தலையங்கம்

தங்கத்தில் இல்லை குறை!

ஏனென்றால், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. "நகை வாங்க முடியாததால் என் மகள் திருமணம் நின்றுபோனது' என்பதாக ஒரு கூக்குரல்கூட எழவில்லை. அரசும் இதுபற்றி கவலைப்படவோ அல்லது போராட்ட அமைப்புகளை அழைத்துப் பேசவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனென்றால், தங்கம் விற்பனை குறைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

ஆசிரியர்

தங்க நகைக் கடை உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை மார்ச் 7-ஆம் தேதி வரை நடத்தப்போவதாக அறிவித்திருந்தபோதிலும், ஒரு நாள் முன்னதாகவே போராட்டத்தை விலக்கிக் கொண்டுவிட்டனர். மத்திய அரசு இவர்களது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதி கூறியுள்ளதால் கடைகளைத் திறந்துள்ளனர்.
 சுமார் ஒரு வார காலம் நடைபெற்ற போராட்டத்தால் மக்களோ, அரசோ, இயல்பு வாழ்க்கையோ பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று இருக்குமேயானால், அது நகைக் கடை வியாபாரிகளின் போராட்டமாகத்தான் இருக்கும். யூ-ட்யூப்பிலும், தொலைக்காட்சிகளிலும் தங்க நகைக் கடைகளின் விளம்பரங்கள் தொடர்ந்தன.
 ஏனென்றால், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. "நகை வாங்க முடியாததால் என் மகள் திருமணம் நின்றுபோனது' என்பதாக ஒரு கூக்குரல்கூட எழவில்லை. அரசும் இதுபற்றி கவலைப்படவோ அல்லது போராட்ட அமைப்புகளை அழைத்துப் பேசவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனென்றால், தங்கம் விற்பனை குறைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். எத்தனை நாள்களுக்கு நகைக் கடைகள் மூடப்படுகிறதோ அந்த அளவுக்கு தங்கத்தின் இறக்குமதி குறையும்.
 இந்தப் போராட்டத்தில் இருந்த இரண்டு குறைபாடுகள்தான் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாததற்குக் காரணம். ஏழைகள் வாங்கும் அன்றாடப் பொருள் அல்ல என்பது முதலாவது காரணம். இன்று வாங்க முடியாவிட்டால் நாளை விலை கூடிவிடுமே என்று கவலைப்பட்டு, ஆற்றாமையால் புலம்புவோர் யாருமே இல்லை. பணம் படைத்தோருக்கு இது பற்றிய கவலையே இல்லை. அவர்களிடம் போதுமான தங்கம் ஏற்கெனவே இருக்கிறது.
 இரண்டாவது காரணம், தங்கம் அழுகிப்போகும் காய்கறி அல்ல. இன்றில்லையானால் நாளை விற்பார்கள். கூடுதல் விலையில் விற்கவே வாய்ப்புகள் அதிகம். ஆகையால், போராட்டம் நடத்தும் நகைக் கடைக்காரர்கள் நட்டப்படுவார்களே என்கிற பச்சாதாபம் யாரிடத்தும் இல்லை. ஆக, நுகர்வோருக்கும் பாதிப்பில்லை; விற்பனையாளர்களுக்கும் பாதிப்பில்லை என்கிறபோது இந்தப் போராட்டம் வெற்றியடையாததில் வியப்பில்லை.
 தங்க நகைகளுக்கு கலால் வரி 1% விதிக்கப்பட்டது என்றால், அதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியவர்கள் மக்களாக இருக்கும்பட்சத்தில் அதற்கு அரசு காது கொடுத்துக் கேட்கும். அரசுக்கு உண்மையாகவே இழப்பு ஏற்படும் என்றாலும்கூட, வாக்குவங்கி அரசியலுக்காக மக்களின் குரலுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்புக் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால், இந்த 1% வரி விதிப்பு குறித்து மக்களிடம் எந்த முணுமுணுப்பும் இல்லை.
 இந்தப் போராட்டத்தால் மத்திய அரசுக்கு இழப்பு உண்டு. உலகிலேயே அதிகமாக தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் இந்தியாவில் மட்டுமே. இந்தியாவில் மக்கள் தமது வருமானத்தில் சராசரியாக 30% சேமிப்பாக வைக்கிறார்கள் என்றால், அதில் 10 சதவீதத்தைத் தங்கமாக வாங்கி வைக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். தங்க நகை விற்பனை தடைபடும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி, விற்பனை, நகைகள் தயாரிப்பு, நகை விற்பனை என பல நிலைகளில் சுமார் 40% வரி விதிப்பு உள்ளது. இதனை மத்திய அரசு இழந்தாலும், இதைப் பொருள்படுத்தவில்லை.
 மத்திய அரசு தங்க விற்பனையைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவுமே 1% கலால் வரி விதிப்பு மற்றும் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக நகைகள் வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்) தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது. பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணம், லஞ்சப்பணம்தான் தங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கும் முதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம் என்ற உத்தரவு.
 ஆனால், ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக நகை வாங்குபவரின் பான் கார்டு கட்டாயம் என்றதால், நகை விற்பனை குறைந்து போனது என்று நகைக் கடை உரிமையாளர்கள் கூறியதை யாருமே பொருள்படுத்தவில்லை. இந்த விற்பனையை இரண்டு ரசீதுகளாகப் போட்டு விற்பனை செய்வது இயலாத காரியம் அல்ல.
 நகைக் கடை உரிமையாளர்களின் கூற்றுப்படி, 68% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள் இல்லை. வரி செலுத்துவோர் மக்கள் தொகையில் 3% மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும் இருக்காது என்பது ஏற்கக்கூடியதாக இருந்தாலும், வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை எண் என ஏதாவது இரண்டைப் பதிவு செய்கிறோம் என்று சொல்வதில் என்ன தயக்கம்?
 இவற்றில் ஏதாவது இரண்டை பதிவு செய்வதைக் கட்டாயமாக்கினால், கருப்புப் பணத்தில் தங்க நகைகளை வாங்குவோர் எண்ணிக்கை நிச்சயமாகக் குறையும். கருப்புப் பணத்தைத் தடுக்கும் முயற்சிக்கு அரசுக்கு உதவிடமாட்டார்கள் என்றால், அரசு இவர்களுக்கு எப்படி உதவும்?
 கருப்புப் பணம் தங்கமாகிறது என்பதும், மக்கள் தங்கத்தில் சேமிப்பதையே விரும்புகிறார்கள் என்பதும் வியப்பளிக்கவில்லை. அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெறுவது தங்கமாகத்தான் என்பது உலகறிந்த உண்மை. அதேபோல, பணத்தின் மதிப்பின்மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையும், பங்குச் சந்தை முறைகேடுகளால் ஏற்பட்டிருக்கும் அச்சமும் பொதுமக்களைத் தங்கத்தில் முதலீடு செய்யத் தூண்டுகின்றன.
 மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறு காண முடியாது. ஆனால், கருப்புப் பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு, கொண்டு வரப்படும் எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதுதான், வரவேற்கப்பட வேண்டியதுதான்!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

SCROLL FOR NEXT