தலையங்கம்

அதிகார துஷ்பிரயோகம்!

தஞ்சாவூர் அருகே, டிராக்டர் கடனைக் கட்டாத ஒரத்தநாடு விவசாயியைக் காவலர்கள் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் கட்செவிஅஞ்சல் மூலமான நேரடிப்படம் வேகமாகப் பரவியதால், தற்போது அந்த மூவரும் தஞ்சாவூர் ஆயுதப்படைக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்

தஞ்சாவூர் அருகே, டிராக்டர் கடனைக் கட்டாத ஒரத்தநாடு விவசாயியைக் காவலர்கள் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் கட்செவிஅஞ்சல் மூலமான நேரடிப்படம் வேகமாகப் பரவியதால், தற்போது அந்த மூவரும் தஞ்சாவூர் ஆயுதப்படைக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை இயக்குநரிடம் தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதாலும், இது தமிழகத்தின் தேர்தல் காலம் என்பதாலும், கிங்ஃபிஷர் விமான நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவின் ரூ.9,000 கோடி கடன் விவகாரம் இப்போது எல்லோராலும் பேசப்படும் பொருளாக உள்ளதாலும், இந்தக் காவலர்கள் மீது வேறு நடவடிக்கைகளையும் காவல் துறை மேற்கொள்ளக்கூடும்.

கடனுக்காக விவசாயியை அடிப்பதா என்ற கேள்வி கேட்கும் சமூக வலைத்தளங்கள், உடனடி பகிர்வு, பதிவீடு என தங்கள் எதிர்வினையை முடித்துக்கொள்கின்றன. அரசியல்வாதிகள், அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். அரசு அவ்வாறு ரத்து செய்தாலும் இந்தக் கடன் தீராது. ஏனெனில், இந்த விவசாயி கடன் பெற்றிருப்பது தனியார் நிதிநிறுவனத்திடம். வாகனங்களுக்குக் கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்களைப்போல, அடித்துப் பறிமுதல் செய்யும் அளவுக்கு அரசு வங்கிகள் கல்நெஞ்சம் கொண்டுவிடவில்லை. மல்லையாவை மட்டுமல்ல, அவர்கள் விவசாயிகளிடமும் இன்னமும் கரிசனத்தோடுதான் இருக்கிறார்கள். ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள்தான், சட்டத்துக்குப் புறம்பாக காவல் துறையை வைத்து வாகனங்களைப் பறிமுதல் செய்வதிலும், இன்னும் சில நேர்வுகளில் தனிப்பட்ட உள்ளூர் ரவுடிகளை வைத்து வாகனங்களைக் கைப்பற்றவும் செய்கின்றனர்.

தஞ்சாவூர் சம்பவத்தில் தொடர்புடைய விவசாயி, தனது டிராக்டரை ரூ.3,80,000 கடன் பெற்று வாங்கியிருக்கிறார். எட்டு தவணைகளில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவரை ஆறு தவணைகளில் ரூ.4,11,000 செலுத்தியுள்ளார். மீதம் இரண்டு தவணையைச் செலுத்தவில்லை என்பதால் நீதிமன்ற உத்தரவுடன், வழக்குரைஞர் மற்றும் காவலர்களுடன் வந்தபோது, அவர் தனது டிராக்டரை விடமாட்டேன் என்று வாகன இருக்கையில் கெட்டியாக அமர்ந்துகொண்டதாகவும், அவரை வெளியேற்றும் நடவடிக்கையில் சொற்கள் தடித்து, அடிதடியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய சம்பவத்தில், இந்த விவசாயி செலுத்த வேண்டிய இரண்டு தவணைக்கான பணத்துக்கும், டிராக்டர் மதிப்புக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. டிராக்டரை ஜப்தி செய்யாமல், இந்த இரண்டு தவணைத் தொகைக்காக மட்டுமே தனியாக பாண்டு அல்லது நகைஅடமானம் என்று எளிய மாற்று நடவடிக்கைகளை இந்தத் தனியார் நிதி நிறுவனம் மேற்கொண்டிருக்க முடியும். இந்த விவகாரத்துக்கு எளிமையாகத் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால், அவர்கள் கடுமையாகவே நடந்துகொண்டனர்.

ஒரு விவசாயி, விவசாயம் சார்ந்த கருவி, அல்லது விதை, விளைச்சல் சார்ந்த கடன் பெற்றிருக்கும்போது, கடன் வழங்கிய நிறுவனம், அது அரசு வங்கியாக அல்லது தனியார் நிதி நிறுவனமாக இருந்தாலும் எவ்வாறு செயல்பட வேண்டும், ஒருவர் செலுத்திய தவணைகள், செலுத்தப்பட்ட தொகையைக் கொண்டு அந்த விவசாயிக்கு எத்தகைய எளிமையான, அவரது விவசாயம் அல்லது வாழ்க்கைக்குப் பாதிப்பில்லாத வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட வேண்டியதே இன்றைய முதல் தேவை. ஒரு விவசாயியின் வீடு அல்லது நிலத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பாக, மாவட்ட நிர்வாகம் எத்தகைய அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

ஒரு விவசாயி பெற்ற கடனுக்காக அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்போது, வெறும் பணம் பாக்கி என்று மட்டுமே கருதாமல், வேறு காரணிகளை ஆய்வு செய்த பிறகுதான் ஜப்தி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனும்படியாக சட்டத்தில் திருத்தம் தேவை. கடன்பெற்ற விவசாயிக்கு நிலம் மட்டுமே வாழ்வாதாரமா? அல்லது வேறு சொத்துகள், தொழில்கள் உள்ளதா? அந்த விவசாயி, கடன் பெற்ற நாள் முதலாக விவசாயத்தின் மூலம் அடைந்த வருவாய் எவ்வளவு? அந்த விவசாயியின் விளைநிலம் கடந்த மூன்று ஆண்டுகளில் வறட்சியால், பேரிடரால் பாதிக்கப்பட்டதா? கடன் பெற்ற பிறகு எத்தனை தவணைகள், அல்லது எவ்வளவு தொகை கட்டியிருக்கிறார், மீதமுள்ள தொகையைக் கட்டவே முடியாது என்று நிதி நிறுவனம் அல்லது வங்கி கருதுவதற்குக் காரணம் என்ன? ஒரு விவசாயி தான் பெற்ற கடன்தொகைக்கு மேலாக வட்டி செலுத்தியிருந்தால், கூடுதலாக செலுத்திய வட்டி எவ்வளவு? விவசாயிக்கு உதவும் வகையில், விவசாயி கட்டிய தொகையில் அசல்-வட்டி விகிதத்துக்கு ஏற்ப நீதிமன்றம் ஒரு சமரசத் தீர்வை அளிக்கலாம்.

இதுபோன்ற நெறிமுறைகளை உருவாக்குவதே இன்றையத் தேவை. தனியார் நிதி நிறுவனங்களைப் பற்றி எதுவுமே பேசாமல், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசியல் பேசுவதாலும், விவசாயியைத் தாக்கியவர்களைக் கண்டனம் செய்வதாலும் மட்டுமே பயன் ஏற்படாது.

பணப்பரிமாற்றப் பிரச்னைகளில் காவல் துறையினர் தலையிட எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால், தனியார் நிதி நிறுவனங்களிடமும், வங்கிகளின் கடன் அட்டை வசூல் நிறுவனங்களிடமும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, தங்களது காக்கிச் சட்டையையும் அதிகாரத்தையும் காட்டிக் கடனாளிகளை மிரட்டும் காவல் துறையின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு வழக்குத் தொடர்ந்தால் மட்டுமே, இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

SCROLL FOR NEXT