தலையங்கம்

அறிவீனமும் பலவீனமும்...

உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மீண்டும் ஒரு தேவையற்ற பிரச்னையை வலியப்போய் தேடிக்கொண்டிருக்கிறது. மார்ச் 28-ஆம் தேதியன்று, உத்தரகண்ட் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சி, பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என மாநில ஆளுநர் அறிவித்துள்ள நிலையில், அவசர அவசரமாக உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்திருக்க வேண்டாம்.

ஆசிரியர்

உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மீண்டும் ஒரு தேவையற்ற பிரச்னையை வலியப்போய் தேடிக்கொண்டிருக்கிறது. மார்ச் 28-ஆம் தேதியன்று, உத்தரகண்ட் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சி, பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என மாநில ஆளுநர் அறிவித்துள்ள நிலையில், அவசர அவசரமாக உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்திருக்க வேண்டாம். ஏற்கெனவே, அருணாசலப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, அது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதனை விலக்கிக் கொண்ட முன்னுதாரணம் இருக்கும்போது, மீண்டும் அதே தவறைச் செய்திருக்க வேண்டியதில்லை.
 முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 9 உறுப்பினர்களைக் கட்சித் தாவல் சட்டப்படி பேரவைத் தலைவர் கோவிந்த்சிங் குஞ்ச்வல் பதவி நீக்கம் செய்திருக்கும் நிலையில், நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றிட முடியும். அதைத் தடுப்பதற்காகத்தான் பேரவையைக் கலைக்காமல் ஆளுநர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தி இருக்கிறது. இதற்கு பதவிப் போராட்டம்தான் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேருடனும் மாநில முதல்வர் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார் என்கிற ரகசிய விடியோவை ஊடகங்கள் வெளியிட்டன. தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கருத்து முரண்பாடுகளை நீக்க முற்பட்டால் அது கட்சிக்குள் நடைபெறும் சமரச முயற்சி. ஒரு லாயத்திலிருந்து குதிரைகளை வெளியே ஓட்டி வருவதற்காக எடுக்கும் முயற்சிதான் குதிரை பேரம்; தனது லாயத்திலிருந்து குதிரைகள் வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகள் அல்ல. இதை ஊடகங்கள் ஏன் பெரிது படுத்துகின்றன என்பது தெரியவில்லை.
 மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு எத்தகைய நியாயங்களைக் கொண்டிருந்தாலும், மக்கள் மன்றத்திலும் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திலும் இது மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்காகவே பேசப்படும். அருணாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலம் எனத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமே இத்தகைய நிகழ்வுகள் நடப்பதால் இது சந்தர்ப்பவாத அரசியலாகவே பார்க்கப்படும்.
 ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு உத்தரகண்ட் நிகழ்வுகள் பெருமை சேர்க்காது என்பது போலவே, காங்கிரஸ் கட்சிக்கும் இது மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. உள்கட்சிப் பூசலின் காரணமாக, அருணாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை இழந்த ஆறு மாதத்திற்குள் இப்போது உத்தரகண்டிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருப்பது அந்தக் கட்சியின் கட்டமைப்பும், தலைமையின் அதிகாரமும் எந்த அளவுக்கு பலவீனப்பட்டிருக்கின்றன என்பதைத்தான் வெளிச்சம் போடுகிறது.
 2012 சட்டப் பேரவைத் தேர்தலில் 70 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பா.ஜ.க.வைவிட ஓர் இடம் அதிகமாக வெற்றி பெற்று அவையில் பெரிய கட்சியாக இருந்ததால், காங்கிரஸ் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்ததும், ஆளுநரின் ஆசி இருந்ததும்கூட முக்கியமான காரணங்கள். ஆறு உறுப்பினர்களைக் கொண்ட முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவில்தான் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
 காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்களின் எதிர்பார்ப்புக்கு விரோதமாக, கட்சி மேலிடம் சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான, அரசியல் அனுபவம் இல்லாத விஜய் பகுகுணாவை முதல்வராக்கியபோதே காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மத்தியில் முணுமுணுப்பும் அதிருப்தியும் தொடங்கிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதிருப்தியாளர்கள் சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி விடுவார்கள் என்கிற நிலையில், காங்கிரஸ் மேலிடம் சட்டப் பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்குடைய ஹரீஷ் ராவத்தை முதல்வராக்கியது.
 ஹரீஷ் ராவத் முதல்வராக்கப்படாமல் இருந்திருந்தால், இப்போது நடந்திருக்கும் கட்சித் தாவலும், உள்கட்சிக் குழப்பமும் அப்போதே ஏற்பட்டிருக்கும். ஹரீஷ் ராவத் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவையோ அவருக்கு நெருக்கமானவர்களையோ தனது அரசில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார். விஜய் பகுகுணா ஆதரவாளர்கள் ஒரேயடியாக ஒதுக்கப்பட்ட நிலையில், அவர்கள் இப்போது ஹரீஷ் ராவத்துக்கு எதிராகக் களமிறங்கி இருக்கிறார்கள்.
 முதலிலேயே, காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்களை ஜனநாயக முறையில் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கட்சி மேலிடம் அனுமதித்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. காங்கிரஸ் கட்சித் தலைமையின் கட்டுப்பாடும் அதிகாரமும் பலவீனப்பட்டு விட்டிருப்பதன் அறிகுறியாக, தமிழ்நாடு, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், இப்போது உத்தரகண்ட் என்று பல்வேறு மாநிலங்களில் ஒன்றன்பின் ஒன்றாக பிளவுகள் ஏற்பட்டுவருவதைக் கருத இடமிருக்கிறது.
 இதுபோன்ற காங்கிரஸ் உள்கட்சிக் குழப்பங்களில் தேவையில்லாமல் தலையிட்டுக் குழம்பிய குட்டையில் ஆதாயம் தேடும் முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபடுவது, அந்தக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. எத்தனை மாநிலங்களில் ஆட்சி அமைத்தோம் என்பதைவிட எப்படி ஆட்சி செய்தோம் என்பதுதான் பெருமை சேர்க்கும், மக்களின் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று பா.ஜ.க. தலைமைக்கு யாராவது சொன்னால் தேவலாம்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT