தலையங்கம்

பால்மைராவுடன் முடிந்துவிடவில்லை!

சிரியா ராணுவம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற புராதன நகரமான பால்மைராவை ஐ.எஸ். பயங்கரவாதப் படைகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்துக் கைப்பற்றி இருப்பது மிகப்பெரிய ஆறுதலை அளிக்கிறது. நாலாயிரம் ஆண்டு சரித்திரம் உள்ள இந்த நகரத்தில் இருக்கும் கட்டடங்களும், சான்றுகளும் மனித இனம் வளர்ந்த வரலாற்றை எடுத்துரைக்கும் ஆவணங்கள்.

ஆசிரியர்

சிரியா ராணுவம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற புராதன நகரமான பால்மைராவை ஐ.எஸ். பயங்கரவாதப் படைகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்துக் கைப்பற்றி இருப்பது மிகப்பெரிய ஆறுதலை அளிக்கிறது. நாலாயிரம் ஆண்டு சரித்திரம் உள்ள இந்த நகரத்தில் இருக்கும் கட்டடங்களும், சான்றுகளும் மனித இனம் வளர்ந்த வரலாற்றை எடுத்துரைக்கும் ஆவணங்கள்.
 கடந்த ஆண்டு, தங்களை "இஸ்லாமிய தேசம்' என்று அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஜிகாதிப் படை பால்மைராவைக் கைப்பற்றியபோது உலகமே பதைத்தது. யுனெஸ்கோவால் புராதனமான நகரங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்ட பால்மைரா அழிக்கப்பட்டால் அங்கிருக்கும் ரோமானிய சாம்ராஜ்யத்தின் அடையாளமாக இருக்கின்ற நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு விடுமே என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அவர்களது ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் வகையில் ஐ.எஸ். பயங்கரவாதப் படையினர் பால்மைரா நகரில் இருந்த பல சரித்திரச் சுவடுகளை அழிக்கவும் முற்பட்டனர்.
 பால்மைரா நகரத்திற்கு 4000 ஆண்டு சரித்திரம் உண்டு. கிறிஸ்துவுக்கு முன் பல்வேறு சாம்ராஜ்யங்களிடம் கைமாறிய பால்மைரா கி.பி. முதலாம் நூற்றாண்டு காலத்தில் ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஆசியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றாகவும், ரோமாபுரி, கிரேக்க கலாசாரங்களின் இருப்பிடமாகவும் இருந்த நகரம் இது. மெசபடோமியா நாகரிகத்தின் பகுதியாகவும் இருந்த பெருமை பால்மைராவுக்கு உண்டு.
 மனித இனமே இந்த நேரத்தில் சிரிய அறிஞர் காலித்-அல்-அசாதை நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறது. பால்மைராவில் அகழ்வாராய்ச்சி நடத்தியது மட்டுமல்லாமல் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பல்வேறு சரித்திர எச்சங்களைத் தேடிப்பிடித்து, சுத்தப்படுத்திப் பாதுகாத்த பெருமைக்குரியவர் அந்தப் பெரியவர்தான். பால்மைரா நகரம் பயங்கரவாதப் படையினரின் கைகளில் சிக்கிவிட்டால், மனித குலத்திற்குப் பல சரித்திர, கலாசாரச் சான்றுகளும், தொன்மைத் தடயங்களும் கிடைக்காமல் போய்விடும் என்பதால், அவசர அவசரமாக நான்கு கன்டெய்னர்களில் முக்கியமான பொருள்களையும், சரித்திரத் தடயங்களையும் சிரியாத் தலைநகர் டமாஸ்கஸுக்கு அனுப்பி விட்டிருந்தார் காலித்-அல்-அசாத்.
