தலையங்கம்

தேவரனையக் கயவர்!

அரசுடைமை வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் பெற்றுத் திருப்பித் தராமல் வெளிநாட்டுக்குப் போய்விட முடியும் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. விஜய் மல்லையா விவகாரம் திடீர் சம்பவமல்ல. இது இப்படித்தான் நடக்கும் என்பது கடன் கொடுத்த வங்கிகளுக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள கண்காணிப்பு அமைப்புகளுக்குமே நன்றாகத் தெரியும் என்பதுதான் உண்மை.

ஆசிரியர்

அரசுடைமை வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் பெற்றுத் திருப்பித் தராமல் வெளிநாட்டுக்குப் போய்விட முடியும் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. விஜய் மல்லையா விவகாரம் திடீர் சம்பவமல்ல. இது இப்படித்தான் நடக்கும் என்பது கடன் கொடுத்த வங்கிகளுக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள கண்காணிப்பு அமைப்புகளுக்குமே நன்றாகத் தெரியும் என்பதுதான் உண்மை.

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு முதன்முதலில் அரசுடைமை வங்கிகளிலிருந்து கடனுதவி செப்டம்பர் 2004-இல் வழங்கப்பட்டது. அடுத்த கட்டக் கடனுதவி 2008 பிப்ரவரியில் தரப்பட்டது. இந்தக் கடனுக்கான தவணைகளோ, வட்டியோ தரப்படாத நிலையில், 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடனை, வாராக்கடனாக வங்கிகள் அறிவித்தன. அப்போதே சுதாரித்துக்கொண்டு அவரது கடவுச்சீட்டை அரசு முடக்கி இருக்க வேண்டும்; நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு சொத்துகளை முடக்கி இருக்க வேண்டும்; செய்யவில்லை.

2010, டிசம்பர் 21-ஆம் தேதி கிங்ஃபிஷர் நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய வங்கிகளின் கூட்டமைப்பு, விஜய் மல்லையாவின் வேண்டுகோளை ஏற்று நிலுவையிலுள்ள அவரது கடன் தொகையில் கணிசமான வட்டித் தொகையைத் தள்ளுபடி செய்து, அதனைத் தவணை முறையில் திருப்பித் தருவதற்குக் கடன் சீரமைப்பு ஒத்துக்கொண்டது. இத்தனையும் நடந்தது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இப்படிப் பல வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கித் திருப்பித்தராத ஒரு நிறுவனத்திற்கு, ஐ.டி.பி.ஐ. வங்கி மேலும் கடன் வழங்க முன்வந்தது. இதில் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இருப்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது.

2012-இல்தான் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தில்லுமுல்லுகளும், வங்கிகளிலிருந்து பெறப்பட்ட பெரும் பணம் மடைமாற்றம் செய்யப்பட்டு ஊதாரித்தனமாக விஜய் மல்லையாவால் செலவழிக்கப்பட்டு விட்டது என்பதும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. கிங்ஃபிஷர் விமான நிறுவனம், விமான நிலையங்களுக்கான கட்டணத்தைக் கட்டவில்லை. பெட்ரோலிய நிறுவனங்களுக்குப் பணம் தரவில்லை. அரசுக்கு வரி கட்டவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஊழியர்களுக்கும் சம்பளம் தருவதை நிறுத்தியபோதுதான், நிறுவனம் அநேகமாக திவாலாகி விட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

2012 அக்டோபர் மாதம் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் காசோலை பணமில்லாமல் திரும்பியபோது, முதன்முதலாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிடியாணை அனுப்பப்பட்டது. கிங்ஃபிஷர் நிறுவனத்தின்மீது முதல் பிடியாணை உத்தரவு பிறப்பித்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும்கூட விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டு முடக்கப்படவில்லை என்றால், நமது அரசு நிர்வாகம் எவ்வளவு சுறுசுறுப்பாகவும், கவனமாகவும் இயங்குகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

அடுத்த சில மாதங்களில் அந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விமானங்கள் அனைத்துமே வெளிநாடுகளிலிருந்து வாடகைக்கோ, ஒப்பந்த அடிப்படையிலோ பெறப்பட்டவை. அதன் உரிமையாளர்கள் தங்கள் விமானங்களை எடுத்துக்கொண்டு பறந்து விட்டனர்.

கடந்த மார்ச் 2-ஆம் தேதி, கிங்ஃபிஷர் நிறுவனத்திற்குக் கடன் வழங்கி இருக்கும் 17 வங்கிகளின் கூட்டுக்குழு, கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் விஜய் மல்லையாவைக் கைது செய்யவும், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாமலிருக்க அவரது கடவுச்சீட்டை முடக்கவும் முறையிட்டன. இங்கே முறையீடு நடந்து கொண்டிருக்கும்போது விஜய் மல்லையா வெளிநாட்டுக்குப் பறந்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டே மத்தியப் புலனாய்வுத் துறை விஜய் மல்லையா வெளிநாடு செல்கிறாரா என்பதைக் கண்காணிக்கும்படி குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

குடியேற்றத் துறைக்கு நான்கு விதமான வேண்டுகோள் விடுக்கப்படலாம். ஒரு நபரின் பயண விவரங்களைக் கோருதல், ஒரு நபர் வெளிநாடு செல்வதை அறிவித்தல், வெளிநாடு செல்வதைத் தடுத்து நிறுத்துதல், தடுத்து நிறுத்திக் கைது செய்து புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தல் என்பதுதான் அந்த நான்கு வகையான வேண்டுகோள்கள். மத்தியப் புலனாய்வுத் துறை இரண்டாவது வேண்டுகோளான அறிவித்தலை மட்டுமே குறிப்பிட்டிருந்ததால், அவர்கள் அறிவித்தார்கள், இவர்களும் குறித்துக் கொண்டார்கள். எப்படி இருக்கிறது?

விஜய் மல்லையா தனது சுட்டுரையில், தான் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்றும், சர்வதேசத் தொழிலதிபர் என்றும் குறிப்பிட்டு, எங்கும் தப்பிச் சென்றுவிடவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன்னைவிட அதிகமாகக் கடன் வாங்கி ஏமாற்றி இருப்பவர்களை விட்டுவிட்டுத் தன்னை மட்டும் வேண்டுமென்றே ஊடகங்கள் தவறான கோணத்தில் சித்திரிப்பதாக வருத்தப்பட்டிருக்கிறார். அவர் உண்மையிலேயே சட்டத்தை சந்திக்கத் தயாராக இருப்பவராக இருந்தால், இந்தியா திரும்பி வந்து தனக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும்.

விஜய் மல்லையா தப்பிவிட்டாரே என்று கேட்டால், குவாத்ரோச்சியைத் தப்பவிட்டவர்கள் யார் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் கேள்வி எழுப்புவது அபத்தத்திலும் அபத்தம். இந்த நாட்டில் அரசு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிய பெரும் தொழிலதிபர்கள் ஏமாற்ற முடியும் என்கிற தோற்றம் ஏற்படுவது, பயங்கரவாத அச்சுறுத்தலையும்விட ஆபத்தான அச்சுறுத்தல். நெறிபிறழ் முதலாளித்துவத்தின் (Crony capitalism)  கோரமுகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

SCROLL FOR NEXT