அடுத்த மாதம் 4-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதி வரை, தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் கோம்பா புத்த விகாரத்திற்கு செல்ல இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் புத்த விகாரங்களிலேயே மிகவும் பெரியது என்பதுடன் மஹாயான பெளத்த மதத்தின் புனிதத் தலங்களில் முதன்மையானதும்கூட, இந்த தவாங் கோம்பா புத்த விகாரம்.
சாதாரணமாக பெளத்த மதத்தில் மிக முக்கியமான (முதன்மையான என்றுகூடச் சொல்லலாம்) மதகுருவான தலாய் லாமா, பெளத்த மதத்தில் மிகவும் புனிதமான மடாலயத்திற்கு விஜயம் செய்வது என்பது புதிதோ, வழக்கத்துக்கு மாறானதோ அல்ல. ஆனால், அவர்தான் திபெத்திய மக்களின் தலைவரும் என்பதுதான் பிரச்னையைக் கிளப்பி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அண்டை நாடான சீனா.
1959-இல் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. சீனாவின் எல்லைக்கும் ஆளுகைக்கும் உட்பட்ட பகுதி திபெத் என்பது சீனாவின் வாதம். ஆனால் திபெத் மக்கள் தாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். பெளத்த மதத்தினரான திபெத்தியர்களுக்குத் தலாய் லாமா மத குரு மட்டுமல்ல, தங்கள் தேசத்தின் தலைவரும்கூட. நேபாளத்தையும், பூடானையும் போலத் தனி நாடாக இயங்க வேண்டும் என்று நினைத்த திபெத்தைச் சீன ராணுவம் வலுக்கட்டாயமாகத் தனது அதிகாரத்திற்குள் கொண்டுவந்தபோது, தலாய் லாமா தனது சீடர்களுடனும், விசுவாசிகளுடனும் தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
1959-இல் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இதே தவாங் கோம்பா மடாலயத்திற்குத்தான் அவர் தப்பியோடி வந்தடைந்தார். இந்தியா அவருக்கு அடைக்கலம் அளித்தது. அதே நேரத்தில், அன்றைய ஜவாஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு திபெத்தை சீனாவின் பகுதியாக அங்கீகரிக்கவும் செய்தது.
இந்தியாவைத் தஞ்சம் அடைந்த தலாய் லாமா இப்போது ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மஸ்தலா என்கிற இடத்தில், வெளிநாட்டில் இயங்கும் திபெத்திய அரசின் தலைமையகத்தை அமைத்துக் கொண்டு செயல்படுகிறார். தலாய் லாமாவின் தவாங் மடாலய விஜயம் மட்டுமே சீனாவின் எதிர்ப்புக்குக் காரணமல்ல. சீனா அருணாசலப் பிரதேசத்தையே, இந்தியாவின் பகுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை எனும்போது தலாய் லாமா விஜயம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ளும்?
சீனா, அருணாசலப் பிரதேசத்தை "தெற்கு திபெத்' என்றுதான் அதிகாரபூர்வமாகக் குறிப்பிடுகிறது. 1914-இல் தவாங் பகுதி குறித்து முத்தரப்புப் பேச்சுவார்த்தையொன்று நடந்தது. அதில் சீனா, பிரிட்டிஷ் இந்திய அரசு, திபெத் ஆகிய மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்போது சீனா திபெத்தின் மீதும், தவாங் பகுதியின் மீதும் சொந்தம் கொண்டாடி வாதிட்டது. ஆனால் அப்போது எந்தவித உடன்பாடோ, ஒப்பந்தமோ எட்டப்படவில்லை. அதுமுதல், இது பிரச்னைக்குரிய எல்லைப் பகுதி என்று சீனா அறிவித்து அதற்குச் சொந்தம் கொண்டாடி வருகிறது.
1959-இல் தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்தின் வழியாக இந்தியாவைத் தஞ்சமடைந்தது முதல், இந்தப் பகுதியின் மீது உரிமை கோருவதில் சீனா முனைப்புக் காட்டுகிறது. சொல்லப்போனால், 1962-இல் இந்தியாவின் மீது படையெடுத்ததற்கே அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதுதான் காரணம்.
தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்திற்கும் தவாங் மடாலயத்திற்கும் விஜயம் செய்வது இது ஆறாவது முறை. ஒவ்வொரு முறையும் இதேபோல, சீனா கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவிப்பதும், இந்தியா அதையும்மீறி அவரது விஜயத்தை அனுமதிப்பதும் வழக்கமாகிவிட்டது. 2009-இல் இந்தியாவைத் தஞ்சமடைந்த தலாய் லாமா தனது பொன்விழா நிகழ்வைக் கொண்டாட தவாங் மடாலயத்திற்குச் சென்றார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். அப்போதும் இதேபோல சீனா எதிர்ப்புத் தெரிவித்தது.
நரேந்திர மோடி பிரதமரானபோது தனது பதவியேற்பு விழாவுக்கு வெளிநாட்டில் செயல்படும் திபெத்திய அரசுக்கும், சீனாவால் உரிமை கொண்டாடப்படும் தைவான் நாட்டின் வர்த்தகத் தூதரகத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார். சீனாவோ, அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் சீனாவுக்கு விஜயம் செய்ய நுழைவு இசைவு வழங்குவதில்லை. இந்திய - சீனப் பேச்சுவார்த்தைகளில் எல்லாம் கடைசிநேர முட்டுக்கட்டையாக இருப்பது இந்தப் பிரச்னைதான்.
1960-இல் அன்றைய சீனப் பிரதமர் சூ என்லாயின் இந்திய விஜயத்தின்போதும், 1980-இல் சீன அதிபர் டெங் ஜியாபிங்கின் விஜயத்தின்போதும், இந்தியா மேற்குப் பகுதியில் உள்ள அக்சாய்சின் பகுதியின்மீதான உரிமையை விட்டுக் கொடுப்பதாக இருந்தால், சீனா அருணாசலப் பிரதேசத்தின் மீதான உரிமையை விட்டுத்தரத் தயாராக இருந்தது. சீனாவின் ஜின்ஜியாங் பகுதிக்கும் திபெத்துக்கும் இடையிலான முக்கியமான நிலத்தொடர்பு அக்சாய்சின் என்பதால் சீனா அதற்காக என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருந்தது. பிரதமர் நேரு அதற்கு ஒப்புக் கொள்ளாததால், அதுவே இன்றுவரை இந்திய நிலைப்பாடாகத் தொடர்கிறது.
சீனாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தலாய் லாமாவின் அருணாசலப் பிரதேச விஜயத்திற்கு அனுமதி அளித்திருக்கும் இந்திய அரசின் முடிவு வரவேற்புக்குரியது. அதேநேரத்தில் அருணாசலப் பிரதேசம் தொடர்பான எல்லைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் நாம் முனைப்புக் காட்டியாக வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.