ்) விதிப்பை அறவே அகற்றி இருக்கிறார். இதன்மூலம், ஆண்டொன்றுக்கு அரசுக்குக் கிடைத்து வந்த வரி வருவாய் ரூ.845 கோடி. அதே நேரத்தில், இந்த வரியை வசூலிப்பதற்காக ஒரு தனித் துறை, அலுவலர்கள், ஊழியர்கள், நிர்வாகச் செலவுகள் என்று ஆண்டொன்றுக்கு ரூ.500 கோடிக்கும் மேலே செலவாகி வந்தது. செல்வ வளமை வரி மூலம் அரசுக்கு கிடைத்த நிகர வரி வருவாய் ஆண்டுக்கு வெறும் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை மட்டும்தான்.

செல்வ வளமை வரியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக பெரும் பணக்காரர்கள், அதாவது ரூ.1 கோடிக்கும் மேலே வருமானமுள்ளவர்கள் மீதான வரியில், வரித்தொகையில் 2% கூடுதல் வரியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய் எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.9,000 கோடி. ரூ.400 கோடியை இழப்பது போலவும், கூட்டாண்மை நிறுவனங்களுக்கு சலுகை போலவும் தோற்றத்தை ஒருபுறம் கொடுத்து, இன்னொருபுறம், எந்தவிதக் கூடுதல் நிர்வாகச் செலவுமே இல்லாமல், கோடீஸ்வரர்களிடமிருந்து நோகாமல் ரூ.9,000 கோடி வரி வருவாயை அதிகமாகப் பெற வழிவகை செய்திருப்பது புத்திசாலித்தனமா இல்லை கூட்டாண்மை நிறுவனங்களுக்குக் காட்டப்பட்டிருக்கும் சலுகையா?

இதே போன்றதுதான் கூட்டாண்மை நிலுவை வரியை 30%-இல் இருந்து 25% ஆகக் குறைத்திருப்பதும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT