நாடு தழுவிய அளவில் இன்று நடத்தப்படும் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தம் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படியொரு பொது வேலைநிறுத்தம் இப்போது தேவைதானா என்பதும், இதன்மூலம் தொழிற்சங்கங்கள் சாதித்துவிடப் போவது என்ன என்பதும் அதைவிட முக்கியமான கேள்விகள்.
ராணுவம், ரயில்வே ஆகியவை தொடர்பான தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதால், பெரும்பாலான மாநிலங்களிலுள்ள பேருந்துப் போக்குவரத்து ஊழியர்களும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்ளமாட்டார்கள்.
வங்கி ஊழியர்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையிலும், அவர்கள் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார்கள். அவர்கள் கலந்து கொள்ளாவிட்டால், வேலைநிறுத்தம் நடைபெற்றதற்கான அறிகுறியே இல்லாமல் போய்விடும் என்பதால் எடுக்கப்பட்ட முடிவாகக்கூட இது இருக்கக் கூடும்.
தொழிலாளர் நலச் சட்டத்தில் அரசு கொண்டு வர இருக்கும் சில திருத்தங்களை எதிர்ப்பதற்காகத்தான் இந்தப் பொது வேலைநிறுத்தம் என்றாலும், இன்னும் சில காரணங்களையும் தொழிற்சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. அரசுத் துறையைப் பாதுகாப்பது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றுவது, பொது விநியோக அமைப்புகளை வலுப்படுத்துவது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவது ஆகியவையும் இந்தப் பொது வேலைநிறுத்தத்துக்கான காரணங்கள் என்று தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு முனைப்புடன் செயல்படுத்தி இருப்பது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மட்டுமே. "ஜன்தன்' என்கிற திட்டம், ஓய்வூதியத் திட்டம், விபத்து, ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் என்று அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் அத்தனை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றக் கோரி வேலைநிறுத்தம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.
பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாப்பது, தனியார்மயமாக்குவதைத் தடுத்து நிறுத்துவது என்பதும், மக்கள் மன்றத்தின் ஆதரவைப் பெறுவது சந்தேகம்தான். பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தனியார்மயமாக்கப்படுவது என்பது 1996-இல் தேவெ கெüடா தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. அந்த அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்து பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதைத் தொடங்கி வைத்தவர் தி.மு.க.வின் முரசொலி மாறன் என்பது மட்டுமல்ல, அந்த ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கு பெற்றது என்பதும், கெüடா அரசை மார்க்சிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரித்தது என்பதும் சரித்திரம்.
தொழிலாளர் நலச் சட்டங்களை எளிமைப்படுத்துவதுடன், மாறிவிட்ட சூழலில் தேவையில்லாத பல சட்டங்களையும், விதிமுறைகளையும் அகற்றி விடுவது என்பதுதான் தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தத்தின் நோக்கம். குறிப்பாக, தொழிற்சாலைச் சட்டம், பயிற்சி நிலைத் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றில் அரசு மாற்றங்கள் கொண்டு வர இருக்கிறது.
கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்கள், இந்தியாவில் அன்னிய முதலீடுகளின் வரவைத் தடுப்பதாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சீனாவில் இந்தச் சட்டங்கள் தளர்த்தப்பட்டதால்தான் அங்கே பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.
தொழிலாளர் நலச் சட்டங்களை, முழுக்க முழுக்க வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு சாதகமானதாக மாற்றுவதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. வேலைக்கு அமர்த்தியவர்களைக் காரண காரியமே இல்லாமலும், இழப்பீடு வழங்காமலும் பணிநீக்கம் செய்யும் வகையிலான சட்டங்களையும் அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில், அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட சட்டத்தின் சில விதிமுறைகளைத் தளர்த்தியாக வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
பொது வேலைநிறுத்தம் அறிவித்திருக்கும் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள், நிரந்தர ஊதியம் பெறும் அரசு, தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிற்சங்கக் கட்டமைப்புக்குள் செயல்படுபவர்கள். இவர்கள் ஒட்டுமொத்தத் தொழிலாளர் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மட்டுமே.
கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் தாற்காலிகப் பணியில் சேரக்கூடத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. பணி நிரந்தரம், ஓய்வூதியம் போன்றவற்றில் இன்றைய இளைய தலைமுறையினருக்கே உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. அதிக ஊதியம் கிடைத்தால் குறைந்த கால முன்னறிவிப்பில் வேலையிலிருந்து விடுபடும் நிலைமையைத்தான் பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசின் செயல்பாடுகளைத் தட்டிக் கேட்கவும், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் வேலைநிறுத்தம் என்கிற போராட்ட முறை இனிமேலும் எடுபடாது. அது அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது வெறுப்புதான் ஏற்படும். நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை விட்டுவிட்டு நடுத்தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். மாற்றப்பட வேண்டியவை காலத்தோடு ஒட்டாத சட்டங்கள் மட்டுமல்ல, தொழிற்சங்கங்களின் அணுகுமுறைகளும்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.