முகப்பு
தலையங்கம்

புகை எனும் உயிர்ப்பகை!

இந்தியாவில் புகைப் பிடிப்போர் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால், அவர்கள் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த 14 ஆண்டுகளில் 2.5 கோடி நபர்களிலிருந்து, 4.6 கோடி நபர்களாக புகைப் பிடிப்போர் அதிகரித்துள்ளனர். அதேவேளை, ஓராண்டில் அவர்கள் புகைக்கும் (தனிநபர்) சிகரெட் அளவு சராசரி 109-இலிருந்து 95-ஆகக் குறைந்துள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

நிதிநிலை அறிக்கையில் சிகரெட்டுக்கு 10 முதல் 15% வரி உயர்த்தப்பட்டிருப்பினும், இந்திய புகையிலைச் சந்தையில் இதனால் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
 இந்தியாவில் புகைப் பிடிப்போர் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால், அவர்கள் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த 14 ஆண்டுகளில் 2.5 கோடி நபர்களிலிருந்து, 4.6 கோடி நபர்களாக புகைப் பிடிப்போர் அதிகரித்துள்ளனர். அதேவேளை, ஓராண்டில் அவர்கள் புகைக்கும் (தனிநபர்) சிகரெட் அளவு சராசரி 109-இலிருந்து 95-ஆகக் குறைந்துள்ளது.
 அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சிகரெட் மீதான வரிவிதிப்பு (விற்பனை விலையில் 75 விழுக்காடு வரி) சிகரெட் விற்பனையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் இது நிகழவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதற்கு, உலக சுகாதார நிறுவனத்தின் உலக அளவிலான புகையிலை நோய்கள் தொடர்பான ஆய்வறிக்கை பதிலளிக்கிறது. உலக நாடுகள் அனைத்திலும் சிகரெட் மீதான வரியைக் கடுமையாக உயர்த்தியதால் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது போல, இந்தியாவில் குறையாததற்கு இரண்டு முக்கியமான காரணங்களை அந்த அறிக்கை பட்டியலிடுகிறது.
 முதலாவது காரணம், வரிவிதிப்பால் ஏற்படும் சிகரெட் விலை உயர்வு, இந்தியர்களை பாதிப்பதாக இல்லை. இந்தியர்களின் சராசரி வருவாய் உயர்ந்துகொண்டே போவதால், அவர்கள் சிகரெட் விலை உயர்வையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இரண்டாவது, இந்தியாவின் 6 அடுக்கு வரிவிதிப்பு முறை மிக முக்கியமான காரணம். குறிப்பாக, சிகரெட்டின் நீளம், ஃபில்டர் ஆகியவற்றுக்கு ஏற்ப வரி விகிதம் மாறுபடுவதால், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் சிகரெட்டின் நீளத்தைக் குறைத்து விலை உயர்வைத் தவிர்க்கின்றன. ஆகவே, விற்பனை சரிவதில்லை.
 இந்த இரண்டு காரணங்களும் எவ்வளவு பெரிய உண்மை என்பதை நினைத்தால், இதற்குப் பின்னால் இருக்கும் மோசடி வெளிப்படுகிறது. சிகரெட் தயாரிக்கும் புகையிலை நிறுவனங்கள் தங்கள் வியாபார உத்தியில் இந்த இரு நடைமுறை உண்மைகளையும் கலந்து பின்பற்றுவதைக் காண முடிகிறது.
 ஒரு தேநீர் கடையில் ஒரு கப் தேநீர் விலை என்னவோ அதே அளவுக்கு சிகரெட் விலையும் இருக்கும் வகையில் புகையிலை நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஒரு சாதாரண கூலித் தொழிலாளிக்கு ஒரு தேநீர் விலை நியாயமானதாக, அவரது அன்றாட வருவாயைப் பாதிக்கும் ஒன்றாக இல்லாததாக இருக்கும்வரை, அதனுடன் இணைந்த சிகரெட்டும் அவருடைய வருவாய்க்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒன்றாகவே மனதில் பதியும். அவருக்கு தேநீருடன் ஒரு சிகரெட் தேவை. அதன் நீளம் 6 செ.மீ.லிருந்து 5 செ.மீ.ஆக குறைவது பற்றி ஆட்சேபணை இல்லை. இந்த எளிய மனநிலையைத்தான் புகையிலை நிறுவனங்கள் தங்கள் வணிக உத்தியாகப் பயன்படுத்தி வருகின்றன.
 6.5 செ.மீ. நீளமுள்ள சிகரெட்டுக்கு விதிக்கப்படும் வரியைக் காட்டிலும் 5 செ.மீ. நீளமுள்ள சிகரெட்டுக்கு வரியில் 40% குறைவு. ஆகவே, விலையை உயர்த்தாமல் இந்த சிகரெட் நீளத்தை 5 செ.மீ. அளவில் தயாரித்து விலையை உயர்த்துவதைத் தவிர்க்கின்றன. குட்டையான சிகரெட் பிடிப்போர் எண்ணிக்கை 2013-ஆம் ஆண்டில் நான்கு மடங்காக உயர்ந்தது. அதாவது, சிகரெட் பிடிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை; அதேவேளையில், 5 செ.மீ. சிகரெட்டுக்கு மாறிக்கொண்டார்கள்.
 சரி, ஏன் இந்த 5 செ.மீ. நீள சிகரெட்டுக்கு வரி மிகக் குறைவாக இருக்கிறது? பீடி உற்பத்தியாளர் மற்றும் பீடித் தொழிலாளர் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுக்கிறது. பீடி, சிகரெட் இரண்டிலும் புகையிலைதான். பீடியில் புகையிலைத்தூள் மடிக்கப்படுகிறது. சிகரெட்டில் புகையிலைத்தூள் மிகச்சிறு துகள்களாகப் பொடித்து வைக்கப்படுகிறது.
 5 செ.மீ.க்கும் நீளம் குறைவான புகையிலைப் பொருள்களுக்கு அதிக வரி விதித்தால் அது பீடித் தொழிலையும் பாதிக்கும். பல ஆயிரம் பீடித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இதனை சிகரெட் தயாரிப்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தற்போதும்கூட பீடிக்கு வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், வெளிநாடுகளிலிருந்து கடத்தப்பட்டு இந்தியச் சந்தைக்கு வரும் சிகரெட் அளவு 20% என மதிப்பிடப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னை துறைமுகத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான சிகரெட் பெட்டிகள் கடத்தி வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு சில மாதங்கள் முன்பாக தூத்துக்குடி துறைமுகத்தில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை உள்ளூர்ச் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
 குட்கா போன்ற மெல்லும் புகையிலைப் பொருள்களுக்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்கூட அவை சந்தையில் கிடைப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. அதேபோல, சிகரெட்டின் சில்லறை விற்பனை தடை செய்யப்பட்டிருந்தும்கூட, அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. புகையிலை மீதான வரிவிதிப்பு முறையை ஒன்றுபோல மாற்றி, சிகரெட்டின் நீளம் மற்றும் ஃபில்டர் ஆகியவற்றைப் பொருள்படுத்தாமல், அனைத்து வகையான, அனைத்து அளவிலான சிகரெட்டுகளுக்கும் ஒரே மாதிரியாக வரி விதிப்பது மட்டுமே புகைப்போர், புகையிலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் குறைக்கும்.
 இதுகுறித்தான விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மது, மாமிசம், புகை பிடித்தல் மூன்றும் இணையும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்துப் பள்ளிகளிலேயே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இந்த உயிர்க்கொல்லியின் வெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →