அரசின் உயர் நிர்வாகப் பதவிகளில் இணக்கமான, தங்களது கருத்தைப் புரிந்து கொள்கிற, தங்களது செயல்திட்டத்தை நிறைவேற்றித் தருகிற அதிகாரிகளை நியமிப்பது என்பது எந்தவொரு ஆட்சியாளரும் விரும்புவது. இதில் தவறு காண முடியாது.
பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே தலைமைப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது சரியல்ல. துறை சார்ந்த செயலாளர்களேகூட, அமைச்சருடன் ஒத்துப் போகாதவராக இருந்தால் அதனால் பாதிக்கப்படுவது நிர்வாகம்தான். என்னதான் இருந்தாலும், ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமையும், அதிகாரமும் என்பதுதான் நடைமுறை.
மத்திய அரசின் சில முக்கியமான நியமனங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பது வருத்தத்திற்குரியது. திறமை, அனுபவம், நேர்மை ஆகிய மூன்றும் மீறப்படாத வரையில் இந்த நியமனங்கள் குறித்து விமர்சனம் செய்வது என்பது தவறு. அதிலும் குறிப்பாக, இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி லெஃப்டினனட் ஜெனரல் விபின் ராவத்தின் நியமனம் குறித்து சிலர் கருத்துத் தெரிவித்திருப்பது அவர்களது தவறான புரிதலையும் பொறுப்பின்மையையும்தான் காட்டுகிறது.
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக, அவரைவிடப் பதவி மூப்புள்ள இரண்டு அதிகாரிகளைப் பின்னுக்குத் தள்ளி, லெப். ஜெனரல் விபின் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி பதவி மூப்புப்படி நியமனம் நடைபெறாததுதான் விமர்சனங்கள் எழுப்பப்படுவதற்கான காரணம். இந்த நியமனத்திற்கு என்ன காரணங்கள் இருந்தாலும், அடிப்படையான ஓர் உண்மையை நாம் உணர வேண்டும். ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது பிரதமரின் தனி உரிமை. அரசியல் சாசனம் அந்த அதிகாரத்தை அவருக்கு அளித்திருக்கிறது.
இப்படி பதவி மூப்பைப் புறந்தள்ளித் தலைமைத் தளபதியை நியமிப்பது என்பதொன்றும் புதிதல்ல. 1983-இல் லெப். ஜெனரல் எஸ்.கே. சின்ஹா நியமிக்கப்படாமல், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த லெப். ஜெனரல் ஏ.எஸ். வைத்யா தலைமை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்குப் பின்னால் அரசியல் காரணங்களும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டத்தையும், அன்றைய ஜனதா கட்சி அரசையும் ஆதரித்து லெப். ஜெனரல் எஸ்.கே. சின்ஹா சில அறிக்கைகள் வெளியிட்டதும், அவர் ஓரிரு முறை ஜெயப்பிரகாஷ் நாராயணனை சந்தித்ததும், 1980-இல் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காந்திக்கு அவர்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. தனது முழு நம்பிக்கையையும் பெறாத ஒருவரைத் தலைமை ராணுவத் தளபதியாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நியமிக்க விரும்பாததில் எப்படித் தவறு காண முடியும்?
லெப். ஜெனரல் ராவத் இப்போது நியமிக்கப்பட்டிருப்பதற்கு அதுபோல அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. அவரால் பின்தள்ளப்பட்ட ராணுவ அதிகாரிகள் மீது எந்தவிதக் குற்றச்சாட்டும் கிடையாது. லெப். ஜெனரல் ராவத்தின் நியமனத்திற்குக் காரணம் ஊடுருவலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அவருக்கு உள்ள நேரடி அனுபவமும், பாகிஸ்தானிய எல்லைப் புறத்திலுள்ள ராணுவத்தை வழிநடத்திச் சென்ற அனுபவமும் இருக்கிறது என்பதுதான். காலாட் படையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், ராணுவத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்கிற வழக்கம் இதன்மூலம் மீண்டும் நிலைநாட்டப் பட்டிருக்கிறது.
புலனாய்வுத் துறையின் இயக்குநராக ராஜீவ் ஜெயின், "ரா' அமைப்பின் இயக்குநராக அனில் தஸ்மானா, விமானப் படையின் தலைமைப் பொறுப்பில் பி.எஸ். தனோவா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ராணுவத் தளபதி பதவிக்குப் பதவி மூப்பு மீறப்பட்டிருக்கிறதே தவிர, புலனாய்வுத் துறை (ஐ.பி.), "ரா' ஒற்றர் பிரிவு, விமானப் படையின் தலைமைப் பதவி ஆகியவற்றிற்கு வழக்கம்போலப் பதவி மூப்பு அடிப்படையில்தான் நியமனங்கள் நடத்தப்பட்டிருக்கிறன. அந்த நியமனங்கள் அதனால் விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை.
விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் இன்னொரு நியமனம் மத்தியப் புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) இயக்குநர் பதவி. இந்த மாத முதல் வாரத்தில் சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அனில் சின்ஹா பதவி ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு பதிலாக வேறொருவரை நியமிக்காமல், ராகேஷ் அஸ்தானாவை தாற்காலிக இயக்குநராக அரசு நியமித்திருக்கிறது. இந்தப் பதவிக்கான நியமனம் பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் கொண்ட குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தைக் கூட்ட வசதியான தேதி அமையவில்லை என்கிற அரசின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
நரேந்திர மோடி அரசு, உயர் பதவி நியமனங்களைக் கையாளும் முறையில் ஒரு குறை காணப்படுகிறது. பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே, அடுத்ததாக அந்தப் பதவிக்கு யாரை நியமனம் செய்வது என்பது முடிவெடுக்கப்பட்டு, அறிவிக்கப்படுவதுதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட வழக்கம். இதை மோடி அரசு பின்பற்றாமல் இருப்பதுதான் விவாதங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுக்கிறது.
உயர் பதவி நியமனங்களில் பிரதமரின் விருப்பம்தான் இறுதியானது என்பதில் சந்தேகமில்லை. உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையும் அதுதான். அதேநேரத்தில் காலதாமதமில்லாமல் தலைமைப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் நடைபெற வேண்டும் என்பதையும் பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.