தலையங்கம்

அணுகுமுறை புதிது!

இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் 71 வயது பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். 1970-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து முறை சட்டப்

ஆசிரியர்

இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் 71 வயது பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். 1970-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து முறை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர். இதற்கு முன்னால் 1996-இல் ஈ.கே. நாயனாரின் அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராகத் திறமையுடன் பணியாற்றிப் பாராட்டைப் பெற்றவர்.

கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு சாதாரணக் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவர், மாநிலத்தின் முதல்வராக முடிந்திருக்கிறது என்பதே இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு பினராயி விஜயன் நடந்துகொள்ளும் விதமும், வெளியிடும் அறிக்கைகளும் அவரை ஏனைய அரசியல் தலைவர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. தான் அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருப்பேன் என்றும், தனது அமைச்சரவை அரசியல் மனமாச்சரியங்களை மறந்து அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செயல்படும் என்பதும், பதவி ஏற்கும் எல்லா முதல்வர்களும் கூறும் சம்பிரதாயமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால், முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது அதன் முக்கியத்துவமே வேறு.

கடந்த சில ஆண்டுகளாகவே கேரளத்தில் பா.ஜ.க.வினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல படுகொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. இதுவரை இல்லாத அளவு ஏறத்தாழ 16% வாக்குகளை பா.ஜ.க. சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றிருப்பதும், முதல் முறையாக ஒரு பா.ஜ.க. உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் அதிகரிக்கக் காரணமாகி விடக்கூடாது என்கிற அச்சம் பரவலாகவே இருக்கிறது. அந்த சூழலில் முதல்வரின் அறிக்கை ஆறுதல் அளிக்கிறது.

அதேபோல, முல்லைப் பெரியாறு விவகாரத்திலும், முந்தைய அச்சுதானந்தன், உம்மன் சாண்டி அரசுகளைப் போலல்லாமல், முதல்வர் பினராயி விஜயனின் அணுகுமுறை, ஆக்கப்பூர்வமானதாகத் தெரிகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி இன்னொரு அணையைக் கட்டுவது, இப்போதிருக்கும் அணையின் உயரத்தைக் குறைக்கச் சொல்வது போன்ற அடாவடி நடவடிக்கைகளுக்கு அவர் தயாராக இல்லை என்பதே ஒரு மிகப்பெரிய ஆறுதல். இதைச் சொன்னதற்கே, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தொடங்கி அவரது இடதுசாரிக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது, தரம்தாழ்ந்த அரசியல்.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்ள இருக்கிறது. கேரளப் பொருளாதாரம், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் மலையாளிகள் அனுப்பும் பணத்தை மிக அதிகமாக சார்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்திருப்பதால், அங்கிருந்தான வரவு குறைந்து வருகிறது. விரைவிலேயே ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்ப வேண்டிய நிலைமையும் ஏற்படக்கூடும்.

வெளிநாடு வாழ் மலையாளிகள் அனுப்பும் அன்னியச் செலா

வணியைப் போலவே, கேரளத்தின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிப்பவை பணப்பயிர்களான ரப்பர், தேங்காய், மிளகு, மலையில் விளையும் கிராம்பு, ஜாதிக்காய் போன்றவை. இவற்றின் விலையும் சரிந்திருக்கும் நிலையில், கேரளப் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிப் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் முதல்வர் பினராயி விஜயனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தென்னிந்திய மாநிலங்களிலேயே மிக மோசமான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட மாநிலம் கேரளம்தான். இன்னும் இந்தியா முழுவதும் நிறைவேற்றப்படும் தங்க நாற்கரச் சாலை கேரளத்தில் போடப்படவில்லை. காரணம், நிலம் கையகப்படுத்த முடியாத நிலைமை. கூடங்குளம் மின்சாரத்தைக் கேரளம் பயன்படுத்திக்கொள்ளவில்லை. காரணம், யாரும் தங்கள் வீடு அல்லது நிலத்தின் வழியாக அதிக சக்தியுள்ள மின்கம்பிகள் செல்வதை விரும்பாதது. இப்படி வளர்ச்சிப் பணிகளுக்கு, அங்குள்ள மக்களே முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில், முதல்வர் விஜயன் மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான சி.ஐ.டி.யு.வும், ஏனைய தொழிற்சங்கங்களும்தான், அன்னிய முதலீட்டுக்கு மட்டுமல்ல, உள்நாட்டு முதலீடுகளுக்கே மிகப்பெரிய தடையாக இருக்கிறார்கள். தொழில் துறை வளர்ச்சியே தனது முதல் கவனமாக இருக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தாலும்கூட, அதை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய தடைகளை அவர் உடைத்தெறிய வேண்டியதிருக்கும். பினராயி விஜயன் தனது கட்சியினரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகும் ஆபத்தையும் அது உருவாக்கக்கூடும்.

ஏற்கெனவே தனியார் பங்களிப்பால் சுறுசுறுப்பாக இருக்கும் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த முடியும். தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி குறித்து "இன்போசிஸ்' நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் முதல்வர். முதலீடுகளை ஈர்ப்

பதும் தொழில் வளத்தைப் பெருக்குவதும் தனது இலக்கு என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

வேலைவாய்ப்புக்காக உலகமெல்லாம் செல்லும் மலையாளி இளைஞர்கள் தங்கள் மண்ணிலேயே வேலைவாய்ப்புப் பெறும் அளவில் கேரளத்தைத் தொழில்துறையில் முன்னேற்ற முதல்வர் பினராயி விஜயன் எடுத்திருக்கும் முயற்சிக்கு நமது வாழ்த்துகள். முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்துடன் ஒத்துழைக்க முன்வந்திருக்கும் அவரது அணுகுமுறைக்கு நமது பாராட்டுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT