முகப்பு
தலையங்கம்

புயலுக்குப் பின்னே...

சென்னையையும், அதனருகிலுள்ள கடலோரப் பகுதிகளையும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது வர்தா புயல். கடந்த ஆண்டு பெய்த அடைமழையால் பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு,

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:56 PM
பகிர்:

சென்னையையும், அதனருகிலுள்ள கடலோரப் பகுதிகளையும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது வர்தா புயல். கடந்த ஆண்டு பெய்த அடைமழையால் பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, தங்கள் உடைமைகளை இழந்தார்கள் என்றால், இந்த ஆண்டு வீசிய புயல் காற்றில் கணக்கிலடங்காத பொதுச் சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன.
வர்தா புயல் விளைவித்த சேதம் கொஞ்சநஞ்சமல்ல. தொடர்ந்து பல மணி நேரம் வீசிய புயல் காற்றில் சாய்ந்து விழுந்த மரங்கள் ஆயிரக்கணக்கில். மின்சாரக் கம்பங்கள் நூற்றுக்கணக்கில். தொலைபேசி வயர்கள் அறுந்து விழுந்ததாலும் செல்லிடப் பேசி கோபுரங்கள் சாய்ந்ததாலும் ஏற்பட்ட சேதங்கள் ஏராளம்.
சென்னையைப் புயல் தாக்குவது என்பது புதிதொன்றுமல்ல. கடந்த நூற்றாண்டில் 262 முறை சென்னையைப் புயல் தாக்கியிருக்கிறது. அதில் 92 முறை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இயற்கைப் பேரிடர் என்பது உலகம் தோன்றிய நாள் முதல் மனிதன் எதிர்கொள்வதுதான் என்றாலும், இப்போது அதனால் ஏற்படும் இழப்பு மிக மிக அதிகம். நகரம் வளர்ச்சி அடைய அடைய, இதுபோன்ற பேரிடர்களால் ஏற்படும் இழப்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். அதற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்வதுதான், இதை எதிர்கொள்ள ஒரே வழி.
வர்தா புயலையே எடுத்துக்கொண்டால், சென்னையில் இரண்டு நாள்கள் தொடர்ந்து மின்சாரம் இல்லை. இன்னும்கூடச் சில பகுதிகளில் மின்சாரம் இல்லாமல்தான் இருக்கிறது. சில இடங்களில் மின்மாற்றிகளே (ட்ரான்ஸ்பார்மர்) புயலின் சீற்றத்தால் சாய்க்கப்பட்டிருப்பதால், அங்கெல்லாம் சீரமைப்பு சற்று தாமதமாகிறது. பல சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. செல்லிடப் பேசி கோபுரங்கள் வேலை செய்யாமல் இருந்தன. குடிதண்ணீருக்குக்கூடத் தட்டுப்பாடு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதால், மின் கம்பங்கள் சாய்ந்ததால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்ள முடிந்தது. இல்லையென்றால், மின்சாரம் தாக்கிப் பலர் மரணமடைந்திருக்கக் கூடும்.
இத்தனை பிரச்னைகளையும் புயல்வீசி முடிந்த 48 மணி நேரத்தில் சரி செய்ய முடிந்ததற்காகத் தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும், காவல்துறையினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். புயலில் மரங்கள் விழக்கூடும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்து, புயலுக்குப் பின்னால் சாலைகளிலிருந்து மரங்களை அகற்றும் பணியைப் போர்க்கால அடிப்படையில் செய்ததைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
கடந்த ஆண்டு வெள்ளத்தைப்போல அல்லாமல், சென்னையைப் புயல் தாக்கப் போகிறது என்கிற முன்னெச்சரிக்கை இருந்ததால் முன்னேற்பாடுகளைச் செய்ய முடிந்தது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், மழையை எதிர்கொள்ளத் தயாராக இருந்த நிர்வாகம், இப்படிப்பட்ட பேய்க் காற்றை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இந்த அளவுக்கு மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அப்படி இருந்தும், சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் சீர் செய்யப்பட்டு, செல்லிடப்பேசி உள்ளிட்ட தகவல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டது, நிர்வாகத்தின் சுறுசுறுப்பையே வெளிப்படுத்துகிறது.
அதேநேரத்தில், கடந்த ஆண்டு வெள்ளத்திலிருந்து நாம் எந்த பாடமும் படிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். இன்னும்கூட சென்னையிலுள்ள எல்லா கால்வாய்களும் முழுமையாகத் தூர் வாரப்படாமல், செடி கொடிகள் மண்டித்தான் காணப்படுகின்றன. மழைநீர், கழிவுநீர் குழாய்கள், பாதாளச் சாக்கடைகள் முழுமையாக சீர் செய்யப்படவில்லை. வர்தா புயலுடன் அடை மழையும் சேர்ந்து கொண்டிருந்தால், கடந்த ஆண்டைவிட மிகப்பெரிய பாதிப்பை சென்னையும் சுற்றுப்புற மாவட்டங்களும் சந்தித்திருக்கும். இனியாவது அரசும், மாநகராட்சி நிர்வாகமும் விழித்துக்கொண்டு, கழிவுநீர் பாதைகளை சுத்தப்படுத்தினால் நல்லது.
வர்தா புயலினால் சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்திருக்கின்றன. ஏற்கெனவே அடுக்குமாடிக் குடியிருப்புகளால் கான்கிரீட் காடாக மாறியிருக்கும் சென்னை மாநகரத்தின் காற்று மாசு பாதிப்பை ஓரளவு குறைத்துக் கொண்டிருந்த மரங்களும் வீழ்ந்து விட்டிருக்கும் அவலம் மிகப்பெரிய சோகம். எத்தனை மரங்களை நட்டாலும் அவை வளர்ந்து பெரிதாவதற்கு குறைந்தது இன்னும் 10 ஆண்டுகளாவது ஆகும். அந்த இழப்பை எப்படி ஈடுகட்டப் போகிறோம்?
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒரு வேண்டுகோள். சென்னை மாநகரத்திலும் சுற்றுப்புறங்களிலும் இழந்த மரங்களுக்கு பதிலாகப் புதிய மரங்களை நடுவதற்கு ஒரு திட்டத்தை அவர் அறிவித்தாக வேண்டும். காற்றடித்தால் வீழ்ந்துவிடும் தூங்குமூஞ்சி மரங்களாக இல்லாமல், பாரம்பரிய மரங்களான பயன்தரும் மா, புளி, வேம்பு, மகிழ, புங்க மரக் கன்றுகள் அதிக அளவில் அரசால் விநியோகம் செய்யப்பட வேண்டும். இந்த முயற்சியில் தன்னார்வ அமைப்புகளை இணைத்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே, மரங்கள் நடுகின்ற திட்டம் வெற்றி அடையும். மரங்களை நட்டால் மட்டும் போதாது. அவை முறையாக பராமரிக்கப்பட்டு வளர்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பல மணி நேரப் புயலின் உடனடி பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம். ஆனால், பல்லாயிரம் மரங்களை வேறோடு சாய்த்திருக்கிறதே, அந்த இழப்பை ஈடுகட்டாமல் போனால், அது நிரந்தர பாதிப்பாகத் தொடரும். குறைந்தது ஒரு லட்சம் மரங்களையாவது நட்டு வளர்த்தால்தான் வர்தா புயலால் ஏற்பட்ட பேரழிவை ஓரளவு ஈடுகட்ட முடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.