தலையங்கம்

விதண்டா(வி)வாதம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் மீண்டும் அமெரிக்கா திரும்பித் தனது பேராசிரியர் பணியில் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஆசிரியர்

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் மீண்டும் அமெரிக்கா திரும்பித் தனது பேராசிரியர் பணியில் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார். அரசு அவருக்குப் பதவி நீட்டிப்புக் கொடுக்காதது குறித்தும், பெரும் முதலாளிகளின் அழுத்தம் காரணமாகத்தான், நரேந்திர மோடி அரசு ரகுராம் ராஜனுக்கு நீட்டிப்பு வழங்கவில்லை என்றும் விமர்சனங்கள் பரவலாக எழுப்பப்படுகின்றன. ரகுராம் ராஜன் திறமைசாலி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ரகுராம் ராஜன் என்கிற ஒரு பொருளாதார நிபுணரைச் சார்ந்துதான் இந்தியப் பொருளாதாரமே இயங்குகிறது என்பது சிறுபிள்ளைத்தனமான வாதம்.

ரகுராம் ராஜன் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிறந்த தமிழர். அவரது தந்தை கோவிந்தராஜன், இந்தியக் காவல் துறையைச் சேர்ந்த "ரா' புலனாய்வு அமைப்பில் பணியாற்றியவர். தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) எலக்ட்ரிகல் பொறியியல் படிப்பும், அலாகாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1991-இல் அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கே பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அதைத் தொடர்ந்து 2003 முதல் மூன்று ஆண்டுகள் சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) தலைமைப் பொருளாதார நிபுணராக வேலை பார்த்தார்.

மேலே குறிப்பிட்டுள்ள பின்னணியுடைய ரகுராம் ராஜனை, 2008-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங் தனது கெளரவப் பொருளாதார ஆலோசகராக நியமித்துக் கொண்டார். 2012-இல் நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் ரகுராம் ராஜன். 2013-இல், செப்டம்பர் மாதம் இந்தியாவின் 23-ஆவது ரிசர்வ் வங்கி ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திலேயே ஒரு மிகப்பெரிய தவறு நடந்தது என்பதை, இப்போது அவருக்காக வாதாடுபவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

1943-இல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி ஏற்ற முதல் இந்தியரான சி.டி. தேஷ்முக்கில் தொடங்கி, ரகுராம் ராஜனுக்கு முன்னால் பதவி வகித்த டி. சுப்பாராவ் வரை, அனைவருமே அன்னிய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல. ஆனால், ரகுராம் ராஜன் கடவுச் சீட்டைப் புதுப்பித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும்கூட, அமெரிக்காவின் தாற்காலிகக் குடியுரிமை பெற்றவர் (கிரீன் கார்ட் ஹோல்டர்) என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிகளைப்போல, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியும் அரசியல் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் பதவி. எப்படி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒருவரைக் குடியரசுத் தலைவராக நாம் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதே

போலத்தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளிடமும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளிடமும் நெருக்கமும், பழக்கமும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியப் பொருளாதார நிபுணர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். மான்டெக் சிங் அலுவாலியா, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் போன்றவர்கள் சர்வதேச நிதியத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இவர்களைப் பொருளாதார ஆலோசகர்களாகவோ, ஏன், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர்களாகவோ பயன்படுத்துவதில் தவறே இல்லை. ஆனால், அரசியல் சாசனப் பாதுகாப்புள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் அவர்களை அமர வைப்பது என்பது ஏற்புடையதல்ல.

அது, இந்தியப் பொருளாதாரத்தை சர்வதேச நிதியத்திடம் அடகு வைப்பதற்கு சமம்.

ரகுராம் ராஜனைப் பொருத்தவரை முழுமனதுடன் அவர் இந்தியா திரும்பி இந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவரா என்றால் அதுவும் கிடையாது. சிகாகோ பல்கலைக்கழகத்திலிருந்து தனது தாய்நாட்டில் பணியாற்ற விடுப்பு எடுத்து வந்திருக்கிறாரே தவிர, தாய்நாட்டுக்குத் திரும்பி வந்துவிடவில்லை. அதனால்தான், தனக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்றவுடன், மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியப் பணியைத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து யாரும் ஏன் விமர்சனங்களை எழுப்பவில்லை?

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பதவி ஏற்றபின் அவர் அளித்த முதல் பேட்டியில், வங்கிச் சீர்திருத்தமும், வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் தொடங்குவதற்கான விதிமுறை

களைத் தளர்த்துவதும்தான் தனது உடனடி இலக்கு என்று தெரிவித்திருந்தார். பெரிய அளவில் எந்த வங்கிச் சீர்திருத்தமும் நடைபெறவில்லை. பற்று வரவுக்காக 11 புதிய வங்கிகளுக்கு உரிமம் அளித்ததோடு சரி. வெளிநாட்டு வங்கிகள் தொடங்குவதற்கான விதிமுறைகளை நல்லவேளை தளர்த்தாமல் விட்டார். அப்படி ஏதாவது செய்திருந்தால் இந்திய வங்கிகள் அனைத்தும் திவாலாகி இருக்கும்.

விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருந்தார்; வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்தார் என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. அவர் செப்டம்பர் 5, 2013-இல் பதவி ஏற்றபோது டாலரின் மதிப்பு ரூ.66/-. இப்போது ரூ.67/-. அமெரிக்காவுக்கு வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 28 பில்லியன் டாலர்கள் பற்று வரவு பாக்கியைச் செலுத்தியாக வேண்டும். இதுதான் நிதி நிர்வாகம், பொருளாதார மேதமை என்றால், வேடிக்கையாக இருக்கிறது.

எந்தத் தனிநபரையும் நம்பி இந்தியப் பொருளாதாரம் இல்லை, இருக்கவும் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT