தலையங்கம்

இதுதான் இந்தியா!

அது நடந்து 33 ஆண்டுகள் கடந்து விட்டது. 1984 டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை வேளையில் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் பூச்சி மருந்து தயாரிப்புத் தொழிற்சாலையில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்தும்

ஆசிரியர்

அது நடந்து 33 ஆண்டுகள் கடந்து விட்டது. 1984 டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை வேளையில் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் பூச்சி மருந்து தயாரிப்புத் தொழிற்சாலையில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்தும் அதனால் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டதும் உலக சரித்திரத்தில் அழிக்கவே முடியாத துயர நிகழ்வு. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் இறந்து விட்டனர். பலர் அந்த பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முழுமையான இழப்பீடு கிடைத்ததா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமாவது கிடைத்ததா என்றால், இதுவரையில் இல்லை.
அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். விஷவாயு விபத்து நிகழ்ந்து 33 ஆண்டுகள் கடந்தும், மூடிக் கிடக்கும் போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் 336 டன் ஆபத்தான நச்சுக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றனவே, அவை இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறதே, இதற்கு யார் பொறுப்பு? இந்தப் பொறுப்பற்றத்தனத்தை என்னவென்று சொல்வது?
மக்களவையில் சில பொறுப்புள்ள, சமூக அக்கறையுள்ள உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மக்களவையில் போபால் விஷவாயுக் கசிவுப் பிரச்னை எழுப்பப்பட்டபோது, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் மாதவ் தவே, இன்னும் 336 டன் நச்சுக் கழிவுகள் பூட்டிக் கிடக்கும் யூனியன் கார்பைட் தொழிற்சாலை வளாகத்தில் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அந்த நச்சுக் கழிவுகளை அகற்ற மத்திய, மாநில அரசுகள் ஏதாவது முயற்சி எடுத்திருக்கின்றனவா என்கிற கேள்விக்கு, அதற்காக எந்தவித நிதியும் கோரவில்லை என்றும், அந்த நச்சுக் கழிவுகளை அகற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை என்றும் பதில் வந்திருக்கிறது. அதை அகற்றுவதற்குத் தகுந்த தொழில்நுட்பத்தைக் கண்டடைவதற்கு, அரசுக்கு 33 ஆண்டுகளாகியும்கூட இன்னும் எதுவும் புலப்படவில்லை.
அரசுக்குக் கிடைத்த ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 10 டன் கழிவுகளை அகற்ற முற்பட்டதாகவும், அதே முயற்சியைத் தொடர நினைப்பதாகவும் இணை அமைச்சர் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். இப்படி பத்துப் பத்து டன்களாக மீதமுள்ள 326 டன்களையும் அகற்ற எத்தனை ஆண்டுகளாகும் என்பதை நினைத்தால், திகைப்புதான் மேலிடுகிறது.
33 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த அந்த கோரமான விபத்தில் உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் மேல். அடுத்த சில நாள்களில் மேலும் சில ஆயிரம் பேர் இறந்தனர். பல்வேறு உடல் ஊனமும், பாதிப்புமாக லட்சக்கணக்கானவர்கள் தொடர்ந்து அவதியுடன் தங்களது எஞ்சிய காலத்தைக் கழித்தனர். போபால் விஷவாயுக் கசிவுக்குப் பிறகு பிறந்த பல குழந்தைகள் மூளை வளர்ச்சி இல்லாமலும், ஊனத்துடனும் பிறந்தன என்பது அதைவிடப் பெரிய கொடுமை.
இன்னும்கூட, அந்த விபத்துக்குப் போதிய இழப்பீடு தரப்படாமல் பாதிக்கப்பட்டவர்கள் இழுத்தடிக்கப்படுவது போதாதென்று, நச்சுக் கழிவுகளைக்கூட அகற்றாமல் நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறதே, இது குறித்து ஏன் யாரும் கவலைப்படாமல் இருக்கிறோம்? குறைந்தபட்சம், அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் எந்த அளவுக்கு நச்சு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும், அப்படி இருக்குமானால் அது இன்றைய தலைமுறையினரையும், வருங்கால சந்ததியினரையும் எப்படி பாதிக்கக்கூடும் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியது அரசின் பொறுப்பில்லையா?
42 டன் மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற நச்சு வாயுவால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் இன்னும்கூட அந்தப் பகுதியில் வாழ்பவர்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. தனியார் ஆய்வுகள் தரும் புள்ளிவிவரங்கள் அச்சுறுத்துகின்றன. சாதாரண மக்களைவிட போபால் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம். தொழிற்சாலை வளாகத்தில் நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றையும், நிலத்தடி நீரையும் மாசுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த ஆய்வின் முடிவுகள் 33 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தொழிற்சாலையில் இருந்து 326 டன் நச்சுக் கழிவு அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பது மட்டுமே பிரச்னையல்ல. பூட்டிக் கிடக்கும் அந்தத் தொழிற்சாலையில் நச்சுக் கழிவுகள் சேமிக்கும் மூன்று குளங்களும், தொழிற்சாலை செயல்பட்டுக் கொண்டிருந்தபோது சேரும் நச்சுக்கழிவுகளை மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட இடங்களும் அப்படியே இருக்கின்றன. அந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறது. இதற்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து ஆறேழு முறை சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். ஆனால், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் இது குறித்து மறந்து விடுகின்றனர்.
உலகில் உள்ள பல நாடுகளில், இதுபோன்ற விஷக் கழிவுகளை அகற்றவும், அவற்றின் நச்சை அகற்றவும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இதுகுறித்து உண்மையான அக்கறை அரசுக்கு இருந்திருந்தால், போர்க்கால நடவடிக்கையில் நச்சுக் கழிவுகளை அகற்றி, நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் மேலும் பாதிக்கப்படாமல் தடுத்திருக்க முடியும். கடந்த 33 ஆண்டுகளாக மத்திய - மாநில அரசுகளுக்கு அதில் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை.
மத்தியப் பிரதேச அரசு ரூ.180 கோடியை ஒதுக்கி, ஜப்பானின் ஹிரோஷிமாவில் எழுப்பப்பட்டிருப்பதுபோல, போபாலிலும் நச்சு வாயுவால் மரணமடைந்தவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப இருக்கிறது. இதுதான் இந்தியா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT