தலையங்கம்

கலவரத்தில் நேபாளம்!

நேபாளம் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என்ற அறிவிப்புடன், நேபாளத்தை ஏழு மாகாணங்களாகப் பிரித்துக் கூட்டாட்சி நடத்தும் புதிய அரசியல் சாசனம் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் சாசனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் நடைபெற்று வரும் கலவரங்கள், தீக்குளிப்பு, காவல் துறை நடவடிக்கையால் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ஆசிரியர்

நேபாளம் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என்ற அறிவிப்புடன், நேபாளத்தை ஏழு மாகாணங்களாகப் பிரித்துக் கூட்டாட்சி நடத்தும் புதிய அரசியல் சாசனம் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் சாசனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் நடைபெற்று வரும் கலவரங்கள், தீக்குளிப்பு, காவல் துறை நடவடிக்கையால் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எதிர்ப்புகள் பெரிதாகிக் கொண்டிருக்கின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.
 நேபாளத்தில் தனி அரசு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்த பிறகு நேபாளத்துக்கெனத் தனி அரசியல் சாசனம் உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. 2010-ஆம் ஆண்டு இந்த சாசனம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் முழுமை பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. பிறகு, நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 9,000 பேர் இறந்தபோது இந்தப் பணிகள் முற்றிலுமாக நின்றுபோயின. தற்போது இந்த அரசியல் சாசனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையினர் இந்தப் புதிய அரசியல் சாசனத்துக்கு வரவேற்பு தெரிவித்தபோதிலும் "இது அவசரக்கோலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது' என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறைகளைச் சுட்டிக் காட்டி ஒவ்வொருவரும் ஒரு பகுதியில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
 தனியரசாட்சியை முடிவுக்கு கொண்டு வருவதோடு, சிறுபான்மை இனத்தவர்கள் வாழும் பகுதிகளைத் தனி மாகாணமாக்கி அவர்களே ஆட்சி நடத்தவும், நிலமற்றவருக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்கவும் மாவோயிஸ்ட் கூறிய உறுதிகள், இந்தப் புதிய அரசியல் சாசனத்தில் காணப்படவில்லை.
 நேபாளத்தின் சிறுபான்மை இனமாகிய மாதேஸி, தாரு பழங்குடியின மக்கள் தங்களை அறிவியல்பூர்வமாக ஓரங்கட்டும் வகையில் இந்த மாகாணப் பிரிப்பு உள்ளது என்று குறை கூறியுள்ளனர். பெரும்பான்மை நேபாளிகள் வாழும் பகுதிகளில் அமையுமாறு இந்தப் பழங்குடி இனக் குடியிருப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதால், ஒருபோதும் இவர்கள் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் நுழைவது சாத்தியமில்லாமல் செய்யப்பட்டுள்ளது. அப்படியே சாத்தியமானாலும்கூட மிகச் சிலரே நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியும் என்று கருதுகிறார்கள். ஏனெனில், நாடாளுமன்றத்துக்கு 45% உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று புதிய சாசனம் சொல்கிறது. இது இடைக்கால அரசியல் சாசனத்தின் அளவைவிட 13% குறைவு.
 நேபாளத்தை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்பதும் இங்குள்ள பலருடைய கோரிக்கை. ஆனால், மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேபாளத்தில் காலம்காலமாக உள்ள மதம் சார்ந்த கோயில்கள், நடைமுறைகள் பாதுகாக்கப்படுவது அரசின் கடமை என்றும், பசு தேசிய விலங்கு என்றும் சாசனம் கூறினாலும், இந்துக்கள் திருப்தி அடையவில்லை, போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 சிறுபான்மை பழங்குடியினத்தவர் மட்டுமல்லாமல் மகளிர் இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த அரசியல் சாசனம் பெண்களுக்கு சம உரிமை வழங்கவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு. நேபாளி ஆண்கள் யாரை மணந்து குழந்தை பெற்றாலும், அக்குழந்தைகளுக்கு நேபாளக் குடியுரிமை கிடைக்கும். ஆனால், நேபாளப் பெண் வேறு நாட்டவரை மணந்து குழந்தை பெற்றால், அந்தக் குழந்தைக்கு நேபாளக் குடியுரிமை கிடையாது என்கிறது புதிய அரசியல் சாசனம்.
 புதிய அரசியல் சாசனத்தில் இத்தகைய குறைபாடு இருப்பதை முன்னதாகவே இந்திய அரசு நேபாள அரசுக்குத் தெரிவித்தது. இவ்வாறாக, சிறுபான்மை பழங்குடி இன மக்கள் புறக்கணிக்கப்பட்டால், நேபாளத்தில் அமைதி குலையும் என்றும், பலர் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள பிகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வதும் நடைபெறும் என்றும், இதனால் இரு நாடுகளுக்குமே தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், நேபாள அரசு அதைப் பொருள்படுத்தவில்லை.
 இந்தியா அண்டை நாடு என்பதாலும், 2014-ஆம் ஆண்டு காத்மாண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி 100 கோடி டாலர் அளவிலான கடனுதவித் திட்டங்களையும், நீர்மின் நிலையங்கள் அமைக்கும் திட்டங்களில் இந்தியாவின் பங்கேற்பு, மின்கொள்முதல் குறித்தும் ஒப்பந்தங்கள் போட்டிருக்கும் நிலையில், அங்கு ஏற்படும் அமைதிக் குலைவு இந்திய அரசுக்கு கவலை அளிக்கிறது. நேபாளத்தில் இருக்கும் இந்தியத் தூதரை வரவழைத்து, இந்தியா ஆலோசனை நடத்தியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் வன்முறைக்குத் தீர்வு காணுங்கள் என்றும் இந்தியா நேபாளத்தை அறிவுறுத்தியுள்ளது.
 "குறைபாடுகளைச் சரிசெய்துவிட முடியும். ஆனால், எங்களைக் கட்டாயப்படுத்தி சாதிக்க நினைத்தால், இந்தக் கலவரங்களைத் தொடர விடமாட்டோம்' என்று நேபாள ஆட்சியாளர்கள் கூறினாலும், இந்தப் புதிய அரசியல் சாசனத்தை சற்று நிதானமாக, இதில் உள்ள குறைபாடுகளை விவாதித்து பிறகு அமல்படுத்தியிருக்கலாம் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.
 வேற்று நாட்டவரை மணந்த நேபாளப் பெண்களின் குழந்தைகளுக்கும் குடியுரிமை, பழங்குடியினர் வாழும் பகுதிகளை அவர்களே பெரும்பான்மையாக இருக்கும் வகையில் எல்லைகளை மறுவரையறை செய்தல் ஆகியவற்றின் மூலம் நேபாளம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். நேபாள அரசுக்கும் இதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், எவ்வளவு விரைவில் இதற்கு இணங்குவார்கள் என்பதுதான் தெளிவில்லாமல் இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை

SCROLL FOR NEXT