தலையங்கம்

என்னவாகும் காங்கிரஸ்?

தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் அ.தி.மு.க.வும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. அஸ்ஸாமில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது.

ஆசிரியர்

தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் அ.தி.மு.க.வும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. அஸ்ஸாமில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. கேரளத்திலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. புதுச்சேரியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் வேளையில், இந்த ஐந்து சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தில்லி, பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விகளிலிருந்து பாடம் படித்த பா.ஜ.க., வெற்றி வியூகம் வகுத்து அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் மூன்று இடங்களையும், கேரளத்தில் ஓர் இடத்தையும் பெற்றிருப்பது அல்ல பெரிது. இந்த இரண்டு மாநிலங்களிலும் கணிசமாகத் தனது வாக்கு வங்கியை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.

தில்லியிலும், பிகாரிலும் செய்ததுபோல பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தித் தனது தேர்தல் வியூகத்தை வகுக்காமல், அஸ்ஸாமில் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சர்வானந்த சோனோவாலை முதல்வர் வேட்பாளராக அறிவித்துப் பிரசாரத்தை மேற்கொண்டது பா.ஜ.க. அதுமட்டுமல்ல, அஸ்ஸாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி போன்ற மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியும் அமைத்தது. 1985 முதல் அஸ்ஸாமில் இருந்துவரும் வங்கதேச அகதிகளின் ஊடுருவல் பிரச்னையைத் தேர்தலில் விவாதப் பொருளாக்கி வெற்றியும் பெற்றுவிட்டது.

வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமுக்குள் ஊடுருவும் முஸ்லிம் அகதிகளுக்கு தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆதரவு அளித்துவந்தது. அவர்களைத் தனது வாக்கு வங்கியாக்கித் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் தருண் கோகோய். இதனால், 16%-ஆக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை 34%-ஆக அதிகரித்தது. அஸ்ஸாமியர்கள் மத்தியில் தாங்கள் சிறுபான்மையினராகி விடுவோமோ என்கிற அச்சம் நீறு பூத்த நெருப்பாக இருந்துவந்தது. அதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன பா.ஜ.க.வும், இந்தப் பிரச்னையை முன்வைத்துப் போராடிவந்த அஸ்ஸாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி கட்சிகளும்.

இடதுசாரிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தலைமைக்கு ரகசிய உறவு இருக்கிறது என்று குற்றம் சாட்டித்தான் மம்தா பானர்ஜி காங்கிரஸிலிருந்து பிரிந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அவரது கூற்றை மெய்ப்பிப்பதுபோல இடதுசாரிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர். அதுவே முதல்வர் மம்தாவுக்கு சாதகமாக மாறியது.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, முன்பு காங்கிரஸும், இப்போது மம்தாவின் திரிணமூல் காங்கிரஸும்தான் சிறுபான்மையினர் ஆதரவுக் கட்சியாகச் செயல்படுபவை. இடதுசாரிகள்தான் அங்கே பெரும்பான்மை இந்துக்களின் கட்சியாகக் கருதப்பட்டு வருகிறது. தேர்தல் களத்தில் பா.ஜ.க. ஒரு சக்தியாக வலுப்பெறத் தொடங்

கியது முதலே, இடதுசாரிகளின் வாக்கு வங்கி சரியத் தொடங்கிவிட்டது. இந்த முறை பா.ஜ.க. மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும் அதன் வாக்கு வங்கி 5.1% இல் இருந்து 12% ஆக உயர்ந்துவிட்டிருக்கிறது. இதில் கணிசமான வாக்குகள் இடதுசாரிகளுக்குக் கிடைத்துவந்த வாக்குகள் என்பதுதான் திரிணமூல் காங்கிரஸின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.

மேற்கு வங்கத்தைப் போலவே, கேரளத்திலும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிதான் பிற்

படுத்தப்பட்ட, பட்டியல் இன இந்துக்களின் ஆதரவு பெற்ற கூட்டணி. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட ஈழவர் சமுதாயத்தினரில் பெரும்பாலானோர் இடதுசாரி ஆதரவாளர்கள். கிறிஸ்தவர்களின் கட்சியான கேரள காங்கிரஸும், முஸ்லிம் லீகும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள். கேரளத்தில் 18% கிறிஸ்தவர்களும், 27% முஸ்லிம்களும் இருக்கிறார்கள். இந்த 45% சிறுபான்மையினரின் ஆதரவும், உயர்ஜாதி நாயர் சமுதாய ஆதரவும்தான் காங்கிரஸ் கூட்டணியின் பலம்.

ஈழவ சமுதாயத்தினரைத் தனது பக்கம் இழுக்க பா.ஜ.க. பெரும் முயற்சி எடுத்தும்கூட, அது இடதுசாரிகளின் வாக்கு வங்கியைப் பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் சார்பும், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் அமைத்த கூட்டணியும் நாயர் சமுதாயத்தினரை வெறுப்பேற்றியது. ஒட்டுமொத்தமாக நாயர் வாக்கு வங்கி பா.ஜ.க.வுக்கு மாறியபோது, காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வலுவிழந்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கு இதுதான் காரணம்.

புதுச்சேரியில் தி.மு.க.வுடன் அமைத்துக் கொண்ட கூட்டணி, ஆட்சியைக் கைப்பற்ற உதவியிருக்கிறது. படுதோல்விக்கு நடுவிலும் புதுச்சேரி வெற்றி, காங்கிரஸுக்கு சற்று ஆறுதல் அளிக்கும், அவ்வளவே.

இந்தத் தேர்தல் மூன்று தெளிவான செய்திகளை உணர்த்துகிறது. மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது என்பது முதலாவது செய்தி. கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் ஏறத்தாழ 15% வாக்குகள் பெறுமளவுக்கும், அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கும் பா.ஜ.க. தனது செல்வாக்கையும் வாக்கு வங்கியையும் விரிவுபடுத்தி இருக்கிறது என்பது இரண்டாவது செய்தி. மூன்றாவது முக்கியமான செய்தி, காங்கிரஸ் தனது தேசிய முக்கியத்துவத்தை இழந்து வருகிறது என்பது. இப்படியே போனால், காங்கிரஸின் வருங்காலம் என்ன என்பதுதான் தேர்தல் முடிவுகள் எழுப்பும் மிகப்பெரிய கேள்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT