தலையங்கம்

ஆப்கானிஸ்தான் சிக்கல்!

ஆசிரியர்

மேற்கு ஆசியாவில் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா தர்மசங்கடத்தில் சிக்கியிருக்கிறது. உள்ளே மூக்கை நுழைத்துவிட்டு, இப்போது அதிலிருந்து வெளியே வர முடியாமலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமலும் தவிக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்துத் தெரிந்து கொள்ள ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ஜான் நிக்கல்சன் வரவழைக்கப்பட்டார். "செனட் ஆர்ம்ட் சர்வீசஸ் கமிட்டி' என்று அழைக்கப்படும் அந்த நாடாளுமன்றக் குழு அவரிடம் ஆப்கன் நிலைமை குறித்து விளக்கம் கேட்டது. அவரும் வெளிப்படையாகத் தனது கருத்துகளை கூறினார்.
தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருந்து ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக விடுவிக்கும் முயற்சி, தரை தட்டிய கப்பல் போல செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கக் கூட்டுப் படையின் முயற்சிகள் முற்றிலுமாக தலிபான்களின் செயல்பாட்டை முடக்கவோ, அழிக்கவோ முடியவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் வெற்றி பெறாமல் இருப்பதற்கும், அமெரிக்கப் படைகளின் முயற்சிகள் எல்லாம் முறியடிக்கப்படுவதற்கும் மிகப்பெரிய காரணம் பாகிஸ்தான்தான் என்பதை அவர் எடுத்துரைத்தார். "நமது எதிரிகள் வெளியிலிருந்து ஆதரவு பெறுவதும், அடைக்கலம் பெறுவதுமாக இருக்கும்போது, அவர்களை போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதி வெற்றி பெறுவது மிகவும் கடினம்' என்று நிலைமையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்து விட்டிருக்கிறார் ஜெனரல் ஜான் நிக்கல்சன்.
ஜெனரல் நிக்கல்சன் கருத்தை அமெரிக்காவில் பலரும் வழிமொழியத் தொடங்கி இருக்கிறார்கள். "நமது எதிரிகளான தலிபான்களுக்கு, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானில் அடைக்கலமும் பாதுகாப்பான பதுங்கும் இடங்களும் தரப்படும்போது, நமது முயற்சிகள் கடினமாவது மட்டுமல்ல, பலனளிக்காததும் கூட' என்று மிகவும் சக்திவாய்ந்த மேலவை உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானின் இரட்டை வேடம்தான் அமெரிக்க ராணுவத்தினர் தலிபான்களை முறியடிப்பதற்குத் தடையாக இருக்கிறது என்பதை அமெரிக்கா மட்டுமல்ல உலகமே உணரத் தொடங்கி இருக்கிறது.
சமீபத்தில் அறிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வெளிவிவகாரத் துறை நிபுணர்கள், முன்னாள் ராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தது. தீவிரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் தருவதற்கான வழிமுறைகளை பாகிஸ்தான் கடைபிடிக்க முடியாத அளவுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அந்த நாட்டுக்குப் பொருளாதார ரீதியாக அழுத்தம் தர வேண்டும் என்பது அந்தக் குழுவின் பரிந்துரை.
கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஆப்கன் படையினர், தலிபான்களுடனான நேரடிச் சண்டையில் 6,785 வீரர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் அதிகம். இந்த அளவுக்கு தலிபான் தரப்பில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
ஆப்கன் துருப்புகளுக்கு எதிராக தலிபான்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் ரகசியமாக உதவியும் ஆதரவும் அளித்து வருகிறது. பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்வதும், ஆப்கன் படைகள் எதிர்பாராத நேரத்தில் ஆப்கானிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்துவதும் தலிபான்களின் வழக்கமாகி விட்டிருக்கிறது.
அதனால் அமெரிக்கா மேலும் அதிக அளவு ராணுவத்தினரை ஆப்கானிஸ்தானில் குவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அப்படிச் செய்வது மிகப்பெரிய செலவுக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமல்ல, அமெரிக்க மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் ஏற்படுத்தும். பெரும்பாலான அமெரிக்கர்கள், பிற நாடுகளின் பிரச்னைகளில் அமெரிக்கா தலையிடுவதையும், அதற்காகத் தங்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதையும் விரும்புவதில்லை. அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்ததற்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.
அமெரிக்கா, தேவையே இல்லாமல் ஆப்கானிஸ்தானில் தலையிட்டு மாட்டிக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் ரஷியாவின் வசம் போய்விடக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் தலிபான்களை ரகசியமாகத் தூண்டிவிட்டது அமெரிக்காதான். இதற்கு பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டது. பிறகு, ஆப்கானிஸ்தான் சீனாவின் கைப்பாவையாகிவிடக் கூடாது என்பதற்காக, தனது ராணுவத்தை அனுப்பியது. இதையெல்லாம் செய்த அமெரிக்காவின் ஒரே தவறு, தனது செயல்பாடுகளுக்கு பாகிஸ்தானை துணைக்கு வைத்துக் கொண்டதுதான்.
பாகிஸ்தானை தனது கட்டுக்குள் வைத்திருக்க பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை தனது ஆதரவாக அமெரிக்கா வைத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கணிசமான நிதியுதவி அளித்து வருகிறது. ஊரக மேம்பாடு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்காக அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் உதவிகளை மதத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்குத்தான் பாகிஸ்தான் செலவிடுகிறது என்பது தெரிந்தும் தொடர்ந்து உதவியளித்து வருகிறது. இந்த நிதியுதவிகள் பாகிஸ்தானின் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ராணுவத்தைப் பலப்படுத்தி வருவதும் அமெரிக்காவுக்குத் தெரியும்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவி நிறுத்தப்பட்டாலே போதும், தீவிரவாதத்திற்கான பாகிஸ்தானின் ஆதரவு குறைந்துவிடும். அதைச் செய்யாமல் இருக்கும்வரை, அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT