தலையங்கம்

அமைதிக்கு சோதனை!

அண்மையில் இஸ்தான்புல்லில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், எந்த அளவுக்கு துருக்கியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஆசிரியர்

அண்மையில் இஸ்தான்புல்லில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், எந்த அளவுக்கு துருக்கியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியொன்றில் புத்தாண்டு விருந்து கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலில் 15 வெளிநாட்டினர் உள்பட 39 பேர் மரணமடைந்தனர். இதில் இரண்டு இந்தியர்களும் அடக்கம்.
2016-இல் முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பல தாக்குதல்கள் பெரிய அளவில் உயிர்ப்பலி வாங்கியிருக்கின்றன. சில நாள்களுக்கு முன்புதான், துருக்கிக்கான ரஷியத் தூதர் ஆண்ட்ரீ கார்லோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளும், குர்தீஷ் பயங்கரவாதிகளும் சம அளவில் காரணமாவார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அரசியல் ஸ்திரத்தன்மையும், அதிவிரைவாக வளரும் பொருளாதாரமுமாகக் காட்சியளித்த துருக்கி, திடீரென பாதுகாப்பு இல்லாத நிலைமைக்கும் குழப்பமான அரசியல் சூழலுக்கும் தள்ளப்பட்டதற்கு, தவறான சில முடிவுகள்தான் காரணம். அதிபர் தயிப் எர்டோகனின் சிரியா கொள்கை தோல்வி அடைந்ததுதான் மிகப்பெரிய பின்னடைவை துருக்கிக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனைய பல மேலைநாட்டு அரசுகளைப் போலவே, சிரிய அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் வீழ்ந்து விடுவார் என்று துருக்கி அதிபர் எர்டோகனும் கருதினார். அதனால், அவருக்கு எதிராகப் போராடும் புரட்சியாளர்களுக்கு மறைமுகமாக உதவி செய்ய முற்பட்டது துருக்கி.
சிறிய அளவில் தலைதூக்கி வந்த இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு ஆரம்பத்தில் உதவியது துருக்கிதான். இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் துருக்கி எல்லை வழியாக சிரியாவுக்குள் நுழைவதற்கு எர்டோகன் அரசு அனுமதித்தது. தான் செய்த தவறை உணர்ந்து இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதலை முடுக்கி விடத் துருக்கி தீர்மானிப்பதற்குள், அந்த பயங்கரவாத இயக்கம் பெரிய அளவில் வளர்ந்து சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலாக மாறி விட்டிருக்கிறது.
துருக்கி எதிர்கொள்ளும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகள் மட்டுமல்லாமல், குர்தீஷ் புரட்சியாளர்களும் காரணம் என்று கூறப்படுகிறது. அதிபர் எர்டோகனின் சிரியக் கொள்கை தோல்வி அடைந்ததற்கு அவர் குர்தீஷ் புரட்சியாளர்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது ஒரு முக்கிய காரணம்.
துருக்கிக்கும் குர்தீஷ் இனத்தவருக்கும் இடையே நீண்டநாள் போராட்ட வரலாறு இருக்கிறது. சிரியா அரசுக்கு எதிராக நீண்டநாட்களாக குர்தீஷ் இனத்தவர்கள் போராடி வருகின்றனர். சிரிய ராணுவம் எல்லைப் பகுதிகளிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டபோது, அதை குர்தீஷ் பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டு சிரியாவில் "சுதந்திர குர்தீஷ்த்தா'னை உருவாக்க முற்பட்டனர். இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான அமெரிக்கர்களின் போரில், இவர்கள் அமெரிக்க ஆதரவாளர்களாகக் களம் இறங்கினர்.
அப்படியொரு "சுதந்திர குர்தீஷ்த்தான்' அமையுமானால், அது துருக்கிக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தாக முடியக் கூடும் என்று கருதினார் அதிபர் எர்டோகன். அதனால், குர்தீஷ் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த முற்பட்டது துருக்கி அரசு. இது தவறான ராஜதந்திரமாகி விட்டது. குர்தீஷ் போராளிகளுடனான ஒப்பந்தத்தைத் துருக்கி கைகழுவியபோது, அது உள்நாட்டுப் போராக மாறிவிட்டிருக்கிறது.
இப்போது அதிபர் எர்டோகன் இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலையில் இருக்கிறார். துருக்கியின் ஆரம்ப கால ஆதரவால் வளர்ந்துவிட்டிருக்கும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தவிர்க்க முடியாதது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் குர்தீஷ் பயங்கரவாதிகளின் உள்நாட்டுப் போர். இஸ்லாமிய தேசமும், குர்தீஷ் பயங்கரவாதிகளும் மாறி மாறி எதிர்பாராத நேரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதனால் நிலைகுலைந்து போயிருக்கிறது துருக்கி.
இந்தத் தாக்குதல்களால், வளர்ந்து கொண்டிருந்த துருக்கியின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. துருக்கியின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பு
நல்குவது சுற்றுலாப் பயணிகளின் வருகை. தொடர்ந்து நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்களால், சுற்றுலாப் பயணிகள் வருவது கணிசமாகக் குறைந்து விட்டிருக்கிறது. மத்திய ஆசியா என்றாலே பயப்படும் சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அங்காரா, இஸ்தான்புல் என்கிற பெயர்களைக் கேட்டாலே பயப்படுகிறார்கள்.
"கான்ஸ்டாண்டிநோபில்' என்று சரித்திரத்தில் அறியப்படும் இஸ்தான்புல்தான் துருக்கியிலேயே அதிக மக்கள் வசிக்கும் நகரம். ஏறத்தாழ ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்த நகரம்தான் ஐரோப்பாவிலேயே பெரிய நகரம். உலக அளவில் ஏழாவது பெரிய நகரம். ஐரோப்பாவும் ஆசியாவும் இணையும் இடத்தில் இருக்கும் இஸ்தான்புல் இப்போது பீதியில் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம்தான் அதிபர் எர்டோகனுக்கு எதிரான ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது. மேற்காசியாவில் நிகழும் குழப்பத்தின் மையப்புள்ளிகளாகத் திகழும் துருக்கியும், சிரியாவும் இஸ்லாமிய பயங்கரவாத இனத்தவர்களின் பிடியிலிருந்து தப்பித்து, எப்படி உலகத்தில் அமைதியை ஏற்படுத்தப் போகின்றன என்பதற்கு விடையில்லை. அதற்கு விடை கிடைக்காதவரை உலகிற்கும் அமைதி இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

SCROLL FOR NEXT