தலையங்கம்

மோதலும் முடிவும்!

புதிய மோட்டார் வாகனங்களின் தரம், உறுதி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய சர்வதேச புதிய வாகனங்கள் மதிப்பீட்டு அமைப்பு (ஜி.என்.சி.ஏ.பி.) என்கிற சுதந்திரமான அமைப்பு செயல்படுகிறது.

ஆசிரியர்

புதிய மோட்டார் வாகனங்களின் தரம், உறுதி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய சர்வதேச புதிய வாகனங்கள் மதிப்பீட்டு அமைப்பு (ஜி.என்.சி.ஏ.பி.) என்கிற சுதந்திரமான அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் வாகனங்களை, விபத்தை ஏற்படுத்தி மோதல் சோதனை நடத்துகிறது. அதன் மூலம் அந்த வாகனத்தின் உறுதி, பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்கிறது.

இந்த அமைப்பின் அறிக்கைப்படி இந்தியாவில் தயாராகும் பெரும்பாலான வாகனங்கள் முறையான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியவையாக இல்லை. அவை சர்வதேச அளவிலான மோட்டார் வாகனப் பாதுகாப்பு அம்சங்களை வேண்டுமென்றே தவிர்ப்பதாகத் தெரிகிறது. மாருதி, ஹூண்டாய், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள், இந்தச் சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களில் தேர்வடையவில்லை.

சர்வதேச புதிய வாகனங்கள் மதிப்பீட்டு அமைப்பின் கருத்துப்படி, அடிப்படைப் பாதுகாப்பு அம்சமான, விபத்து நேர்ந்ததும் முன் இருக்கைப் பயணிகளின்மீது நேரடித் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் காற்றுப் பைகள்கூடப் பல வாகனங்

களில் கிடையாது. இந்தியாவில் உருவாகும் 90% மோட்டார் வாகனங்களின் வெளிப்புற அமைப்பு உறுதியில்லாததாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருப்பது, "கிராஷ் டெஸ்ட்' எனப்படும் மோதல் சோதனையிலிருந்து தெரியவந்திருக்கிறது.

ஜி.என்.சி.ஏ.பி. என்கிற அந்த அமைப்பின் ஆய்வுப்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் பயணிகள் மோட்டார் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் மோசமாக இருப்பதால், தரம் குறைவான புதிய மாடல்கள் உருவாக்கப்படுவதோ, விற்பனைக்கு அறிமுகப்

படுத்தப்படுவதோ தடை செய்யப்பட வேண்டும். மோசமான சாலைகள், அதிகரித்துவிட்ட போக்குவரத்து நெரிசல், சாலைவிதிகள் பின்பற்றப்படாமல் இருப்பது, ஓட்டுநர்களின் தரம், கவனக்குறைவு எனப் பல காரணங்கள் சாலை விபத்துகளுக்குக் காரணமாக இருந்தாலும், மோட்டார் வாகனங்களின் தரம் குறைந்திருப்பதும்கூட விபத்துகளுக்கு முக்கியமான காரணம் எனக் குறிப்பிடுகிறது ஜி.என்.சி.ஏ.பி.

கடந்த 2015-16இல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 27,89,678. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுபோலவே, சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஐரோப்பாவில் நிலைமை நேர் எதிர்மாறானது. வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது என்றால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பாதிக்குப் பாதியாகக் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம், நல்ல சாலைகள், அனுசரிக்கப்படும் சாலை விதிகள், தரமான வாகனங்கள் மூன்றுமே.

இதுகுறித்து மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களிடம் கேட்டால், அவர்களிடமிருந்து ஜி.என்.சி.ஏ.பி.க்கு மோட்டார் வாகனங்களின் தரம், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்றுதான் பதில் வருகிறதே தவிர, அவர்களது ஆய்வு தவறானதென்றோ, தங்களது வாகனங்களின் தரம், உறுதி குறித்து உத்தரவாதம் தரப்படும் என்றோ அவர்கள் தெரிவிக்கத் தயாராக இல்லை. இந்தியாவில் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படும் வாகனங்கள் இந்தியத் தர நிர்ணயத்திற்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன என்று மட்டுமே கூறுகிறார்கள்.

இந்தியாவில் விற்கப்படும் பயணிகள் மோட்டார் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் இருக்கின்றன, உறுதியானவையாக இல்லை என்கிற கருத்து மூலம் நுகர்வோர் மனதில் பீதியை ஏற்படுத்தி மோட்டார் வாகன விற்பனையை பாதிப்பதற்கான சதி இது என்றுகூட வாகனத் தயாரிப்பாளர்களில் சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பயணிகள் மோட்டார் வாகனங்களில் அனைத்துப் பாதுகாப்பு வசதிகளையும் உறுதிப்படுத்துவதுடன், வெளிக்கட்டமைப்பை மிகவும் உறுதியாகத் தயாரிக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள், இந்திய அளவிலான தரத்தைக் கொண்டவை. ஆனால், இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட தரம் என்பது சர்வதேசத் தரத்தைவிட மிகமிகக் குறைந்ததாக அமைந்திருக்கிறது. அதற்குக் காரணம், முந்தைய அம்பாசிடர், ஃபியட், ஸ்டாண்டர்ட் மோட்டார் வாகனங்களின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்திய மோட்டார் வாகனங்களின் தரம் இப்போதும் பின்பற்றப்படுகிறது என்பதுதான்.

ஜி.என்.சி.ஏ.பி. போல இந்தியாவுக்கென்றே புதிய வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டு அமைப்பு ஒன்றை உருவாக்கி மோதல் சோதனை நடத்தி வாகனங்களை வகைப்படுத்துவது என்கிற திட்டம் அரசிடம் ஏற்கெனவே இருக்கிறது. இந்தத் திட்டம் நடை

முறைக்கு வந்தால், பயணிகள் மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள், தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால், இந்த அமைப்பின் அனுமதி பெற்றாக வேண்டும். வாகனங்களின் உறுதியும் பாதுகாப்பும் பல லட்சம் பேர்களின் உயிருடன் சம்பந்தப்பட்டது என்பதால், அரசு இந்த அமைப்பை உருவாக்குவதில் இனியும் தாமதிக்கக் கூடாது.

தயாரிப்பாளர்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்தியாவில் இணைக்காமல் இருப்பதற்கு, வாகனங்களின் விலையை அதனால் குறைக்க முடியும் என்பதுதான் காரணம். வாகனம் வாங்கு

பவர்கள் விலையை மட்டுமே கருதாமல், வாகனத்தின் உறுதி, பாதுகாப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்தினால், தயாரிப்பாளர்களும் தயங்காமல் அதற்கான முயற்சியை மேற்கொள்வார்கள்.

அரசு இனியும் வாகனங்களின் தரநிர்ணயத்திற்கான அமைப்பை உருவாக்குவதில் தாமதிக்கக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT