தலையங்கம்

விருதும் விவாதமும்!

வழக்கம்போல இந்த ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன

ஆசிரியர்

வழக்கம்போல இந்த ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டிஷ் மன்னராட்சியில் வழங்கப்படும் பட்டங்களுக்கு நிகரான பட்டங்களை, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு வழங்கி கௌரவிப்பது என்பதில் தவறு காண முடியாது.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது அரசு தரப்பின் கருத்து. அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ முடியாது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்குத் தகுதியான 4,000 பேருக்காக ஏறத்தாழ 18,000 பரிந்துரைகள் பெறப்பட்டன. அதிலிருந்து 89 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பல அடுக்குப் பரிசீலனைக்குப் பிறகு, எல்லா மாநிலங்கள், எல்லா துறையினரும் இடம் பெறும் வகையில் பத்ம விருதுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியலைப் பொருத்தவரை ஆறுதலளிக்கும் விஷயங்கள் சில இருக்கின்றன. வழக்கமாக, திரையுலகப் பிரபலங்கள்தான் கணிசமான அளவு பத்ம விருது பட்டியலில் இருப்பார்கள். இந்த ஆண்டு அவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவு. அடுத்தபடியாக, தில்லியைச் சேர்ந்த பணக்காரப் பிரபலங்கள் தங்களது செல்வாக்கால் அதிக அளவு பத்ம விருதை வாங்கி விடுவார்கள். இந்த ஆண்டு அவர்களும் மிக மிகக் குறைவாகவே பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதுவரை மகிழ்ச்சி.
எதிர்க்கட்சித் தலைவர்களான சரத் பவாருக்கும், முன்னாள் மக்களவைத் தலைவராக இருந்த மறைந்த பி.ஏ. சங்மாவுக்கும் விருது வழங்கி கௌரவித்திருப்பது சற்று மாறுதலான (ஆறுதலான?) முடிவு. தேர்தல் நடக்க இருக்கும் ஐந்து மாநிலங்களின் பிரபலங்கள் அதிகமாக பத்ம விருது பட்டியலில் இடம் பெறாமல் இருப்பதும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. கிராமப்புற இசைக்கலைஞர் கள், ஓவியர்கள், நுண்கலைஞர்கள் ஆகியோர் பரவலாக இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விருது பெறுபவர்களில் 15 பேர் வெளியில் அதிகம் தெரியாத, அதேநேரத்தில் அவரவர் துறைகளில் மிகப்பெரும் சாதனைகள் புரிந்த சாமானியர்கள். களரிப்பயிற்று மீனாட்சி அம்மாள் பத்ம விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டதா, இல்லை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் மீனாட்சி அம்மாள், அக்ரி பொம்மகெளடே, வசந்தி பிஷ்ட், பாவோதேவி போன்ற சாமானியர்களுக்கு பத்ம விருது வழங்கி கௌரவிப்பதற்காக மத்திய அரசைப் பாராட்ட வேண்டும்.
ஆனால், சில உறுத்தல்களும் பளிச்சிடுகின்றன. ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவிற்கு பத்மவிபூஷண் விருது வழங்குவது மத்திய அரசின் விருப்பம். அதைக் குறை கூறவோ, கேள்வி எழுப்பவோ தேவையில்லை. ஆனால், பிரபல பத்திரிகையாளராக, நாடகக் கலைஞராக, திரையுலகில் நடிகராக, இயக்குநராக, அரசியல் விமர்சகராக விளங்கிய சோ ராமசாமிக்கு பத்மபூஷண் விருதும், ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவுக்கு பத்மவிபூஷண் விருதும் என்பதை ஜீரணிப்பது கஷ்டமாக இருக்கிறது.
இந்த ஆண்டு பத்ம விருது வழங்கப்பட்டிருப்பவர்களில் ஆறு பேர் மறைந்துவிட்டவர்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது கௌரவிக்கத் தவறிவிட்ட மாபாதகத்தை இறந்த பிறகு விருது வழங்கி ஈடுகட்ட நினைக்கிறார்கள் என்றால், அதைவிட மடைமை வேறு எதுவும் இருக்க முடியாது. அதேபோல, வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிப்பதில் தவறு இல்லை என்றாலும்கூட, அவர்களுக்காகத் தனியான விருதை ஏற்படுத்தி வழங்குவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
1954-இல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டபோது தொடங்கியது, ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கும் வழக்கம். அப்போது, உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுவது என்கிற வழக்கம் நடைமுறையில் இருந்தது. பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி 1966-இல் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த வழக்கத்துக்கு விதிவிலக்கு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த விதிவிலக்கு பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ என்று எல்லா விருதுகளுக்கும் தரப்படலாயிற்று.
ஒருவர் மறைவைத் தொடர்ந்து விருது வழங்குவது என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு விருது வழங்கி கௌரவிப்பது என்பது அர்த்தமற்றதாக இருக்கிறது. 1956-இல் மரணமடைந்த பாபாசாகேப் அம்பேத்கருக்கு 1990-லும், 1950-இல் காலமான சர்தார் வல்லபபாய் படேலுக்கு 1991-லும் பாரத ரத்னா விருது வழங்கியதன் பின்னால் அரசியல்தான் தெரிகிறதே தவிர, அவர்களை கௌரவிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. திருபாய் அம்பானி மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குப் பத்ம விபூஷண் தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை.
இப்படியேபோனால் புத்தருக்கும், மகாவீரருக்கும் பத்ம விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்கிற நிலைமைகூட ஏற்படலாம். விருதுகள் வழங்கப்பட வேண்டும்தான். ஆனால் விருதுகள் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வாழும்போதே தரப்படாவிட்டால் அந்த விருதுகளுக்கு மரியாதை இருக்காது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல்! பாலின தேர்வு தடைச்சட்டம் - 1992

மோடி தமிழக வருகைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: நயினார் நாகேந்திரன்

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத 2 அணிகள்..! முதல் தோல்வி யாருக்கு?

SCROLL FOR NEXT