தலையங்கம்

தேவையா இந்த சர்ச்சை?

பிரிட்டீஷ் ராஜகுடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை இப்போது மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது,

ஆசிரியர்

பிரிட்டீஷ் ராஜகுடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை இப்போது மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர், கோஹினூர் வைரம் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் துலிப் சிங்கால் விக்டோரியா மகாராணிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு விட்டதால், அதை நாம் திரும்பிப் பெற முடியாது என்று நிலைமையைத் தெளிவுபடுத்தினார். இப்போதைய சர்ச்சைக்கு அரசுத் தரப்பு வழக்குரைஞரின் இந்த நிலைப்பாடுதான் காரணமாகி இருக்கிறது.

ஏறத்தாழ 13-ஆம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலம், குண்டூர் அருகில் தோண்டி எடுக்கப்பட்ட கோஹினூர் என்கிற அந்த வைரம் அளவில் பெரியது. பட்டை தீட்டப்படுவதற்கு முன்னால்

793 கேரட் (158.6 கிராம்) எடையுள்ள அந்த வைரம் காகத்திய அரசு குடும்பத்தினரிடம் இருந்தது. அங்கிருந்து பல கைகள் மாறி, 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டீஷ் ராஜகுடும்பத்தை வந்தடைந்தது.

1852-இல் அன்றைய விக்டோரியா மகாராணியாரின் கணவர் ஆல்பர்ட் கோமகனின் உத்தரவுப்படி, கோஹினூர் வைரம் பட்டை தீட்டப்பட்டு 105.6 கேரட் (21.12 கிராம்) வைரமாக மாற்றப்பட்டது. அதை ஆண்கள் அணிந்தால் துரதிருஷ்டம் வரும் என்பதால், பெண்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கருதினார்கள். அதனால், கோஹினூர் வைரம் பிரிட்டீஷ் நாட்டின் எலிசபெத் மகாராணியாரின் கிரீடத்தின் முன்பகுதியில் பதிக்கப்பட்டது. பிரிட்டீஷ் ராஜகுடும்பத்தின் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு "லண்டன் கோபுரம்' என்கிற காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் கோஹினூர் வைரம் பதித்த கிரீடமும் அடங்கும்.

கோஹினூர் வைரம் பிரிட்டீஷ் ராஜகுடும்பத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பது உண்மையல்ல. மகாராஜா ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்து பஞ்சாபைத் தன் கைவசப்படுத்தியபோது, பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அன்றைய வைஸ்ராயாக இருந்த டல்ஹெளசி பிரபுவால், கடைசி லாகூர் ஒப்பந்தப்படி வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டதுதான் கோஹினூர் வைரம்.

சிறுவனாக இருந்த ரஞ்சித் சிங்கின் மகன் துலிப் சிங்கைத் தனது பராமரிப்பில் எடுத்துக்கொண்ட டல்ஹெளசி பிரபு, வைரத்துடன் அந்தச் சிறுவனை லண்டனுக்குக் கப்பலில் அழைத்துச் சென்றார். தனக்கு ராஜகுடும்பத்தின் பாராட்டும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக துலிப் சிங்கை அன்றைய விக்டோரியா மகாராணியின் கால்களில் விழவைத்து, கோஹினூர் வைரத்தைப் பரிசாக அளிக்க வைத்தார். கோஹினூர் பிரிட்டீஷாரால் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டதே தவிர, பரிசாகவோ, அன்பளிப்பாகவோ பெறப்பட்டது என்பது தவறு.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஆக்கிரமிப்பாகவோ காலனியாகவோ கைப்பற்றிய நாட்டிலிருந்து பெறப்பட்ட கலைப்பொருள்கள் அனைத்தும் அந்தந்த நாட்டுக்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டிருக்கிறது. அதன்படி, பிரிட்டீஷார் அவர்களாகவே கோஹினூரைத் திருப்பித் தருவதுதான் சரி. ஆனால், பிரிட்டன் ஒரு கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாபை ஆண்ட ரஞ்சித் சிங்கின் தலைநகராக இருந்த லாகூர் இப்போது பாகிஸ்தான் வசம் உள்ளது.

அப்படியானால் கோஹினூர் வைரம் இந்தியாவுக்குச் சொந்தமா, பாகிஸ்தானுக்குச் சொந்தமா என்பதுதான் அது.

2013-இல் தனது இந்திய விஜயத்தின்போது பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் கேட்டபோது, பழைய பிரச்னைகளையெல்லாம் தோண்ட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். கோஹினூர் திருப்பி அளிக்கப்படுமானால், லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு பிரிட்டீஷ் காலனிகளிலிருந்து பெறப்பட்ட கலைப் பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டிவரும். அப்படிச் செய்தால் அங்கே வேறு எதுவும் மிஞ்சி இருக்காது என்பது அவருக்குத் தெரியும்.

லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில், டன் கணக்கான இந்தியக் கலைப் பொருள்களும், ஓலைச்சுவடிகளும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விலைமதிப்பில்லாத வைர, வைடூரியக் கற்களும் குவிந்து கிடக்கின்றன. அதில் இருக்கும் ஆவணங்கள் என்னென்ன, கலைப்பொருள்கள் எவையெவை என்பது குறித்து நமக்கு ஒன்றும் தெரியாது. அதை வெளிப்படுத்தவும் அவர்கள் தயாராக இல்லை; நாமும் முயற்சி எடுக்கவில்லை.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம், இங்கேயிருந்து தப்பிஓடிய விஜய்மல்லையா போன்றவர்கள் என்று நாம் திருப்பிக் கொணர வேண்டியவை எவ்வளவோ இருக்க, கோஹினூர் வைரத்தை நமது பழம் பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதற்காகத் திருப்பிக்கொண்டு வருவதில் நேரத்தைச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி.

நமது அருங்காட்சியகங்களும், புராதனச் சின்னங்களும் இருக்கும் நிலைமையும், அவற்றை நாம் பராமரிக்கும் விதமும் கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது. ஒன்றுமில்லாவிட்டாலும், பிரிட்டீஷ்காரர்கள் நமது கோஹினூர் வைரத்தை மிகவும் பத்திரமாகவும், முறையான பராமரிப்புடனும் பாதுகாக்கிறார்கள். அதை இங்கே கொண்டுவந்து பத்திரப்படுத்துவதால் நமக்கு என்ன லாபம்?

கோஹினூர் வைரம் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் காலம், பிரிட்டீஷார் நம்மை அடிமைப்படுத்தினார்கள் என்கிற சிறுமை பறைசாற்றப்

படுமே என்கிறார்கள். இந்தியாவை அடிமைப்படுத்தி, அதன் விலையுயர்ந்த பொருள்களை சூறையாடிக் கொள்ளையடித்தவர்கள் பிரிட்டீஷார் என்பதையும்தானே அது பறைசாற்றும். அப்படி ஏன் யோசிக்கக் கூடாது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT