உலகளாவிய அளவிலேயே இதயம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என்றாலும், இந்தியாவில் மாரடைப்பாலும், இதயம் சார்ந்த பிரச்னைகளாலும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளில், இதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 7% முதல் 13%. நகர்ப்புறங்களில் வாழும் இந்தியர்களும், 2% முதல் 7% கிராமப்புறத்தில் வாழும் இந்தியர்களும் இதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் இதயம் தொடர்பான பிரச்னைகளால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை லட்சத்திற்கு 235 என்றால், இந்தியாவில் அதுவே 272. அது நகர்ப்புறமோ, கிராமப் பகுதியோ, இந்தியாவில் ஏற்படும் மரணங்களுக்கு மிக அதிகமான காரணமாக இருப்பது இதயம் தொடர்பான பிரச்னைகள்தான். 2004-2006 ஆண்டுகளில் 20% ஆக இருந்த இதய நோய் மரண விகிதம் 2010-13 ஆண்டுகளில் 23% ஆக உயர்ந்தது. இந்த நிலைமை தொடருமானால், 2030}ஐ தாண்டும்போது 35.9% இந்தியர்களின் மரணத்துக்கு இதயம் சார்ந்த பிரச்னைகள்தான் காரணமாக இருக்கும்.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திலும் நான்கு பேர் இதயம் சார்ந்த பிரச்னையால் மரணமடைகிறார்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், மேலை நாடுகளிலும் அறுபது வயதைக் கடந்தவர்கள்தான் இதய நோயால், குறிப்பாக மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்றால் இந்தியாவில் 40 வயதுக்குக் கீழே இருக்கும் பலர் மாரடைப்பால் மரணமடைவது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 25 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களேகூட இந்தியாவில் மாரடைப்புக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது.
மாரடைப்பாலோ, இதயம் சார்ந்த பிரச்னைகளாலோ பாதிக்கப்படுவோரில் 4% பேர் மட்டுமே, பிறவியிலேயே இதய நோய்க்கான காரணிகளுடன் பிறக்கிறார்கள். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட இதயத்தை பாதிக்கக்கூடிய பிரச்னைகள் அதிகரித்திருப்பதும்கூட, மாரடைப்பு மரணங்களுக்கு மிக முக்கியமான காரணிகள். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை பலருக்கும் கண்டறியப்படாமலே தொடர்வதால், முடிவில் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பால் மரணமடைவோரின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும்கூட அதிகரித்து வருகிறது.
அதேபோல, புகை பிடித்தல் நுரையீரல்களை பலவீனப்படுத்தி, இதயத்துக்குப் போதிய பிராண வாயு கிடைப்பதைத் தடுக்கிறது. நமது முன்னோர்கள், மூச்சுப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமே, நுரையீரல்கள் முறையாக செயல்பட்டுப் போதிய பிராண வாயுவை ரத்தத்திற்குத் தருமேயானால் அதனால் இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படும் என்பதால்தான். நுரையீரல் பாதுகாப்புக் குறித்து நமது மூதாதையர்கள் முன்னெச்சரிக்கையாகப் பல ஆலோசனைகள் வழங்கியும்கூட அவற்றை நாம் பின்பற்றாமல் விட்டதன் விளைவுதான் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான பிரச்னைகள்.
புகை பிடித்தலைப் போலவே, மது அருந்துவது, துரித உணவுகள் என்கிற பெயரில் அதிகமாக மாமிச உணவு உண்ணுதல், மன அழுத்தம், கட்டுப்பாடோ ஒழுக்கமோ இல்லாத சீரில்லாத வாழ்க்கை முறை இவையும் இதய நோய்கள் அதிகரித்திருப்பதற்கான முக்கியக் காரணிகள். குறிப்பாக மதுப் பழக்கமும், புலால் உணவும் மாரடைப்பு மரணங்களுக்கான முக்கியக் காரணிகள் என்று கூறப்படுகிறது.
மது அருந்துவதும், புலால் உணவு சாப்பிடுவதும் நாகரிகத்தின் அடையாளமாகவும், வசதி படைத்தவர்களின் கௌரவத்துக்கு எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படும் தவறான கண்ணோட்டம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, நடுத்தரக் குடும்பங்களிலேயேகூடக் குழந்தைகளுக்குப் புலால் உணவு தருவது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மாமிசத்தில் கொழுப்பு இருப்பது போதாது என்று அதை சமைக்கும் போது சேர்க்கப்படும் எண்ணெயும் பிரச்னைக்கு வித்திடுகிறது.
குழந்தைப் பருவத்திலேயே புலால் உணவுக்குப் பழக்கப்பட்டவர் கள், பெரியவர்களானபோதும் அதைத் தொடர்வதால் முப்பது, நாற்பது வயதிலேயே ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது, ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிப்பது என்று பிரச்னைகள் ஏற்பட்டு விடுகின்றன. பெற்றோர் சிறுவயதில் கவலைப்படாமல் இருந்ததன் விளைவால் குழந்தைகள் இளமைப் பருவத்தில் பிரச்னைகளை அனுபவிக்கின்றனர்.
வள்ளுவப் பேராசான், வள்ளலார், காந்தியடிகள் என்று இந்தியாவில் தோன்றிய அத்தனை மகான்களும் தீர்க்க தரிசனத்துடன் எடுத்துக் கூறிய அறிவுரை கள்ளுண்ணாமையும், புலால் மறுத்தலும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். மேலைநாட்டு மோகத்தில் இந்த மண்ணுக்கே உரிய மாண்புகளை நாம் கைவிடுவதால் கைவரப் பெற்றிருக்கும் துன்பங்களில் ஒன்றுதான் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்கள். பள்ளிக்கூடங்கள் மதிப்பெண் தொழிற்சாலைகளாகிவிட்டதால் உடற்பயிற்சியும் குறைந்து விட்டிருப்பது, பிரச்னையை மேலும் கடுமையாக்குகிறது.
முறையான உடற்பயிற்சி, சரியான உணவுப் பழக்கம், கட்டுப்பாடான வாழ்க்கை, ஆண்டுதோறும் தவறாமல் மருத்துவப் பரிசோதனை என்பதை உறுதிப்படுத்தினால் போதும், இதயம் நல்ல வண்ணம் இயங்கும். "உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் தெரியாமலா சொன்னார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.