தலையங்கம்

மாயத்தோற்றம்!

இந்தியப் பொருளாதாரம் ஓரளவுக்கு சீராகவும், பலமாகவும் இருப்பதற்குக் காரணம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாகக் குறைந்திருப்பதுதான். கச்சா எண்ணெயின் விலைக் குறைவு இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை அந்த விலைக் குறைப்பின் முழுப்பயனும் இந்திய மக்களுக்குத் தரப்படவில்லை என்பது.

ஆசிரியர்

இந்தியப் பொருளாதாரம் ஓரளவுக்கு சீராகவும், பலமாகவும் இருப்பதற்குக் காரணம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாகக் குறைந்திருப்பதுதான். கச்சா எண்ணெயின் விலைக் குறைவு இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை அந்த விலைக் குறைப்பின் முழுப்பயனும் இந்திய மக்களுக்குத் தரப்படவில்லை என்பது.
 கடந்த சனிக்கிழமை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30-ம் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் மகிழ்ச்சி அடைய நமக்கு எதுவும் கிடையாது. பெட்ரோலின் விலை கடந்த மார்ச் மாதம் 17-ஆம் தேதி ரூ.3.07-ம், இந்த மாதம் 4-ஆம் தேதி ரூ.2.19-ம் அதிகரிக்கப்பட்டது. அதில் இப்போது வெறும் 74 காசு குறைக்கப்பட்டிருக்கிறது; அதே போலத்தான் டீசலின் விலையும். கடந்த மூன்று மாதங்களில் டீசலின் விலை நான்கு முறை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக மார்ச் 4-ஆம் தேதி 98 காசுகள் உயர்த்தப்பட்டது. இப்போது, லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டிருக்கிறது.
 கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின்போது, கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்குத் தக்கபடி பெட்ரோல், டீசலின் விலையை அவ்வப்போது நிர்ணயிப்பது என்கிற முடிவு எட்டப்பட்டபோதே, இது தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அது உண்மை என்பதைக் கடந்த ஆண்டுகளில் அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக அதிகரிப்பதும், எப்போதாவது ஒருமுறை கண்துடைப்பாக சிறிய அளவில் விலையைக் குறைப்பதும் நிரூபிக்கின்றன.
 கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முழுப்பயனையும் நுகர்வோருக்கும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் தராமல் அதன் மீதான கலால் வரியை அதிகரித்து மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டது. அதேபோல, எரிவாயு மானியத்திலும் நேரடி வங்கிப் பணப் பரிமாற்றத்தின் மூலம் மானியத்தின் அளவைக் கணிசமாக மத்திய அரசு குறைத்திருக்கிறது. இவையெல்லாம்தான் இந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதற்கான காரணங்கள்.
 இந்தியாவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2014 ஏப்ரல் - டிசம்பர் நிலவரமான 26.2 பில்லியன் டாலரிலிருந்து (ரூ.1,70,300 கோடி) 2015-இல் 22 பில்லியன் டாலராகக் (ரூ.1,43,000 கோடி) குறைந்திருக்கிறது. 2012-13இல் பற்றாக்குறையின் அளவு 88.2 பில்லியன் டாலராக (ரூ.5,72,000 கோடி) இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெயின் விலைச் சரிவு. 2012-13இல் 164 பில்லியன் டாலராக (ரூ.10,66,000 கோடி) இருந்த நமது கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த நிதியாண்டில் 85 பில்லியன் டாலராகக் (ரூ.5,52,500 கோடி) குறைந்திருப்பதற்கு அதுதான் காரணம்.
 ஒருபுறம் நமது கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைந்திருக்கிறது. இன்னொருபுறம், நமது அன்னியச் செலாவணி இருப்பு இதுவரை எட்டாத 356 பில்லியன் டாலர் (ரூ.23,14,000 கோடி) அளவை எட்டி இருக்கிறது. ஆனால், இதற்குப் பின்னால் வெளியில் தெரியாமல் ஒரு பின்னடைவை இந்தியா சந்தித்து வருகிறது. அது குறித்து நமது ஆட்சியாளர்களும், பொருளாதார நிபுணர்களும் கவலைப்பட்டதாகவோ, கவலைப்படுவதாகவோ தெரியவில்லை.
 வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் அயல் நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் பணப் பங்களிப்பு கணிசமாகக் குறைந்துவருகிறது. கடந்த 2015 அக்டோபர் - டிசம்பர் மூன்று மாத காலத்தில் வெறும் 15.3 பில்லியன் டாலர் (ரூ.99,450 கோடி) மட்டுமே அவர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணம்தான் இந்தியா பெறுகின்ற மென்பொருளுக்கு அடுத்தபடியான அன்னியச் செலாவணி. 2014-15இல் மென்பொருள் சேவை மூலம் 70.4 பில்லியன் டாலர் (ரூ. 4,57,600 கோடி) கிடைத்தது என்றால், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பித்தந்த தொகை 66.3 பில்லியன் டாலர் (ரூ.4,30,950 கோடி).
 தற்போது ஏறத்தாழ ஒன்றரைக் கோடி இந்தியர்கள் அன்னிய நாடுகளில் வேலை செய்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளிலும், மேற்காசியாவிலும், வட ஆப்பிரிக்க நாடுகளிலும்தான் பணிபுரிகிறார்கள். கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி, அந்த நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. அதை எதிர்கொள்ள அந்த நாடுகள் வேலைக் குறைப்பில் இறங்கிவிட்டன.
 சவுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் 11.5 சதவீதம் என்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் பத்து லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து நாடு திரும்பக்கூடும். இதேபோன்ற பொருளாதார நெருக்கடி ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஏமன், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, லட்சக்கணக்கானோர் வேலையிழந்து இந்தியாவுக்குத் திரும்பும் ஆபத்து காத்திருக்கிறது.
 நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு வேலைவாய்ப்பையும் உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கில் அறிவித்திருக்கும் பல்வேறு திட்டங்கள் இன்னும் செயல்படவோ பயனளிக்கவோ தொடங்கவில்லை. கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக் குறைவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வலிமையை மட்டுமே நாம் நம்பியிருக்க முடியாது. ஏற்றுமதியில் கணிசமான முன்னேற்றம் ஏற்படாதவரை இந்தியப் பொருளாதாரத்தை வலிமையானது என்று கருத முடியாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT