தலையங்கம்

ரத்தம் சிந்தலாம், வீணாகலாமா?

ஆசிரியர்

விபத்துகளுக்கு மட்டுமல்ல, அறுவை சிகிச்சை, பிரசவம் போன்ற பல்வேறு மருத்துவப் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ரத்தமாகத்தான் இருக்கும். பல நிகழ்வுகளில் உடனடியாகப் போதிய ரத்தம் உடலில் செலுத்தப்படுவதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு காப்பாற்றிவிட முடிகிறது. அகில இந்திய அளவில் நமது தேவையைவிட 25% ரத்தம் குறைவாகத்தான் ரத்த தானங்களின் மூலம் பெறப்படுகிறது.
வருடத்தின் சில மாதங்களில் தேவைக்கு அதிகமாகவும், சில மாதங்களில் குறைவாகவும் ரத்த சேகரிப்பு இருந்து வருவதுதான் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம். அதுமட்டுமல்ல, நகர்ப்புறங்களில் ரத்தம் கிடைப்பது போல கிராமப் பகுதிகளில் ரத்த தானம் செய்யும் வழக்கம் அதிகம் இல்லாததால் பல நிகழ்வுகளில் ரத்தம் கிடைக்காததால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன.
மேலை நாடுகளிலும், வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் ரத்த தானம் வழங்குவது என்பது சமூகக் கடமையாகக் கருதப்படுகிறது. பிறந்த நாள், மண நாள் போன்ற நிகழ்வுகளுக்கு நாம் கோயிலுக்கும், உணவு விடுதிகளுக்கும் போய் கொண்டாடுவதுபோல, அவர்கள் ரத்ததானம் செய்வதையும் கடமையாகக் கருதுகிறார்கள். இந்தியாவில் இன்னமும்கூட, நட்பு, உறவுக்குப் பிரச்னை ஏற்படும்போதோ, அவசரகால விபத்துகளின் போதோ மட்டுமே ரத்த தானம் செய்ய முன்வரும் போக்கு பரவலாகவே காணப்படுகிறது. யாரோ ஒருவருக்கு, எங்கோ ஓர் இடத்தில் அவசர கால உதவியாக ஒவ்வொரு நொடியும் ரத்தம் தேவைப்படுகிறது என்பதை நாம் உணர்வதில்லை.
சேதன் கோத்தாரி என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு தேசிய 'எய்ட்ஸ்' கட்டுப்பாட்டு நிறுவனம் அளித்திருக்கும் பதில் திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 30 லட்சம் யூனிட் ரத்தம் தேவையைவிடக் குறைவாகவே ரத்த தான முகாம்கள் மூலமும், தனியார் ரத்த தானத்தின் மூலமும் பெறப்படுகிறது. போதுமான விழிப்புணர்வுப் பிரசாரமும் இருக்குமானால் இந்த 30 லட்சம் யூனிட் என்பது 120 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள இந்தியாவில் பெரிய பிரச்னையே அல்ல.
ரத்த சேமிப்பைப் பொருத்தவரை, நாம் இரண்டு பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். முதலாவது பிரச்னை, தரமான ரத்தம்தான் பெறப்படுகிறதா என்பதை முறையாக சோதித்துப் பெறும் வசதிகள் இல்லாமல் இருப்பது. இரண்டாவது, இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் போதுமான அளவு ரத்த சேமிப்பு சமச்சீராக இல்லாமல் இருப்பது. ஒருபுறம் தேவையான ரத்தம் சரியான நேரத்தில் கிடைக்காததால் உயிரிழப்பு ஏற்படும்போது, இன்னொருபுறம் தேவைக்கு அதிகமான ரத்தம் சேமிக்கப்பட்டும்கூட, பயன்படுத்தாமல் வீணடிக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் முறையாக எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படாமல் இருக்கின்றன என்பதுதான் வேதனைக்குரியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 28 லட்சம் யூனிட்டுகள், அதாவது 6 லட்சம் லிட்டர், ரத்தம் பயன்படுத்தப்படாமல் வீணாக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் மட்டுமல்ல, ரத்தத்தில் காணப்படும் சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா போன்றவையும் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. சிவப்பு அணுக்களும், பிளாஸ்மாவும் பிரசவ காலத்தில் உயிர் காக்க முக்கியமான தேவைகள். சேகரித்து வைத்திருந்தும், குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்த முடியாததால் இவை வீணடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ரத்தத்தை 35 நாள்கள் மட்டுமே பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் என்றால், பிளாஸ்மாவை ஓர் ஆண்டு வரை பத்திரப்படுத்த முடியும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்மாவின் தேவை இருந்தும், முறையாக தகவல் பரிமாற்றமோ, பாதுகாப்பாக அதை எடுத்துச் செல்லும் முறைப்படுத்தலோ இல்லாததால், பிளாஸ்மா பயன்படுத்தப்படாமல் வீணாக்கப்படும் அவலம் நேரிடுகிறது. மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்தான் இதுபோல சேகரிக்கப்பட்ட ரத்தத்தை பயன்படுத்தாமல் வீணடிப்பதில் முன்னிலையில் இருக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் 288 ரத்த வங்கிகள் உள்ளன. இதில் தனியார் சேவை நிறுவனங்களும் அடக்கம். அரசு ரத்த வங்கிகளின் எண்ணிக்கை 80. 434 ரத்த சேகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. ஆண்டொன்றுக்குத் தமிழகத்தில் சராசரியாக 8.5 லட்சம் யூனிட் ரத்தம், ரத்த தான முகாம்கள் மூலமாகவும், தனியார் தன்னார்வமாகத் தருவதன் மூலமாகவும் பெறப்படுகிறது. நமது தேவை 7.2 லட்சம் யூனிட்கள்தான் என்றாலும் திடீர்த் தேவைகளை முன்னிட்டு 8.5 லட்சம் யூனிட்டுகளை சேமித்து வைத்துக் கொள்கிறோம்.
2016-இல் தமிழக அரசு ரூ.202 கோடி செலவில் சென்னை அண்ணாநகரில் அரசு, தனியார் ரத்த வங்கிகளை ஒருங்கிணைத்து செயல்படும் மையம் ஒன்றை நிறுவப் போவதாக அறிவித்தது. இந்த மையம் செயல்படக் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பிடிக்கும் என்றாலும், அப்படியொரு அமைப்பு செயல்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். சென்னையில் மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி, கோவை, வேலூர் போன்ற இடங்களிலும் ரத்த வங்கிகளை ஒருங்கிணைக்கவும், தேவையையும் சேமிப்பையும் முறைப்படுத்தவும் அமைப்புகளை ஏற்படுத்தியாக வேண்டும்.
ரத்தம் சிந்துவதைவிட வேதனையானது ரத்தம் வீணாக்கப்படுவது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ரத்தம் சரியான நேரத்தில் கிடைக்காததால் உயிரிழப்பு ஏற்படுவது என்பது தடுக்கப்பட வேண்டும். இதைக்கூட நாம் முறைப்படுத்தவில்லை எனும்போது, இந்தியாவின் வளர்ச்சி என்பது வெறும் போலித்தனம்தானோ என்று கேட்கத் தோன்றுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT