தலையங்கம்

அரசுக்கு எதிரான சவால்!

இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டும்கூட, ஊடகவியலாளர்களும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களும், இடித்துரைப்பாளர்களும் தொடர்ந்து நெருக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள்.

ஆசிரியர்

இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டும்கூட, ஊடகவியலாளர்களும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களும், இடித்துரைப்பாளர்களும் தொடர்ந்து நெருக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை நகரில், மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் பாரஸ்மல் என்கிற இடித்துரைப்பாளர் பட்டப்பகலில் கூலிப்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்.

பாரஸ்மல் என்பவர் இயல்பாகவே தவறுகளைத் தட்டிக் கேட்பவர். நில, இடப் பரிமாற்றத் தரகர்கள், குண்டர்களின் உதவியோடு நில அபகரிப்பு, அப்பாவிகளை பயமுறுத்தி அல்லது ஏமாற்றி அவர்களது வீடுகளை விலைக்கு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிப்பது, வழக்குத் தொடர்வது என்று சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். பல அடாவடி நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பவர்.

கடந்த 2013 முதல் மூன்று முறை இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அப்படி இருந்தும் அவர் ஏன் காவல் துறையிடம் புகார் எதுவும் தரவில்லை, எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் நடமாடி வந்தார் என்பது புதிராகத்தான் இருக்கிறது. இருந்தாலும்கூட, ஒருவர் பட்டப்பகலில் ரெüடிகளால் நடுத்தெருவில் வெட்டிக் கொல்லப்படுகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் "ரியல் எஸ்டேட்' தரகர்கள் என்கிற பெயரில் சமூக விரோதக் கும்பல்கள் அடியாள்களின் உதவியுடன் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்த இட, நிலப் பரிமாற்றத் தரகர்களுக்கு, உள்ளூர் அரசியல்வாதிகளும், காவல் துறையினரும் துணை நிற்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய அவலம். சமீபத்தில், பிகார் மாநிலத்தில் "இந்துஸ்தான்' இந்தி நாளிதழின் சிவான் பதிப்பின் தலைமை நிருபர் ராஜ்தேவ் ரஞ்சன் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டதன் பின்னணியிலும் இட, நிலப் பரிமாற்றத் தரகர்களின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தவறுகளைத் தட்டிக் கேட்கும் அதிகாரிகளின் நிலையும் மிகவும் வேதனை தருவதாக உள்ளது. ஹரியாணா மாநிலத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் நிலமோசடி விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா தனது 23 ஆண்டு பதவிக் காலத்தில் 45 முறை இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரின் உறுதிமொழியையும் மீறி, ராணுவ ஆராய்ச்சி, உருவாக்க நிறுவனத்தைச் (டி.ஆர்.டி.ஓ.) சேர்ந்த இடித்துரைப்பாளரான மூத்த நிர்வாக அதிகாரி பிரகாஷ் சிங், மேலதிகாரிகளால் பந்தாடப்படுகிறார்.

சமூக விரோதிகளையும் ஆட்சியாளர்களின் அதிகாரிகளின் தவறுகளையும் வெளிச்சம்போடும் இடித்துரைப்பாளர்கள் 166 பேர் கடந்த ஆறு ஆண்டுகளில் தாக்கப்பட்டு, நெருக்கடி தரப்பட்டு, கடத்தப்பட்டு, சமூக விரோதிகளால் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்களில் 27 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

"எல்லைகள் நீத்த எழுத்தாளர்கள்' என்கிற சர்வதேச அமைப்பு 2015-இல் நடத்திய ஆய்வின் முடிவுப்படி, ஆசியாவிலேயே பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடு இந்தியா என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும்கூட நம்மைவிட அதிகமான பாதுகாப்பு பத்திரிகையாளர்களுக்குத் தரப்படுகிறது என்கிற அந்த ஆய்வு கடந்த ஓராண்டில் மட்டும் ஒன்பது பத்திரிகையாளர்கள், தவறுகளை வெளிச்சம்போட்டுக் காட்டியதற்காக இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவலைத் தருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் 84 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கொலைகள் தொடர்பான விசாரணைகள் அனைத்திலுமே இதுவரை எந்தவொரு வழக்கிலும் யாரும் தண்டனை பெறவில்லை என்பதுதான் வியப்பான திருப்பம். முறையாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தரவேண்டிய காவல் துறை, அந்தக் கொலைகளுக்கு ஏதாவது திசைதிருப்பல் காரணத்தைக் கூறி, குற்றவாளி

களைத் தப்பிக்க விடுவதுதான், தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கு, கொலையாளிகளுக்கு இருக்கும் அரசியல் பின்புலம் அல்லது காவல் துறையின் பாதுகாப்பு, இதைத்தவிர வேறு என்ன காரணம் இருந்துவிட முடியும்?

இடித்துரைப்பாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராக உலகளாவிய அளவில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்பதும், "விக்கிலீக்ஸ்' அசஞ்சேவைப் போல பல இடித்துரைப்பாளர்கள் ஒளிவுமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதும் உண்மை. அதற்காக இந்தப் பிரச்னையில் நாம் உலகமயத்தைத் தழுவிக் கொண்டுவிட முடியாது.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில், பட்டப்பகலில் பாரஸ்மல் வெட்டிச் சாய்க்கப்படுவது போன்ற சம்பவங்கள் தலைதூக்குவதை சமூக விரோதிகள் அரசுக்கு விடுக்கும் சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடனடியாகக் காவல் துறையை முடுக்கிவிட்டுக் கொலையாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான், ஏனைய சமூக விரோதக் கும்பல்களுக்கு அரசு விடுக்கும் கடும் எச்சரிக்கையாக இருக்கும். எதிர்வினைக் கருத்துகளுக்கு இடமளிப்பதும், தவறுகள் தட்டிக்கேட்கப்படுவதும் தான் மக்களாட்சியின் மகத்துவம். அதன் குரல்வளையை நெரிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT