தலையங்கம்

நியாயம் கேட்க ஏன் தயக்கம்!

சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்வதற்காகச் சென்ற, தமிழ்நாட்டின் வேலூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி கஸ்தூரி முனிரத்தினம், அவர் பணியாற்றிய வீட்டின் குடும்பத் தலைவியால் வலது கை வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இந்தச் சம்பவம் செம்டம்பர் 29 - 30-க்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் நடந்துள்ளது.

ஆசிரியர்

சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்வதற்காகச் சென்ற, தமிழ்நாட்டின் வேலூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி கஸ்தூரி முனிரத்தினம், அவர் பணியாற்றிய வீட்டின் குடும்பத் தலைவியால் வலது கை வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இந்தச் சம்பவம் செம்டம்பர் 29 - 30-க்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் நடந்துள்ளது.
 கடந்த பத்து நாள்களில் சவூதி அரேபிய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? கஸ்தூரியின் கையை வெட்டிய அரேபியப் பெண் கைது செய்யப்பட்டாரா? ரியாதில் உள்ள இந்தியத் தூதரகம் என்ன நடவடிக்கை எடுத்தது? இன்னமும்கூட, சவூதி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகத்தான் இந்தியத் தூதரக அதிகாரிகள் சொல்கிறார்கள்.
 கஸ்தூரி மீது பல புகார்கள் கூறப்படும். அவர் மீது திருட்டுப் பட்டம் உள்ளிட்ட பலவற்றைக் கூறி, அரேபியப் பெண்மணியின் கொடூரச் செயலை மறைக்க அந்நாட்டு அரசு முற்படும். இன்னும் சொல்லப்போனால், அந்தப் பெண்மணி இங்கே வீட்டு வேலை செய்வதற்காக வந்தவர் அல்லர் என்றோ அல்லது அவர் பணி நிமித்தக் குடிநுழைவு பெறாதவர் என்றோகூடச் சொல்லக் கூடும். அவை எதுவான போதிலும், நிகழ்த்தப்பட்டுள்ள கொடூரச் செயலுக்காக அந்த அரேபியப் பெண்மணிக்குத் தண்டனை அளிப்பதே சவூதி அரசின் நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியும்.
 சவூதி அரேபியாவில் 28 லட்சம் இந்தியர்கள் பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள். இவர்களில் ஐந்து லட்சம் பேர் வீட்டுப் பணியாளர்கள். இதில் 10% பேர் பெண்கள். இவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும், சில வீடுகளில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்தாலும், இதற்காகத் தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் அரேபியாவில் ஏதுமில்லை. இருப்பினும், ஷரியத் சட்டத்தின்படி தண்டனை சாதாரண அபராதத்துடன் முடிந்துவிடும்.
 2014 ஜனவரி 2-ஆம் தேதி சவூதி அரேபியாவும் இந்தியாவும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. "வீட்டுப் பணியாளர் நியமனத்துக்கான தொழில் ஒத்துழைப்பு உடன்படிக்கை'யின்படி, பணியமர்த்துபவரும் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டவரும் செய்த ஒப்பந்தம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். வீட்டுப் பணியாளருக்கு தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் ஒப்பந்தப்படி பணத்தைச் செலுத்த வேண்டும். வீட்டுப் பணியாளர்களுக்குப் பிரச்னை ஏற்பட்டால் உதவிட 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட வேண்டும். தவறு யார் மீது என்றாலும் அமலில் உள்ள சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும்' என்று உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு எத்தனை சவூதி அரேபியர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்கிற விவரம் இல்லை.
 வீட்டுப் பணியாளர்களாகச் செல்பவர்கள் தங்கள் கடவுச்சீட்டை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவதே நடைமுறையாக இருக்கிறது. அதன் பிறகு, அங்கே நடக்கும் கொடுமைகளை சகித்துக் கொண்டு கடுமையான உழைப்பைத் தந்தாக வேண்டும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கிடைப்பதில்லை.
 சில நேர்வுகளில், இந்தக் கடவுச்சீட்டு, ஏ.டி.எம். அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் எல்லாவற்றையும் அங்குள்ள ஏஜென்ஸியே வைத்துக் கொள்கிறது. நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வங்கியில் போடப்பட்டவுடன், இந்த ஏஜென்ஸிகள் தங்கள் கமிஷனை எடுத்துக் கொண்டு, மீதியை இந்தியாவுக்கு அனுப்ப உதவுவார்கள். குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கு இந்த கமிஷன் எடுக்கும் நடவடிக்கை தொடரும். பிறகுதான், வீட்டுப் பணியாளர் முழுச் சம்பளத்தைப் பார்க்க முடியும்.
 இரு மாதங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய பெண்மணி, கடவுச்சீட்டு போலி என்பதற்காக கைது செய்யப்பட்டார். ஆனால், அந்தப் பெண் தனது உண்மையான கடவுச்சீட்டை தான் பணியாற்றிய வீட்டின் குடும்பத் தலைவர் தர மறுத்துவிட்டதாகவும், தொடர்ந்து பணி புரிய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், ஆதலால் போலி கடவுச்சீட்டை விலை கொடுத்து வாங்கித் தப்பித்து வந்தேன் என்றும் சொல்லி அழுதார். அவரது கூற்று உண்மையா, கொடுமையிலிருந்து தப்பிக்கத்தான் இச்செயலைச் செய்தாரா என்று விசாரிக்கவும்கூட இந்திய அரசோ, வெளியுறவுத் துறையோ முயற்சி செய்யவில்லை. இந்திய சட்டத்தின்படி அவர் கைது செய்யப்பட்டார்.
 தமிழகத்தில் ஸ்ரீபுரந்தான் சிவன் கோயில் நடராஜர் சிலைக் கடத்தல் வழக்கில் சுபாஷ் கபூர் என்பவர் கைது செய்யப்பட்டு அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அமெரிக்கத் தூதரக சென்னை அலுவலக அதிகாரிகள் இரண்டு பேர் அரியலூர் வந்து விசாரணையைப் பார்வையிட்டனர். ஏனெனில், அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்.
 அண்மையில், ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்ட அவரது தாய் இந்திராணி முகர்ஜியை பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சிறையில் சந்தித்துப் போதுமான வசதிகள் உள்ளனவா என்று கேட்டறிந்தனர். ஏனெனில், அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்.
 ஆனால், இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் கொடுமைக்கு ஆளானால், பாதிக்கப்பட்டால், இந்தியாவில் உரத்தக் குரல் கொடுக்கப்பட்டால் மட்டுமே களத்தில் இறங்கி விசாரிக்கிறார்கள். கொடுமைக்குப் பலியானோர், கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டோரின் சடலத்தை வாங்கி அனுப்புவதிலும்கூடச் சட்டம் பேசுகிறார்கள்.
 அதிகம் படிக்காத லட்சக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களது நலனைப் பேண வேண்டிய, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமது அரசுக்கு உண்டு. நியாயம் கேட்க நாம் தயங்கத் தேவையில்லை!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

SCROLL FOR NEXT