தலையங்கம்

வரலாற்றுப் பின்னடைவு!

ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர்வதா, விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த பொது வாக்கெடுப்பில், "வேண்டாம், விலகிவிடுவோம்' என்கிற கருத்துக்கு 52% ஆதரவு கிடைத்திருக்கிறது. 41 ஆண்டுகளுக்கு முன்பு 1975-இல் இதே பிரச்னைக்காக நடந்த பொது வாக்கெடுப்பில் 62% பேர் ஐரோப்பியக் கூட்டமைப்பின் அங்கமாக பிரிட்டன் தொடர வேண்டும் என்று வாக்களித்ததுபோல,

ஆசிரியர்

ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர்வதா, விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த பொது வாக்கெடுப்பில், "வேண்டாம், விலகிவிடுவோம்' என்கிற கருத்துக்கு 52% ஆதரவு கிடைத்திருக்கிறது. 41 ஆண்டுகளுக்கு முன்பு 1975-இல் இதே பிரச்னைக்காக நடந்த பொது வாக்கெடுப்பில் 62% பேர் ஐரோப்பியக் கூட்டமைப்பின் அங்கமாக பிரிட்டன் தொடர வேண்டும் என்று வாக்களித்ததுபோல, இந்தமுறை விலகுவதற்குப் பெரிய ஆதரவு அலை இருக்கவில்லை. ஆனாலும்கூட, விலகுவது என்பது ஜனநாயக முறையில் முடிவாகி இருக்கிறது.
 2004-ஆம் ஆண்டு அன்றைய தொழிலாளர் கட்சி அரசின் பிரதமராக இருந்த டோனி பிளேயர், ஐரோப்பியக் கூட்டமைப்பு குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்தாரே தவிர, நடத்தவில்லை. அப்போது முதல், பிரிட்டன் விலகிவிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. இப்போது, மக்கள் அதற்கு ஜனநாயக ஆதரவை அளித்திருக்கிறார்கள், அவ்வளவே!
 ஐரோப்பியக் கூட்டமைப்பின் குடியேற்றக் கொள்கையால், வெளி நாட்டினர், குறிப்பாக, ஆசியர்கள் பிரிட்டனில் குடியேறுவது அதிகரித்து வருகிறது. ஆசியர்களின் அதிகரித்த குடியேற்றம், பிரிட்டிஷ் மக்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறித்திருப்பதும், அவர்களது வரிப்பணத்தில் இவர்கள் வசதியாக வாழ வழிகோலியிருப்பதும், இந்தப் பொது வாக்கெடுப்பின் முடிவுக்கு மிக முக்கியமான காரணங்கள்.
 ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகிவிடுவதால் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடுமா என்றால் இல்லை. பிரிட்டனின் வளர்ச்சியை இந்த முடிவு பாதிப்பதுடன், பிரிட்டனின் வரி வருவாயில் ஏறத்தாழ 35 பில்லியன் பவுண்ட் (ரூ.3,26,215 கோடி) இழப்பு ஏற்படக்கூடும். "பிரிட்டன் தொடர வேண்டும்' என்று வலியுறுத்தி வந்த பிரதமர் டேவிட் கேமரூன், வருகிற அக்டோபர் மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். அதுவும்கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
 கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த இரண்டு உலகப் போர்களின் பாதிப்பால் ஏற்பட்ட ஞானோதயம்தான், ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவானதன் காரணம். மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பாகச் செயல்படுவது என்கிற கருத்தை முன்மொழிந்தவர் பிரெஞ்சு அதிபராக இருந்த சார்லஸ் டீகால். ஐரோப்பியக் கூட்டமைப்பு தனக்கென "யூரோ' என்கிற பொது நாணயத்தையும் அறிவித்த பிறகு அது சர்வதேச நாணயமாக அமெரிக்க டாலருக்கேகூட அச்சுறுத்தலாக உயர்ந்தது.
 பிரிட்டனில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு, எந்தவிதத் தடையோ விதிமுறைகளோ இல்லாமல் இருந்து வந்த ஒரு மிகப்பெரிய சந்தையை, இந்த முடிவின் மூலம் பிரிட்டன் இழக்கப்போகிறது. பிரிட்டனிலிருந்து 45% ஏற்றுமதிக்கும், 53% இறக்குமதிக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்புதான் காரணம். அதுமட்டுமல்ல, தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம், உலகின் முக்கியமான பொருளாதார மையமாக இருந்து வந்த லண்டன் அந்தத் தகுதியை இழந்தாலும் வியப்படைவதற்கில்லை.
 பிரிட்டனின் இந்த முடிவை, அந்த நாட்டின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்து ஆதரிக்கவில்லை. 2014-இல் ஸ்காட்லாந்து பிரிட்டனில் தொடர்வதா, விலகுவதா என்கிற பொது வாக்கெடுப்பில், தொடர வேண்டும் என்று வாக்களித்ததுபோல, இந்தப் பொது வாக்கெடுப்பிலும் ஸ்காட்லாந்து மக்களில் 62% பேர், பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். அதனால், ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடருவதற்காக பிரிட்டனிலிருந்து விலக வேண்டும் என்கிற கோஷம் மீண்டும் ஸ்காட்லாந்தில் உயரக்கூடும்.
 ஐரோப்பியக் கூட்டமைப்பில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்தது முதலே, அது ஐரோப்பாவின் வளமான பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாக பாதித்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலிருந்த பலரும் வளமை மிகுந்த ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து (பிரிட்டன்) உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறத் தொடங்கினார்கள்.
 வந்தேறிகள் அல்லது குடியேறியவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பைக் குறைந்த சம்பளத்திற்குத் தட்டிக்கொண்டு போகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம். அவர்களால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாகக் கல்வி, சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு பிரிட்டனில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகி விடுவதுதால் இந்த நிலைமைக்கெல்லாம் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்பதுதான் கசப்பான உண்மை.
 பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதால் இந்தியாவுக்கு பாதிப்பு உண்டா என்றால் நிச்சயமாக உண்டு. பிரிட்டனைச் சார்ந்து செயல்படும் இந்தியத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இன்றைய நிலையில் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்குமான வர்த்தகம் 14.02 பில்லியன் டாலர் (ரூ.95,114 கோடி). அதில் 8.81 பில்லியன் டாலர் (ரூ.59,827 கோடி) ஏற்றுமதி. 5.19 பில்லியன் டாலர் (ரூ.35,216 கோடி) இறக்குமதி. ஆண்டொன்றுக்கு இதனால் 3.64 பில்லியன் டாலர் (ரூ.24,695 கோடி) அன்னியச் செலாவணி நமக்கு உபரியாகக் கிடைக்கிறது. பிரிட்டனின் இறக்குமதி 25 விழுக்காடு இனி குறையும்.
 ஜனநாயகத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக மட்டுமே முடிவெடுக்கிறார்கள். இதில் பிரிட்டிஷ் மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பிரிட்டன் பொது வாக்கெடுப்பு முடிவுகள் நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பின்னடைவு என்பதில் சந்தேகமே இல்லை!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT