தலையங்கம்

தேவையே இல்லாத தடை!

பி.பி.சி.யின் ஆவணப்படமான "இந்தியாவின் மகள்' தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் பேசப்படாமலே போயிருக்கும். அந்தப் படத்துக்கு தடை விதித்ததன் மூலம் அதைப்பற்றி இந்தியா முழுவதும் பேசும்படி ஆகிவிட்டது.

ஆசிரியர்

பி.பி.சி.யின் ஆவணப்படமான "இந்தியாவின் மகள்' தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் பேசப்படாமலே போயிருக்கும். அந்தப் படத்துக்கு தடை விதித்ததன் மூலம் அதைப்பற்றி இந்தியா முழுவதும் பேசும்படி ஆகிவிட்டது. படத்தைப் பார்க்காமலேயே, அந்தப் படத்தைப் பற்றிப் பேசுவோரின் அரசியல் பேட்டிகள், குற்றச்சாட்டுகள் யாவும் பத்திரிகைகளை நிரப்பிவிட்டன.

அந்தப் படம் தடை செய்யப்பட வேண்டிய படம் அல்ல.

அந்தப் படம் எடுக்கப்பட்டதன் நோக்கம்தான் தவறானது.

தேர்ந்த கலைவடிவத்துடன், தொழில்நுட்பத்துடன் அந்த ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறார் லெஸ்லி உத்வின். நிர்பயா கொலை சம்பவத்தை திரைப்படமாக எடுக்கப் போவதாக வந்த செய்திகள் உண்மையாகி, அந்தத் திரைப்படம் வெளியாகியிருந்தாலும் அது இந்த ஆவணப்படத்துக்கு இணையாக இருந்திருக்காது. அந்த அளவுக்கு நாசூக்காக, அருவருப்போ, கொடூரமோ இல்லாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். பார்வையாளர்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் வகையில் காட்சித் தொகுப்பு அமைந்திருக்கிறது.

சிறைத் துறையின் முறையான அனுமதி பெற்றிருப்பதுடன், எடுக்கப்பட்ட 16 மணி நேரக் காட்சிகளைத் தணிக்கை செய்யாமல் அதிகாரிகளுக்குப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடியே மார்ச் 8-ஆம் தேதி அந்தப் படத்தை ஒளிபரப்பியிருந்தால், அது இந்தியர் பலராலும் பார்க்கப்படாமலேயே போயிருக்கும்.

ஆனால், அதன் தயாரிப்பாளர் லெஸ்லி உத்வின் வேண்டுமென்றே படத்தை விவாதப் பொருளாக்கினார். இந்த ஒரு மணி நேர ஆவணப்படத்தில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் "நிர்பயா எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருந்தால் இறந்திருக்கமாட்டார்' என்றும் "20 விழுக்காடு பெண்கள்தான் நல்லவர்கள்' என்றும் தனது பேட்டியில் கூறியுள்ள கருத்துகளை மட்டும் ஊடகங்ளுக்குக் கசியவிட்டார். அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு படத்துக்குத் தடையும் விதிக்கப்பட்டது.

"இந்தியாவில் ஒளிபரப்பமாட்டோம்' என்று பி.பி.சி. சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இரு நாள்களுக்கு முன்னதாகவே மற்ற நாடுகளில் அந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதை யூ-டியூப் மற்றும் முகநூல் பகிர்வு மூலம் இந்தியர்கள் பார்க்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். தெரிந்தே இதைச் செய்திருக்கிறார்கள்.

அந்தப் படம் எந்தவொரு புதிய தகவலையும் இந்தியர்களுக்குச் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் வல்லுறவுக் குற்றவாளிகள் தெரிவித்த அதே கருத்துகள்தான், வழக்குரைஞர்கள் முன்வைத்த அதே வாதங்கள்தான் அந்த ஆவணப்படத்திலும் கூறப்பட்டிருக்கின்றன.