 கடந்த ஆண்டு மே மாதம் பால்மைராவைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதப் படையினர், 81 வயது காலித்-அல்-அசாதை, எங்கெல்லாம் எஞ்சியிருக்கும் பொருள்களும், சின்னங்களும், சான்றுகளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டு சித்திரவதை செய்திருக்கிறார்கள். அந்தத் தள்ளாத வயதிலும் சித்திரவதைகளைச் சகித்துக் கொண்டு உறுதி தளராமல் போராடிய அந்த முதியவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதப் படையினரால் கொல்லப்பட்டார். இப்போது பால்மைரா நகரம் சிரியாப் படைகள் வசம் மீட்டெடுக்கப்பட்டிருப்பதால் அந்த மனித ரின் ஆன்மா நிச்சயமாக சாந்தி அடைந்திருக்கும் என்று நம்பலாம்.
 இரண்டு முக்கியமான சரித்திரச் சின்னங்களான பெல் ஆலயமும், வெற்றி வளைவும் ஐ.எஸ். படைகளால் தகர்க்கப்பட்டு விட்டன. நல்ல வேளையாக, பயங்கரவாதிகள் அகோரா, ரோமாபுரி அரங்கங்களை அழிக்காமல் விட்டுவிட்டிருக்கிறார்கள். பால்மைரா அருங்காட்சியகத்தில் இருந்த பல நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பல சிலைகளும், பொருள்களும், ஆவணங்களும் பாதுகாக்கப்பட்ட பால்மைரா அருங்காட்சியகத்தின் அடித்தள அறைகள் வெடிமருந்து வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன.
 அகழ்வாய்வு நடத்திய இடங்களிலிருந்தும், புராதனக் கட்டடங்களிலிருந்தும் இதுவரை 150-க்கும் மேற்பட்ட குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பணி தொடர்கிறது.
 பால்மைரா நகரம், சிரியாப் படைகள் வசம் மீண்டும் வந்திருப்பது, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் திருப்புமுனையாக அமையும். ஒருபுறம், அமெரிக்கப் படைகளின் தலைமையிலான கூட்டணிப் படைகளின் தொடர்ந்த விமானத் தாக்குதலும், ஐ.எஸ். போராளிகளின் தலைமையைக் குறிவைத்து செயல்பட்டதும் இந்த வெற்றிக்கு அடித்தளம் இட்டது. இன்னொருபுறம், சிரியா அதிபர் பஷார்-அல்-அஸாதுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியதால், ஐ.எஸ். படைகளுக்கு எதிராக சிரியா ராணுவம் தனது முழுக் கவனத்தையும் செலுத்த முடிந்தது.
 எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷிய அதிபர் புதினின் பங்கைக் குறிப்பிட்டாக வேண்டும். ரஷியப் படைகள் சிரியா ராணுவத்துடன் ஒருங்கிணைந்து வழிநடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதப் படைகளைப் பின்வாங்கச் செய்திருக்கிறது.
 பால்மைரா நகரம் மீட்டெடுக்கப்பட்டதால் எல்லாம் முடிந்துவிடவில்லை. சிரியாவின் கிழக்கு, வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றி இருக்கும் ஐ.எஸ். ஜிகாதிப் படைகளை எதிர்கொண்டு அவர்களது தலைநகரான ராக்கா கைப்பற்றப்பட்டால்தான் முழுமையான வெற்றியாகக் கருதலாம்.
 அதுமட்டுமல்ல, பின்வாங்குவதைத் தாங்கிக் கொள்ள முடியாத, தோல்வியால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாரீஸ், பிரெஸ்ùஸல்ஸ் போன்று உலகின் பல்வேறு நகரங்களை தாக்கத் தொடங்கலாம். வெறிகொண்ட அந்தக் கூட்டத்தை மனிதாபிமானம் கொண்ட மனித நாகரிகம் எதிர்கொண்டு அடக்கியாக வேண்டும். பால்மைரா கைப்பற்றப்பட்டுவிட்டதில் மகிழ்ச்சி. இதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல் தானம்!

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

SCROLL FOR NEXT