மாயாவதி இனி...
கடந்த செவ்வாய்க்கிழமை பகுஜன் சமாஜ்
கடந்த செவ்வாய்க்கிழமை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் தொடக்க நாளன்று, தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்துப் பேசுவதற்கு தனக்கு உரிய அவகாசம் தரப்படவில்லை என்கிற மிகவும் சாதாரண ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் மாயாவதி மாநிலங்களவை பதவியிலிருந்து விலகுவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் அவரது அரசியல் நிர்பந்தங்களை பகுஜன் சமாஜ் கட்சியின் இன்றைய அரசியல் நிலை குறித்த புரிதல் உள்ளவர்களால்தான் புரிந்துகொள்ள முடியும்.
403 உறுப்பினர்கள் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வெறும் 19 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது இயலாத ஒன்று. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் தனது பதவிக் காலம் முடியும்
நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் போனால், அது அவருக்கு அவமானம். அதனால்தான் மாயாவதி பதவி விலக முற்பட்டிருக்கிறார்.
இதன்மூலம் உத்தரப் பிரதேசத்திலுள்ள "சமார்' பிரிவு தலித்துகள் மத்தியில் சரிந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கை மீண்டும் பெற முடியும் என்பதுகூட அவரது நோக்கமாக இருக்கலாம்.
தலித் சமுதாயத்தைப் பொருத்தவரையில் போராளிகளைத்தான் தங்களது தலைவர்களாக அவர்கள் கருதுவார்கள் என்கிற பரவலான எண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகக் கூட இது இருக்கலாம்.
அடையாள அரசியலுக்கு சில வரம்புகள் உண்டு. அடையாளங்களும் கவர்ச்சியான கோஷங்களும் மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடுகட்டாமல் போனால் அரசியலில் பயன்படாமல் போய்விடும். மாயாவதியின் செல்வாக்குச் சரிவுக்கு இதுதான் மிக முக்கியமான காரணம். "ஸ்வாபிமான்' (சுயமரியாதை) என்கிற கோஷத்துடன் தொடங்கிய மாயாவதியின் அரசியல் செல்வாக்கு, அவர் எப்போது பகுஜன் சமாஜிலிருந்து (ஒடுக்கப்பட்ட சமுதாயம்) சர்வஜன் சமாஜுக்கு (அனைவருக்குமான சமுதாயம்) மாறினாரோ அப்போதே சரியத் தொடங்கிவிட்டது.
2007 தேர்தலில் மாயாவதி தலித்துகள், முஸ்லிம்கள், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அடங்கிய ஸ்வர்ண ஜாதியினர் கூட்டணியை ஏற்படுத்தியதுதான் அந்த வெற்றிக்குக் காரணம். அதேநேரத்தில் தங்களது வாக்கு வங்கியைப் பயன்படுத்தி தலித் அல்லாதவர்கள் பதவி சுகம் அனுபவிப்பதை தலித்துகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 2007 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது என்றாலும் தலித்துகள் மத்தியிலான அவரது செல்வாக்குச் சரிவின் தொடக்கமும் அதுவாகத்தான் இருந்தது.
அதன் நேரடி விளைவை 2009 மக்களவைத் தேர்தலில், முதல்வராக இருந்த மாயாவதி எதிர்கொள்ள நேர்ந்தது. உத்தரப் பிரதேசத்தில் முதல்வரான முதல் தலித் பெண்மணி என்கிற மிகப்பெரிய சாதனையைப் படைத்திருந்தும்கூட அவரால் தனது கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 19லிருந்து 21ஆக அதாவது இரண்டு இடங்களை மட்டுமே அதிகரிக்க முடிந்தது. தலித்துகளுக்காகப் போராடுவதன் மூலம் தனக்கென்று ஏற்படுத்திக் கொண்டிருந்த தனிச் செல்வாக்கில் சரிவு ஏற்படுவதை மாயாவதி அப்போதே உணர்ந்திருந்தால் இந்த அளவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி பலவீனப்பட்டிருக்காது.
2009 மக்களவைத் தேர்தலிலிருந்தே பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது. 2012 சட்டப் பேரவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும், 2017 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்வி தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் அந்தக் கட்சி சந்தித்த மிகப்பெரிய தோல்வி 2017 சட்டப் பேரவைத் தேர்தலில்தான்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தொடர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தாலும்கூட மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கி 20 சதவீதமாகவே தொடர்ந்து வருகிறது என்பதுதான். 2017 சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது என்றாலும்கூட அதன் 20 சதவீத வாக்கு வங்கியில் எந்தவித பாதிப்பும் இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் தலித் வாக்குவங்கியைக் குறிவைத்துப் புதிய தலித் அமைப்புகள் பல களம் இறங்கியிருக்கின்றன. "பீம் சேனா' தலைவர் சந்திரசேகர் போன்ற புதிய தலைவர்களின் பின்னால் தலித் இளைஞர்கள் அணிதிரளத் தொடங்கியிருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்ததற்குக் காரணமே தலித் வாக்குவங்கியைத் தன் பக்கம் இழுப்பதற்காகத்தான்.
தனது பதவியைத் தூக்கி எறிந்துவிட்டுப் பழைய வேகத்துடன் மீண்டும் ஒரு தலித் போராளியாக 61 வயது மாயாவதி களமிறங்கிப் போராட முற்படுகிறார் என்றுதான் தோன்றுகிறது. அவரது எதிர்பார்ப்பு வெற்றி பெறுமா என்பது அவர் பாஜகவுக்கு எதிரான அணியில் தன்னை இணைத்துக் கொள்வாரா இல்லை முன்பு போலவே தனியாகப் போராட போகிறாரா என்பதை பொருத்தே அமையும்.
தேர்தல் தோல்வியோ வெற்றியோ ஓர் அரசியல் தலைவரின் சமுதாய அரசியல் முக்கியத்துவத்தை நிரந்தரமாக பாதித்துவிடாது. அரசியலில் வெற்றியோ தோல்வியோ எதுவுமே நிரந்தரமானதல்ல. மாயாவதிக்கும் இது பொருந்தும்!