இதற்கு எதிர்வாதங்களை முன்வைக்கும் நிர்பயாவின் தாய், தந்தையின் பேட்டி, அரசு வழக்குரைஞர்கள் பேட்டி, பெண்ணியவாதிகளின் பேட்டி, "டிசம்பர் 16' சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்றப் போராட்டங்கள், அதில் பங்கேற்றவர்கள், சாலையில் வீசப்பட்ட நிர்பயாவை யாருமே காப்பாற்ற முன்வராத சூழலில் தைரியமாக செயலில் இறங்கியவரின் பேட்டி, எந்த மோசமான நிலைமையில் கொண்டு வரப்பட்டார் என்று விவரிக்கும் மருத்துவரின் பேட்டி என அந்த ஆவணப் படம் அனைத்தையும் முன்வைக்கிறது. இவை அனைத்தும் நாமெல்லாம் ஏற்கெனவே அறிந்தவை. நிர்பயாவின் இயற்பெயர் கூறப்பட்டிருப்பது தவிர, அந்தப் படத்தில் கூடுதலான தகவல் ஏதுமில்லை. அதனால், தடை செய்ய வேண்டிய

அவசியமே தெரியவில்லை.

ஆனால், "இந்தியாவின் மகள்' ஆவணப்படம் அழுத்தம் கொடுக்கத் தவறிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

நிர்பயா வல்லுறவுக் கொலைக்குப் பிறகு இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு எத்தகைய முன்னுரிமை பெற்றது, பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் எவ்வாறு கடுமையாக்கப்பட்டன,

நிர்பயா நிதி ஒதுக்கீடு ரூ.1,000 கோடி ஆண்டுதோறும் எவ்வாறு செலவிடப்படுகிறது, பெண்கள் எவ்வாறு விழிப்புணர்வு பெற்றுள்ளனர், முந்தைய நாள்களில் நெருங்கவே முடியாத பிரபலங்கள், நீதிபதிகள் மீதும்கூட இப்போது பாலியல் வழக்குப் பதிவாகும் அளவுக்கு இந்தியாவில் மகளிருக்கு ஆதரவான சூழல் உருவாகியிருக்கும் நிலை, அலுவலகங்களில் பாலியல் தொல்லைப் புகார்களுக்கு விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படுவது, தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருதல் என மகளிருக்கு ஆதரவான செயல்பாடுகளுக்கும் அந்த ஆவணப்படம் அதிக முக்கியத்துவம் தந்து பேசியிருக்க வேண்டும். செய்யவில்லை.

அந்த ஆவணப்படம் இந்தியர்கள் பார்ப்பதற்காக எடுக்கப்பட்டதல்ல. வெளிநாட்டவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து, இந்தியர்கள் இன்னமும் பழைமைவாதிகளாக இருக்கிறார்கள் என்பதையும், இந்திய அரசு ஒரு நியாயமான மக்கள் எழுச்சியைக்கூட தடியடி நடத்தி, தண்ணீரைப் பீச்சியடித்துத் தடுக்கிறது என்பதையும் கண்டு இந்தியாவை சுற்றுலாப் பயணிகளும், முதலீட்டாளர்களும் புறக்கணிக்க வேண்டும் என்பதே ஆவணப்படத்தின் உள்நோக்கம்.

இதுபோன்ற சம்பவங்கள் பிரிட்டனிலும் நடைபெறுகின்றன. ஆனால், நம்மால் அதை ஆவணப்படமாக்க முடியாது. ஏனென்றால், அவர்களது நாட்டின் சிறைக்குள் நுழைந்து நாம் லெஸ்லி உத்வினுக்கு அனுமதி அளித்தது போல பேட்டியெடுக்க அந்த அரசு அனுமதிக்காது. "திகார் சிறைக்குள் வல்லுறவுக் குற்றவாளியை பேட்டி எடுக்க எப்படி அனுமதித்தீர்கள்' என்று கேள்வி கேட்டு முடிக்கும் முன்பாகவே, திமாபூர் சிறைக்குள் மக்கள் புகுந்து (?) பாலியல் குற்றவாளியை மட்டுமே தனியே பிரித்து இழுத்துவந்து அடித்துக் கொல்வது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.

தடை செய்யாமல் இருந்திருந்தால், அந்த ஆவணப்படம் தானே முடங்கியிருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT