ஒவ்வொரு அழைப்பு முறிவுக்கும் (கால் டிராப்) ரூ.1 இழப்பீடு வீதம், ஒரு நாளைக்கு ஒரு நுகர்வோருக்கு அதிகபட்சம் ரூ.3 இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்த போதிலும், மத்திய அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதால், இன்னும் சிறிது நம்பிக்கையும் நுகர்வோர் நியாயம் பெறும் வாய்ப்பும் நீடிக்கவே செய்கிறது. மத்திய அரசு மற்றும் "டிராய்' தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களும், முன்வைக்கப்பட்ட ஆவணங்களும் வலுவானதாக இல்லாமல் போனதால்தான் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது என்பது வெளிப்படை.
அழைப்பு முறிவுக்கு இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இரண்டு வாதங்களை முன்வைத்தன. 1. அபராதத் தொகையை நிர்ணயிப்பது ஒழுங்காற்று ஆணையத்தின் வரம்புக்குள் வராது. 2. அழைப்பு முறிவு ஏற்படக் காரணம், சேவைக் குறைபாடு மட்டுமன்றி வேறு பல காரணங்களும் உள்ளன. அதாவது, நுகர்வோர் பயன்படுத்தும் கைப்பேசியின் தரம், நுகர்வோர் பேச விருப்பமின்றி தாமாகவே துண்டித்தல் போன்ற தொழில்நுட்பம் சாரா குறைபாடுகளும், மழை, புயல் போன்ற இயற்கை சூழலாலும் ஏற்படுகின்றன. ஆகவே, தொலைபேசி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு குறைபாட்டை மட்டுமே சுட்டுவது பொருந்தாது என்பதே இவர்கள் முன்வைத்த வாதங்கள்.
இதற்கு "டிராய்" மற்றும் அரசுத் தரப்பில் வலுவான எதிர்வாதங்கள் அமையவில்லை. தொழில்நுட்பம் சாராத குறைபாடுகளால் அழைப்பு முறிவு சாத்தியம் என்றாலும், அவற்றின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்பதையும், தற்போதைய சிக்கல் முழுக்க முழுக்க சேவைக் குறைபாட்டினாலேயே நேர்கிறது என்பதையும் விரிவாக எடுத்துரைக்க போதுமான வாய்ப்புகள், மாதிரி சான்றுகள் "டிராய்' வசம் உள்ளன.
அழைப்பு முறிவு என்பது மொத்த அழைப்பில் 2% வரை அனுமதிக்கப்படலாம் என்று "டிராய்' அளவை நிர்ணயித்திருந்த போதிலும், தில்லி மற்றும் மும்பையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட களஆய்வில் இரு நகரங்களிலும் அழைப்பு முறிவுகள் முறையே 17.29%, 5.56% ஆக இருந்தன. தொலைபேசி சேவை நிறுவனங்கள் முன்வைக்கும் வேறு காரணங்களால் ஏற்படும் அழைப்பு முறிவு அளவை 50% என்றே வைத்துக்கொண்டாலும், "டிராய்' நிர்ணயித்த அளவைவிட அதிகமான அழைப்பு முறிவுகள் ஏற்படுகின்றன என்பதே தெளிவு.
நாளொன்றுக்கு ரூ.250 கோடி வர்த்தகம் நடத்தும் இந்த நிறுவனங்கள், அடுத்து நடைபெறவுள்ள அலைக்கற்றை ஏலத்தில் குறைந்தபட்சமாக ரூ.5.36 லட்சம் கோடி முதலீடு செய்யப்போகின்றன. ஆனால், தரமான சேவைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முதலீடுகளைச் செய்யவில்லை என்பதை "டிராய்' தெளிவாக எடுத்துரைக்கவில்லை. கடந்த 15 மாதங்களில் 2 லட்சம் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நகரங்களில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு இருப்பதால் கூடுதலான எண்ணிக்கையில் அமைக்க இயலவில்லை என்றும் கூறும் தொலைபேசி நிறுவனங்களிடம் இரண்டு கேள்விகளை நீதிமன்றத்தில் "டிராய்' முன்வைத்திருக்க வேண்டும்:
= "வை-ஃபை' சேவை வழங்குவதற்காக, கூகுள் நிறுவனத்தின் "புராஜக்ட் லூன்' (அதாவது, பலூன்களை தரையிலிருந்து 18 கி.மீ. உயரத்தில் நிறுத்தி, அதன் மூலம் நுகர்வோருக்கு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குதல்) திட்டத்தைப் போல, தனியார் தொலைபேசி நிறுவனங்களால் ஒவ்வொரு நகரத்திலும் இத்தகைய வசதியை அளிக்க முடியாதா?
= சென்னையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின்போது பி.எஸ்.என்.எல். தவிர, மற்ற அனைத்து செல்லிடப்பேசி கோபுரங்களும் செயல்படாமல் போனதற்குக் காரணம் என்ன? கட்டடத்தின் மேல்மாடியில் இருந்த இந்த கோபுரங்களுக்குள் வெள்ளம் புகவில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். இவை செயல்படாததற்கு காரணம் மின்சாரம் இல்லை என்பதும் அறிந்த ஒன்றே. ஆனால், 48 மணிநேரத்துக்கு ஒரு செல்லிடப்பேசி கோபுரம் இயங்குவதற்கான மின்கலன்கள் (யு.பி.எஸ்.) வசதியைக்கூட இவர்கள் அமைக்கவில்லை அல்லது அது முறையாக செயல்படவில்லை என்றால், இவர்களது சேவை எத்தகையது?
அழைப்பு முறிவுக்கு இழப்பீடு வழங்குவதால் தொலைபேசி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.800 கோடி செலவு நேரிடலாம் என்று "டிராய்' குறிப்பிட்டது. ஆனால், தொலைபேசி நிறுவனங்களோ, அபராதத்தொகை ரூ.54,000 கோடியாக இருக்கும் (அழைப்பு முறிவு எண்ணிக்கை "டிராய்' கணித்ததைவிட அதிகம் என்பதை அவர்களே தங்களை அறியாமல் ஒப்புக்கொள்கிறார்கள்) என்று நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்தன.
அபராதம் கூடாது, அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதுதான் தொலைபேசி நிறுவனங்களின் அச்சம் என்றால், இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக, ஒவ்வொரு அழைப்பு முறிவுக்கும் ஈடாக ஓர் அழைப்பை இலவசமாக வழங்கலாம் என்று "டிராய்' முன்வைத்த யோசனையை ஏற்றிருக்கலாமே!
அழைப்பு முறிவு விவகாரத்தில் தொலைபேசி நிறுவனங்களின் சேவைக் குறைபாடு வெளிப்படையானது. மேல்முறையீட்டில் இதை அரசும் "டிராயும்' அம்பலப்படுத்த வேண்டும்.
பணம் தண்ணீராக செலவழிகிறது என்பதுபோல், செல்லிடப்பேசியில் அவசியமே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதாலும், அழைப்பு முறிவுபடாமலும் பொதுமக்களின் நேரம் விரயமாகிக் கொண்டிருக்கிறது; பணம் காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது. இதையாரும் உணர்வதாகத் தெரியவில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.