தலையங்கம்

வருமுன் காப்போம்!

போர்க்காலத் தயார் நிலைமையைப் பொருத்தவரையில் இந்தியா எப்போதுமே "வந்தபின் காப்போம்' என்கிற மனநிலையில் தொடர்வது வேதனைக்குரியது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. 1962-இல் சீனப் படையெடுப்பு நடந்தபோது, இந்திய எல்லைக்குள் நுழைந்து நமது பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருந்த செய்தியே, பல மாதங்களுக்குப் பிறகுதான் தில்லிக்குத் தெரிந்தது என்றால் எந்த அளவுக்கு நாம் எல்லைப்புறப் பாதுகாப்பில் கவனமாக இருந்தோம்

ஆசிரியர்

போர்க்காலத் தயார் நிலைமையைப் பொருத்தவரையில் இந்தியா எப்போதுமே "வந்தபின் காப்போம்' என்கிற மனநிலையில் தொடர்வது வேதனைக்குரியது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. 1962-இல் சீனப் படையெடுப்பு நடந்தபோது, இந்திய எல்லைக்குள் நுழைந்து நமது பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருந்த செய்தியே, பல மாதங்களுக்குப் பிறகுதான் தில்லிக்குத் தெரிந்தது என்றால் எந்த அளவுக்கு நாம் எல்லைப்புறப் பாதுகாப்பில் கவனமாக இருந்தோம் என்பது புரியும். அந்த நிகழ்வில் முறையாகப் பாடம் படித்திருந்தால், அதற்குப் பிறகாவது நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி இருப்போம்.
 1999-இல் பாகிஸ்தான் ராணுவத்தின் துணையோடு பயங்கரவாதிகள் பலர் கார்கில் பகுதியில் ஊடுருவி இந்திய எல்லையில் 130 கி.மீ. முதல் 200 கி.மீ. நிலப்பரப்பைக் கைப்பற்றிய பிறகுதான், தில்லிக்கு ஊடுருவல் நடைபெற்ற செய்தியே தெரியும் என்றால் நாம் எந்த அளவுக்கு சீனப் போரிலிருந்து பாடம் படித்தோம் என்பது தெரியும். இந்திய ராணுவம் அந்தப் பயங்கரவாதிகளை எதிர்கொண்டு அகற்றியதா, இல்லை அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் பாகிஸ்தான் ராணுவம் அவர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டதா என்பது இன்றுவரை விவாதப் பொருளாகவே தொடர்கிறது.
 சீனப் போரிலும், கார்கில் ஊடுருவலிலும்கூட நாம் பாடம் படிக்கவில்லை என்பதை பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது.
 சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் சாலைகள் அமைத்து ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்கிற இந்தியாவின் திட்டம் செயல்படாமல் முடங்கிப்போய்க் கிடக்கிறது. 2006-07இல் இந்திய - சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் 73 சாலைகளை அமைப்பது என்று திட்டமிடப்பட்டது. இந்த 73 சாலைகளும் 2012-க்குள் அமைக்கப்பட வேண்டும் என்பது போர்த்திறம் (ஸ்ட்ராடஜி) சார்ந்த திட்டம்.
 பத்தாண்டுகளாகியும், பல கால நீட்டிப்புகளுக்குப் பிறகும் 21 சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு முக்கியமான சாலைகளை அமைப்பதற்கான பணியே இன்னும் தொடங்கவில்லை. இந்த சாலைகளை அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் எல்லைப்புறச் சாலையமைப்பு நிறுவனம் 2020-இல்தான் அத்தனை சாலைகளையும் போட்டு முடிப்பது சாத்தியம் என்று தெரிவித்திருக்கிறது.
 2006-இல் அறிவிக்கப்பட்ட 73 சாலைகளை இன்னும் போட்டு முடிக்கப்படாத நிலையில் மத்திய உள்துறை அமைச்சரகம், இந்திய - சீன எல்லையில் மேலும் 55 சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் இடையே தகவல் பரிமாற்றம் இல்லாமல் இருப்பதை இது வெளிச்சம் போடுகிறது.
 எல்லைப்புறத்தில் புதிதாக சாலைகள் அமைப்பது என்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். அதேநேரத்தில், எல்லைப்புறச் சாலையமைப்பு நிறுவனத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, அதன் மெத்தனத்துக்கான காரணங்களை அறிந்து தீர்வு கண்ட பிறகுதானே, புதிய சாலைகளை அமைக்கும் பொறுப்பை அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க முடியும்?
 எல்லைப்புறச் சாலையமைப்பு நிறுவனத்திற்கான நிதி ஒதுக்கீடு, கோரிய அளவில் தரப்படாததுதான், சாலை அமைக்கும் பணியில் அந்த நிறுவனம் மெத்தனமாக செயல்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. 2016-17க்கான நிதியாண்டில் அந்த நிறுவனம் கோரிய ரூ.5,044 கோடி, வெறும் ரூ.3,075 ஆகக் குறைக்கப்பட்டது. எந்த அடிப்படையில் குறைக்கப்பட்டது என்பதற்கு நிதியமைச்சகத்திடமிருந்து விளக்கம் எதுவும் இல்லை.
 நாம் இப்படி மெத்தனமாக இருக்கும் வேளையில், சீனா பெரிய அளவில் சாலை, ரயில் போக்குவரத்தை திபெத் பகுதியில் ஏற்படுத்திவிட்டிருக்கிறது. இப்போது இந்திய எல்லையை நோக்கி சாலைகளையும், ரயில் பாதைகளையும் மும்முரமாக அமைத்து வருகிறது. அதுமட்டுமல்ல, எல்லைப்புறப் பகுதிகளில் விமான தளங்களையும் அமைத்திருக்கிறது சீனா.
 நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது, எல்லைப்புறச் சாலைகள் குறித்து சுறுசுறுப்பாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள். சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய இந்திய - சீன எல்லையின் வளர்ச்சிப் பணிகளுக்காக 100 கி.மீ. தூரத்திற்கான சுற்றுச்சூழல் நிபந்தனைகளைத் தளர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் ஏறத்தாழ 6,000 கி.மீ. நீளத்திற்கு, தனது எல்லைக்கு உள்பட்டது என்று சீனா கோருகின்ற அருணாச்சல பிரதேசத்தில் சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியும். அந்த சுறுசுறுப்புக்கு நிதியமைச்சகத்தின் ஒத்துழைப்புக் கிடைக்காததுதான் சாலையமைப்பு தொடர்ந்து நடைபெறாததற்குக் காரணம்.
 நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை எல்லைப்புறச் சாலைகள் அமைக்கும் நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. சீனா இந்த அளவிற்கு சாலைகள், ரயில் பாதைகள், விமான தளங்கள் என்று தனது எல்லையில் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி இருப்பதைப் பார்த்தாவது இந்திய அரசு விழித்துக் கொண்டு செயல்படாமலிருப்பது இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்.
 இனிமேலாவது, நமது "வந்தபின் காப்போம்' மனநிலையிலிருந்து விடுபட்டு பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில் "வருமுன் காப்போம்' கொள்கையை இந்தியா கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT