தலையங்கம்

முடிவுக்கு வந்தது மீத்தேன் பிரச்னை!

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், இதுநாள்வரை போராடிய பல்வேறு விவசாய அமைப்புகள் மகிழ்ச்சியுறும். தமிழ் ஆதரவு அமைப்புகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும், சில எதிர்க்கட்சிகளும் இதற்கான போராட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து நடத்திவந்தன. அவர்களும் இந்த மகிழ்ச்சியில் பங்குபெறுவர்.

ஆசிரியர்

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், இதுநாள்வரை போராடிய பல்வேறு விவசாய அமைப்புகள் மகிழ்ச்சியுறும். தமிழ் ஆதரவு அமைப்புகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும், சில எதிர்க்கட்சிகளும் இதற்கான போராட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து நடத்திவந்தன. அவர்களும் இந்த மகிழ்ச்சியில் பங்குபெறுவர்.
 ÷பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, இத்திட்டம் குறித்து அறிக்கை அளிக்கப் பணிக்கப்பட்டது. இக்குழு அளித்த அறிக்கையின்படி, தற்போது இந்த அரசாணை வெளியாகியுள்ளது.
 ÷மீத்தேன் திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியில்தான் அனுமதி கொடுக்கப்பட்டது என்றாலும்கூட, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டியது அவசியமில்லை. மத்திய அரசின் சார்பில் முன்வைக்கப்படும் திட்டத்தைப் பற்றி அதிகாரிகள் தரும் தவறான வழிகாட்டுதல்கூட இத்தகைய மக்களுக்கு எதிரான திட்டங்களை ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்பதற்கு காரணமாகி விடுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
 ÷திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் 661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நிலக்கரிப் படுகை உள்ளது. இதனடியில் கிடக்கும் மீத்தேன் வாயுவை, துளையிட்டு எடுப்பதன் மூலம் மத்திய அரசுக்கு மீத்தேன் வாயு தொடர்பான தொழில்கள் மற்றும் அதிக வருவாய் கிடைக்கும் என்பது உண்மையே என்றாலும், இந்த மீத்தேன் வாயுவை எடுக்கும்போது பாதிக்கப்படக்கூடிய நிலம், காலம்காலமாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வரும் பரப்பு என்பதுதான் விவசாய அமைப்புகளின் எதிர்ப்புக்கு முதன்மைக் காரணம்.
 ÷இத்திட்டத்தை சோதனை அடிப்படையில் மேற்கொள்ள அனுமதி பெற்றிருந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் காவிரி டெல்டா பகுதியில் ஆழ்துளையிட முயன்ற ஒவ்வொரு சம்பவமும் பெருந்திரள் முற்றுகைப் போராட்டத்தாலும், அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சமரசப் பேச்சாலும் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த நிறுவனம், இந்தச் சோதனையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடுவும்கூட முடிந்துவிட்டது.
 ÷மீத்தேன் வாயு எடுப்புக்கான திட்டத்துக்கு இந்த நிறுவனம் அளித்த சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டில், இந்த வாயு எடுக்கப்படும் நேரத்தில் வெளியேற்றப்படும் நிலத்தடி நீரின் ஐசோடோப் கூறுகள், இந்தப் படுகையில் நிலத்தடியில் காணப்படும் நிலக்கரி படிவம் குறித்த தரவுகள், மீத்தேன் வாயு கசிவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எந்தத் தரவுகளையும் மாநில அரசுக்கு அளிக்கவில்லை.
 ÷மீத்தேன் வாயு எடுக்கப்படும் நடைமுறை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நடப்பதாலும், பாதுகாப்பான குழாய்கள் மூலம் மீத்தேன் வாயு நிலத்தின் மீது கொண்டு செல்லப்படும் என்பதாலும் விவசாய நிலங்கள் பாதிக்காது என்று மட்டுமே இந்த நிறுவனம் வலியுறுத்தி வந்தது. சமரசப் பேச்சு கூட்டங்களில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் இதே கருத்தை வலியுறுத்தினர்.
 ÷ஆனால், மீத்தேன் வாயு அதிகளவு எடுக்கப்படும்போது, மண்அடுக்குகளில் இடைவெளி ஏற்படுவதால் நிகழும் நிலத்தட்டு அழுந்துதல் அல்லது நகர்ந்து போகக்கூடிய வாய்ப்புகள் குறித்தோ, குழாய்கள் வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தோ யாரும் பேசவில்லை. ஆனால், தமிழக அரசின் வல்லுநர் குழு இந்த விபத்துகளையும், ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் விடப்படும் என்பதையும் இந்த பரிந்துரைகளில் சுட்டிக்காட்டியுள்ளது.
 ÷நிலத்தட்டு நகர்வு அல்லது அழுந்துதல் என்பது காவிரி டெல்டா பகுதிக்குப் பேரழிவை ஏற்படுத்தும். நிலத்தட்டு மாற்றங்களால் கடல்நீர் திடீரென பின்வாங்கியதால் வெளிப்பட்டவைதான் இன்றைய அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகள். இந்தத் திடீர் மாற்றத்தால் வெளியேற முடியாத கடல்சார் உயிரினங்களின் படிவுகள்தான் இங்கே சுண்ணாம்புக் கற்களாக, கற்படிவுகளாக உள்ளன. தமிழகத்தின் ஒரு பகுதிக்கு ஏற்பட்ட பாதிப்பை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதே நிலை காவிரி படுகைக்கும் ஏற்பட்டு விடக் கூடாது.
 ÷நிலத்தின் அடியிலிருந்து மீத்தேன் வாயுவும், நீரும் பெருமளவு வெளியேற்றப்படும்போது, கடலின் நீரோட்டம் உள்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் கரிப்பாக மாறும் ஆபத்தும் அதிகம். காவிரிப் படுகையில் கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்யும் விளைநிலத்தின் விளைச்சலின் தரம் மாறுபடும். இவையாவும் ஒரே நாளில் அல்லது ஒரே சாகுபடியில் தெரிந்துவிடாது. அவை வெளிப்படும்போது, பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் அனைத்து வாய்ப்புகளையும் நாம் இழந்துவிட்டிருப்போம்.
 ÷காவிரி விவசாயிகளின் இந்த முன்னெச்சரிக்கை உணர்வு, அவர்களது அன்றாட விவசாயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கர்நாடகத்தின் பிடிவாதத்தால் நேர்ந்துள்ள காவிரி நீர் பற்றாக்குறை நிரந்தரமாகியுள்ள இன்றைய சூழலில், நீர் மேலாண்மை மற்றும் நெல் தவிர்த்த மாற்றுப் பயிர் முயற்சிகளில் ஈடுபடுவதிலும் காணப்பட வேண்டும்.
 ÷தமிழகத்தின் நெல் களஞ்சியம் தஞ்சை என்கின்ற நிலைமை மாறாது நீடிக்கும் என்பது உறுதியில்லை. கிடைக்கும் நீரை வீண்செய்யாமல் முழுமையாகப் பயன்படுத்துதல், கிடைக்கும் நீர் அளவுக்கு ஏற்ற பயிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பரிசோதனை அடிப்படையில் மாறுவது ஆகியன இன்றைய காலத்தின் கட்டாயம்.
 ÷தொடக்க நிலையிலேயே மீத்தேன் வாயுத் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது நன்மையே. தமிழக அரசின் இந்த முடிவு பாராட்டுக்குரியது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

SCROLL FOR NEXT