கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. மணிப்பூரை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் 2-ம், 37-ம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. ஐக்கிய நாகா கவுன்சில் விதித்திருக்கும் பொருளாதாரத் தடையால், மணிப்பூர் தலைநகர் இம்பால் மட்டுமல்லாமல் தெளபால், விஷ்ணுபூர், உக்ருல், சண்டேல், தாமெங்லாங், சுராசந்த்பூர் ஆகிய பகுதி
களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்திருக்கிறது. ஏற்கெனவே செலாவணியை செல்லாததாக்கிய முடிவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
பொருளாதாரத் தடையின் காரணமாக மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் சொல்லி மாளாது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.300-க்கும் அதிகம். அப்படியே கொடுக்க முற்பட்டாலும்கூட தேவையான பெட்ரோல் கிடையாது. சமையல் எரிவாயு உருளைகள் கள்ளச் சந்தையில் ரூ.3,000-க்கும் அதிகமாக விற்கப்படுகின்றன. பொருளாதாரத் தடையை விதித்துப் போக்குவரத்தை முற்றிலுமாகத் துண்டித்திருக்கும் போராட்டக்காரர்களே, மற்றொருபுறம் கள்ளச் சந்தையில் பொருள்களையும் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அவலம் அங்கே நடைபெறுகிறது.
இத்தனை நடக்கிறது. ஆனால், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இது குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை; கவலையும் இல்லை. நமது ஊடகங்களும் இதற்கு முன்னுரிமை அளித்து செய்தி வெளியிடுவதில்லை. அதனால்தான், அந்த மாநில மக்களும் நம்மை அந்நியர்களாகவே நினைத்துப் பழகுகிறார்கள். தங்களை இந்தியர்களாக ஏற்க மறுக்கிறார்கள்.
இந்தப் பிரச்னை கடந்த அக்டோபர் மாதமே ஆரம்பமாகிவிட்டது. இம்பால் கிழக்கு மாவட்டத்திலிருந்து ஜிரிபாம் பகுதியையும், சேனாபதி மாவட்டத்திலிருந்து கங்க்போக்பி பகுதியையும் பிரித்து இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க முற்பட்டது முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்த முடிவை ஐக்கிய நாகா கவுன்சில் வன்மையாகக் கண்டித்தது. முதல்வர் தங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியது.
மணிப்பூர், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள நாகர்கள் அதிகம் வாழும் பகுதிகளையும் தற்போதைய நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்று ஐக்கிய நாகா கவுன்சில் நீண்ட நாட்களாகவே போராடி வருகிறது. அப்படி இருக்க, மணிப்பூரில் நாகர்கள் வாழும் பகுதிகளை இரண்டாகப் பிரித்துப் புதிய மாவட்டங்களை உருவாக்குவது, தங்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காகவே என்பது அவர்களது குற்றச்சாட்டு.
நாகர்களின் எதிர்ப்புக்கு எதிர்வினையாக மணிப்புரி இனத்தவர்கள் சிலர் களமிறங்கி இருக்கின்றனர். அவர்கள் நாகர்கள் அதிகமாக வாழும் பகுதிகள்மீது பொருளாதாரத் தடை விதித்து அங்கே எந்தவொரு பொருளும் செல்லாதபடி தடுக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான போட்டியில், ஆங்காங்கே கலவரம் வெடிப்பதும், பொதுச் சொத்துகள் சேதமாவதும், வாகனங்கள் தீக்கிரையாவதும் தொடர்கின்றன.
மணிப்பூர் மாநிலத்துக்கு பொருளாதாரத் தடை புதிதல்ல. 2011-இல் ஏறத்தாழ மூன்று மாத காலத்திற்கு பொருளாதாரத் தடையை மணிப்பூர் எதிர்கொண்டது. கடந்த சில ஆண்டுகளாகவே பிற மாநிலத்தவர் மணிப்பூரில் இருப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என்று உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாநில சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மணிப்பூர் மக்கள் பாதுகாப்புச் சட்டம், மணிப்பூர் நிலவரி, நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் ஏழாவது திருத்தம், மணிப்பூர் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் இரண்டாவது திருத்தம் ஆகியவை கடுமையான எதிர்ப்புக்கு இடையில்தான் நிறைவேற்றப்பட்டன.
மேலே குறிப்பிட்ட சட்டங்கள் அனைத்துமே, மணிப்பூர் வாசிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க கொண்டு வரப்பட்டவை என்றாலும்கூட, அதற்கு எதிர்ப்பும் கடுமையாக இருக்கிறது. இந்தச் சட்டங்கள் அனைத்துமே கண்துடைப்புச் சட்டங்கள் என்றும், மறைமுகமாக ஆதிவாசிகளின் நிலங்களையும், உரிமைகளையும் பறிப்பதற்கு அரசு போடும் திட்டங்கள் எனவும் நிராகரிக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பாக நடந்த போராட்டங்களில் இறந்த ஒன்பது பேரின் உடல்களை யாரும் ஏற்றுக்கொள்ளாததால் இப்போதுவரை பிணவறையில் பாதுகாக்கப்படுகின்றன.
இந்தப் பின்னணியில்தான் இபோபி சிங் அரசால் மாவட்டங்களைப் பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், உள்ளூர்வாசிகளின் ஆதரவைப் பெறும் நோக்கில்தான் முதல்வர் இபோபி சிங் செயல்பட்டிருக்கிறார் என்கிறார்கள். இது நிர்வாக வசதிக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று முதல்வர் கூறினாலும் அதை யாரும் ஏற்க தயாராக இல்லை.
காங்கிரஸ் அரசுதான் அரசியல் ஆதாயத்திற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறது என்றால் பா.ஜ.க.வும் பொருளாதாரத் தடையால் அரசுக்கு ஏற்படும் கெட்ட பெயரைத் தேர்தலில் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது. அதனால் மெளனம் காத்து, பொருளாதாரத் தடை தொடர அனுமதிக்கிறது. இதற்கிடையில் சிக்கித் தவிப்பது என்னவோ சாதாரண பொதுமக்கள்தான்!
இந்தியாவின் எந்தவொரு பகுதியில் பொருளாதாரத் தடையோ குழப்பமோ ஏற்பட்டாலும் அதனால் பலவீனமடைவது இந்தியாவின் ஒற்றுமை என்பதை நமது அரசியல் கட்சிகள் உணர வேண்டும். போராடலாம் தவறில்லை. ஆனால், பொருளாதாரத் தடை ஏற்புடையதல்ல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.