தலையங்கம்

மக்கள் விரோத முடிவு!

பி.பி.எப்., கிஸான் விகாஸ் பத்திரம், சிறு சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல்துறையின் செல்வமகள் திட்டம் எல்லாவற்றின் வட்டி விகிதத்தையும் மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. பி.பி.எப். (பப்ளிக் பிராவிடன்ட் பண்ட்) திட்டத்தின் தற்போதைய 8.7% வட்டியை 8.1% ஆகவும், கிஸான் விகாஸ் பத்திரங்களின் தற்போதைய வட்டி 8.7%-யை 7.8% ஆகவும் குறைத்துள்ளார்கள்.

ஆசிரியர்

பி.பி.எப்., கிஸான் விகாஸ் பத்திரம், சிறு சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல்துறையின் செல்வமகள் திட்டம் எல்லாவற்றின் வட்டி விகிதத்தையும் மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. பி.பி.எப். (பப்ளிக் பிராவிடன்ட் பண்ட்) திட்டத்தின் தற்போதைய 8.7% வட்டியை 8.1% ஆகவும், கிஸான் விகாஸ் பத்திரங்களின் தற்போதைய வட்டி 8.7%-யை 7.8% ஆகவும் குறைத்துள்ளார்கள்.

தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் (இ.பி.எப்.) தொகுப்பு நிதியிலிருந்து 40%-க்கு அதிகமாக எடுத்தால் அதன் வட்டித் தொகைக்கு வரி உண்டு என்ற அறிவிப்பை, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராடி, விலக்கிக்கொள்ளுமாறு அரசை அடிபணிய வைத்தன. அதனால் உடனடியாக பாதிக்கப்படக் கூடியவர்கள் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் என்பதால்தான் அந்தப் போராட்டம். ஆனால், சாதாரண மக்கள் பயனடைந்துவரும் சேமிப்புத் திட்டங்களில் வட்டிக் குறைப்பு குறித்து யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமும், மாதாந்திர வருவாய்த் திட்டத்துக்கான வட்டி விகிதமும்கூட இதற்கு விலக்கு அல்ல. பல ஆயிரம் குடும்பங்கள், தங்கள் வைப்புநிதியில் கிடைக்கும் வட்டியை, தங்கள் குடும்பத் தலைவர் சம்பாதிக்கும் சிறிய ஊதியத்துடன் சேர்த்து குடும்பத்தை நடத்தி வருகின்றன. இத்தகையோர் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருந்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி மாதம் சுமார் ரூ.3,800 பெற முடியும். இது அந்த எளிய குடும்பத்தின் இதர செலவுகளை ஈடுசெய்ய உதவுகிறது. தற்போதைய அரசின் முடிவால் உடனடியாக பாதிக்கப்படுவோர் இவர்கள்தான்.

பத்து ஆண்டுகளில் முகமதிப்பு இரட்டிப்பாகும்படியான திட்டங்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்கலாம். ஏனென்றால், அவர்களது வாழ்க்கை இந்தப் பணத்தை நம்பி இல்லை. நடுத்தரக் குடும்பத்தினரும், மூத்த குடிமக்களும் தங்களது வாழ்வில் ஆதாரமாக இருக்கும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த முடிவை திடீரென்று மத்திய அரசு எடுத்துவிடவில்லை. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றுவது என்றும், அதனை ஒவ்வொரு காலாண்டிற்கும் தீர்மானிப்பது என்றும் பிப்ரவரி 16-ஆம் தேதியே முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு சாமானிய மனிதரையும் பாதிக்கும் இந்த வட்டிக் குறைப்பு அல்லது மறுநிர்ணயம் குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கலாம்; விவாதித்திருக்கலாம். ஆனால், இதுபற்றி யாரும் கவலைப்படவில்லை. இப்போது மோடி அரசு ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறது என்று காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிடுகிறது. நீலிக் கண்ணீர் வடிக்கிறது.

தங்களது சேமிப்பு பத்திரமாக இருக்கும் என்று மக்கள் நம்புவது அரசு வங்கிகளையும், அஞ்சலகங்களையும்தான். இவற்றிற்கான வட்டியைக் குறைப்பதன் மூலம், அதிக வருவாய்க்கு ஆசைப்பட்டு அவர்கள் தங்களது சேமிப்பை உத்தரவாதம் இல்லாத பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தூண்டுவதுதான் இதன் பின்னணித் திட்டம். அதன் மூலம் பொருளாதாரம் உயிர்ப்புப் பெறும் என்பது நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் எதிர்பார்ப்பாக இருந்தால், அதைவிடப் பெரிய மக்கள் விரோதப் போக்கும் தேசத் துரோகமும் வேறு எதுவும் இருக்க முடியாது.

அதிக வட்டி என்று ஆசை வார்த்தை காட்டி, பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் பல கோடி ஏழைகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பை ஏமாற்றிச் சென்றிருக்கின்றன. பங்குச் சந்தையில் சூதாடிப் பணம் இழந்தவர்களின் சோகக் கதைகள் ஏராளம், ஏராளம்.

தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், மாதம்தோறும் ஒரு தொகையைப் பெற்று குடும்பச் செலவை ஈடுசெய்ய நினைப்போருக்குத் தங்கம் பயன் தராது. அது ஓர் ஆபத்தான பொருள். திருடுபோக வாய்ப்பு உள்ளது. அது கருப்புப் பண பேர்வழிகளுக்கே உகந்த பளபளப்பு உலோகம்; சாமானியனுக்கானதல்ல.

மனையில் ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும், மனை வணிகர்களின் ஏமாற்றுக்கு ஆட்படாமல் இருக்கவும் ஆள்பலம் தேவை. இல்லையானால், மனைப் பத்திரம் மட்டுமே மிச்சமாகும். இதுவும் மாதம்தோறும் தங்கள் குடும்பத்தை நடத்த வருமானத்தை எதிர்நோக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்குப் பயன்தராது.

பங்குச் சந்தை வணிகம் எழுச்சி, வீழ்ச்சி இரண்டுக்கும் இடம் அளிப்பது. பங்குச் சந்தையில் திடீர் சரிவுகள் ஏற்பட்டால், வசதி இருப்போர் தாங்கிக்கொள்ள முடியும்; நடுத்தர மக்களால் அது முடியாது. ஆகவே, வட்டியின் மூலம் கிடைக்கும் தொகையில் வாழ்க்கையை நடத்தும் முதியோர், ஆதரவற்றோர், நடுத்தரக் குடும்பங்களுக்கு இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை, அவர்களது முதலீட்டுக்கு அரசு உத்தரவாதமுள்ள சேமிப்புகள் மட்டும்தான். அதில் கை வைத்து விளையாடுவதும் ஒன்றுதான், அவர்களது வயிற்றில் அடிப்பதும் ஒன்றுதான்.

முதியோர், ஆதரவற்றோர், குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாதோர், தனிவாழ்க்கை நடத்தும் மகளிர் ஆகியோர் தங்கள் முதலீட்டில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான வைப்புநிதிக்கு 10% வட்டி பெறவும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 7% மட்டுமே வட்டி எனவும் நிபந்தனைகள் விதிக்கலாம். இதன் மூலம், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்த முடியும். இதுதான் சமூகப் பாதுகாப்பு அளிக்கும்.

தனது இப்போதைய முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மக்கள் நரேந்திர மோடி அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் திரும்பப் பெறும் சூழல் விரைவில் உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

SCROLL FOR NEXT