தலையங்கம்

"உட்தா பஞ்சாப்' சர்ச்சை!

ஒரு வழியாக "உட்தா பஞ்சாப்' திரைப்படம் வெளியிடப்பட்டு, இந்தியாவின் பல பாகங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றதற்கு, தணிக்கைக் குழுவுக்குத்தான் அந்தத் தயாரிப்பாளர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

ஆசிரியர்

ஒரு வழியாக "உட்தா பஞ்சாப்' திரைப்படம் வெளியிடப்பட்டு, இந்தியாவின் பல பாகங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றதற்கு, தணிக்கைக் குழுவுக்குத்தான் அந்தத் தயாரிப்பாளர்கள் நன்றி சொல்ல வேண்டும். மிகப்பெரிய சர்ச்சை எழுந்து, அதனால் விளம்பரம் கிடைத்து, தணிக்கைக் குழுவினரால் வெட்டப்பட்ட பகுதிகள் நீதிமன்ற உத்தரவால் கத்தரிக்குத் தப்பித்தும்கூட, "உட்தா பஞ்சாப்' மிகப்பெரிய வெற்றியையோ, பரபரப்பையோ ஏற்படுத்தவில்லை என்பதிலிருந்து, படத்தில் உப்புச்சப்பில்லை என்பது தெரிகிறது.

"உட்தா பஞ்சாப்' திரைப்படம் பஞ்சாப் மாநிலத்தில் பரவலாகக் காணப்படும் போதை மருந்துப் பிரச்னையை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய திரைப்படச் சான்றிதழ் குழுவுக்கு (தணிக்கைக் குழு என்று பரவலாகக் கூறப்படும் அமைப்பின் உண்மையான பெயர் இதுதான்) இந்தத் திரைப்படம் அனுப்பப்பட்டபோது, 89 காட்சிகளை வெட்டும்படியும், எங்கெல்லாம் "பஞ்சாப்' குறித்த பதிவு இருக்கிறதோ அதையெல்லாம் அகற்றும்படியும் உத்தரவிட்டது.

பிரச்னை வேறொன்றுமில்லை. அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருப்பவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆளும் சிரோமணி அகாலிதள அரசு உடந்தையாக இருக்கிறது என்பது பரவலான குற்றச்சாட்டு.

அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. மாநில வருவாய்த் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜித்தியாவிக்கும் போதைப் பொருள்களை விநியோகம் செய்யும் மாஃபியாவுக்கும் தொடர்பு இருப்பதாக "ஆம் ஆத்மி' கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும், பாகிஸ்தான் வழியாக மேற்காசிய நாடுகளுக்கும் பஞ்சாபிலிருந்துதான் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டும் நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.

பல்வேறு ஊடகச் செய்திகளும், ஆய்வுகளும் பஞ்சாபில் அதிகரித்து வரும் போதைப் பழக்கம் குறித்துக் கவலையளிக்கும் தகவல்களைத் தருகின்றன. ஐ.நா.சபையின் கணக்குப்படி உலகளாவிய அளவில் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருப்பவர்களின் விகிதம் 0.2%. இந்தியாவை எடுத்துக்கொண்டால் 0.7% பேர் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் 1.2% பேர்.

போதைப் பொருள்களால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். பல குடும்பங்களை இந்தப் பிரச்னை உலுக்கிப் போட்டிருக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் இது குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சி இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்து, ஆளும் அகாலி தளத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டிருக்கும் பஞ்சாப் மாநிலத்தைப் பின்னணியாகக் கொண்டு "உட்தா பஞ்சாப்' திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

"உட்தா பஞ்சாப்' திரைப்படம் வெளிவந்தால் அது தங்கள் அரசுக்கு எதிரான பிரசாரமாக இருக்கும் என்பதாலும், பிரச்னையை மேலும் வலுப்படுத்தி அடுத்த ஆண்டு தேர்தலில் அகாலிதளத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் இந்தப் படத்தைத் தடை செய்யும் முயற்சிகள் நடந்தன. மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்ப

தாலும், மாநிலத்தில் பாஜகவும் ஆட்சியில் இருப்பதாலும், மத்திய திரைப்படச் சான்றிதழ் குழுவுக்கு அகாலி தளம் நெருக்கடி கொடுத்திருக்கக்கூடும்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு "உட்தா பஞ்சாப்' தயாரிப்பாளர்கள் வழக்குத் தொடுத்தனர். திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதில் தணிக்கைக் குழுவினர் மேல் முறையீட்டுக்குப் பிறகு விதித்திருந்த 13 வெட்டுக்களில் ஒன்றே ஒன்றை மட்டுமே அகற்ற அனுமதித்துத் தீர்ப்பு வழங்கியது. அரசியல் காரணங்களுக்காகத் திரைப்படங்கள் தடை செய்யப்படுவதும், காட்சிகள் வெட்டப்படுவதும் புதிதொன்றும் அல்ல. சமீபகாலத்தில் டெட்பூல், ஸ்பெக்டர், பிட்டி ஷேட்ஸ் ஆப் கிரே, ஆங்கிரி இந்தியன் காடசஸ், அன்ப்ரீடம், எம்எஸ்ஜி, பிகே, சாயம் பூசிய வீடு போன்ற பல படங்கள் தணிக்கைக் குழுவினரின் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் எதிர்கொண்டன.

சுதந்திர ஜனநாயக நாட்டில் விமர்சனங்களையும், கேலியையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ள முடியாமல் போனால், அதன் விளைவு மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்வதாகத்தான் இருக்கும். சினிமா, பத்திரிகை போன்ற ஊடகங்கள் ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கும்போதுதான், தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் அதன்மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் முடியும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விடுகிறார்கள். முகத்தின் அவலத்தைப் பிரதிபலிக்கிறது என்பதற்காகக் கண்ணாடியை வெறுப்பது போன்ற முட்டாள்தனம்தான், ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கும்போது ஆத்திரப்படுவது என்பதும்.

அமெரிக்க அதிபராக இருந்த உட்ரோ வில்சன் கருத்து சுதந்திரம் பற்றிக் கூறும்போது சொன்னார் - "கட்டுப்பாடற்ற பேச்சு சுதந்திரத்தை அளித்துவிட்டால், முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தை விளம்பரப்படுத்திக் கொள்வார்கள், அவ்வளவே!' மத்திய திரைப்படச் சான்று வழங்கும் குழுவினர் சான்று வழங்குவதுடன் நிறுத்திக்கொண்டு தணிக்கை செய்வதை மக்களின் தீர்ப்புக்கு விட்டுவிடுவதுதான் நல்லது. "உட்தா பஞ்சாப்' உணர்த்தும் உண்மை இதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT