தலையங்கம்

நிதிநிலை அறிக்கை 2015 - V

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதெல்லாம், மத்திய தர, மாத வருமானம் பெறுபவர்களின் முதல் எதிர்பார்ப்பு, வருமான வரியில் என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன, வருமான வரி வரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறதா, வரி குறைக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான்.

ஆசிரியர்

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதெல்லாம், மத்திய தர, மாத வருமானம் பெறுபவர்களின் முதல் எதிர்பார்ப்பு, வருமான வரியில் என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன, வருமான வரி வரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறதா, வரி குறைக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான். அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி வரம்பும் அதிகரிக்கப்படவில்லை, வரிக் குறைப்பும் இல்லை என்பதே மிகப்பெரிய ஏமாற்றமாக ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால், இந்த எதிர்பார்ப்பு நியாயமற்றது. குற்றச்சாட்டும் அர்த்தமில்லாதது.

ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருமானவரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுவிட்ட நிலையில், முழுமையான இந்த நிதிநிலை அறிக்கையிலும் வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. கைதட்டல் பெறுவதற்காக வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தாததற்காகவே அருண் ஜேட்லி பாராட்டப்பட வேண்டும்.

அதே நேரத்தில், மாத ஊதியதாரர்களுக்கும், மத்திய தர வகுப்பினருக்கும் அவர் சலுகைகள் அளிக்காமல் இருந்தாரா என்றால் அதுவும் இல்லை. மாதம் எண்ணூறு ரூபாயாக மட்டுமே இருந்த போக்குவரத்துச் செலவுக்கான கழிவை இரட்டிப்பாக்கி இருப்பது, மத்திய தர வகுப்பினரின் நியாயமான செலவை உணர்ந்திருப்பதன் வெளிப்பாடு. இதே கரிசனம், வீட்டு வாடகை விஷயத்திலும் இருந்திருக்கலாம். இன்னமும் வாடகைக்கான கழிவு மாதத்திற்கு வெறும் ரூ.2,000 அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. கிராமத்தில்கூட, அந்த வாடகைக்கு வீடு கிடைக்காது என்பதை யாராவது அவரிடம் சொன்னால் நல்லது.

நேரிடையாக வரி வரம்பைக் குறைக்கவில்லையே தவிர, சமூகப் பாதுகாப்பு தொடர்பாகப் பல சலுகைகளையும், கழிவுகளையும் நிதியமைச்சர் அனுமதித்திருப்பது பாராட்டுக்குரியது. மருத்துவக் காப்பீட்டுக்கான கட்டணத் தொகையைத் தனி நபருக்கு ரூ.15,000-த்திலிருந்து ரூ.25,000-மாக உயர்த்தி இருப்பதும், மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தி இருப்பதும், 80 வயதுக்கு அதிகமானவர்களை முதிர்ந்த குடிமக்கள் என்று வகைப்படுத்தி, அவர்களது மருத்துவக் காப்பீட்டுக்கு சிறப்புச் சலுகை அளித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்புகள். மூத்த குடிமக்களின் நலனுக்கு வருமான வரிச் சட்டத்தின் மூலம் மருத்துவ வசதிகளையும், ஏனைய நன்மைகளையும் செய்ய முற்பட்டிருப்பது புதிய அணுகுமுறை.

ரூ.4,44,200 வரை சம்பாதிக்கும் தனிநபர் முறையாகத் திட்டமிட்டால் வருமான வரியே கட்டாமல் இருக்க முடியும் என்கிற வழிவகை இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படுகிறது. ஆண்டொன்றுக்கு வெறும் ரூ.12 கொடுத்து ரூ.2 லட்சம் விபத்து மரண இழப்பீடு, ஆண்டொன்றுக்கு ரூ.330 அளித்து ரூ.2 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு, புதிய ஓய்வூதியத் திட்டம் என்று பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்க அறிவிப்புகள்.

வருமான வரி விஷயத்திலும், நரேந்திர மோடி அரசு தொலைநோக்குத் திட்டத்துடன் பிரச்னையை அணுக முற்பட்டிருக்கிறது. இப்போது தரப்பட்டிருக்கும் வரம்புகளையும், சலுகைகளையும் அப்படியே வைத்துக் கொண்டு, வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் அரசின் நோக்கம் எனத் தெரிகிறது. பல்வேறு சமூகப் பாதுகாப்பு அம்சங்களை வருமான வரியுடன் இணைப்பதன் மூலம், அந்த சலுகைகளைப் பெறுவதற்காகவாவது, வரி செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் வருமான வரி வளையத்துக்குள் வரக்கூடும் என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பாக இருக்கக் கூடும்.

உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடு, உலக வல்லரசாக அடுத்த 20 ஆண்டுகளில் வளரக்கூடிய வாய்ப்புள்ள நாடு என்பவை இந்தியா பற்றி சர்வதேச பொருளாதார நிபுணர்களின் கணிப்பு. ஆனாலும்கூட, இந்தியா வறுமையான தேசமாகவும், 8 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் வீடு வாசலே இல்லாமல் தெருவோர வாசிகளாக இருக்கும் தேசமாகவும் தொடர்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. அதைவிடக் கசப்பான உண்மை, எந்தவித வருமான வரிக் கணக்கும் இல்லாமல், பெரும் பணம் சம்பாதிப்பவர்கள் அதிகம் உள்ள நாடும் இதுதான்.

இந்தியாவின் மக்கள் தொகை ஏறத்தாழ 120 கோடி. ஆனால், இதில் வெறும் 4% பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். மொத்த வரி வசூல் விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், "பிரிக்ஸ்', "ஜி-20' நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது. வரி விதிப்பு வலையில் இந்தியாவில் 25% பேர்களையாவது கொண்டு வருவது என்பதுதான் நிதியமைச்சர் வெளியில் தெரிவிக்காத இலக்காக இருக்கக்கூடும். அந்த நோக்கத்தை அவர் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை சொல்லாமல் சொல்கிறது.

நடுத்தர வகுப்பினருக்குக் கல்வி, மருத்துவம், காப்பீடு ஆகியவற்றிற்கான செலவினங்களுக்காக வருமான வரியில் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரைதான் அதிகபட்ச விலக்கு அளிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் கல்விக்கு மட்டுமே நகர்ப்புற மக்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழிக்கும் நிலைமை. காப்பீட்டுக்கான தவணைத் தொகை, மருத்துவச் செலவு, வீட்டுக்கடன் என்று கூட்டிப் பார்த்தால் ஒன்றரை லட்சம் என்பது மிக மிகக் குறைவான சலுகை. குறைந்தபட்சம் கல்விக்கு மட்டும் என்று பிரித்துத் தனியாக ஒரு லட்சம் ரூபாய் கழிவை அளிப்பது பற்றி நிதியமைச்சர் சிந்தித்திருக்கலாம். ஏனோ செய்யவில்லை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT