ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கூறும் செய்தி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறது என்பது. தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர ஏனைய மூன்று மாநிலங்களிலும் தடம் பதிக்க முடியாவிட்டாலும், அதன் அசுர வளர்ச்சியை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
கடந்த ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்திலும், இப்போது மணிப்பூரிலும் பா.ஜ.க.வின் செல்வாக்கு நிலைநாட்டப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு சற்றும் எதிர்பாராதது. கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் "இந்துத்துவா' சார்ந்த கட்சியால் செல்வாக்குப் பெற முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், பா.ஜ.க. வளர்ச்சியை முன்னிறுத்தும் கட்சியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருப்பதுதான்.
தேர்தல் முடிவுகளால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் கட்சி காங்கிரஸாகத்தான் இருக்கும். பஞ்சாபில் வெற்றி பெறாமல் போயிருந்தாலோ, அல்லது ஆம் ஆத்மி கட்சி அதிகமான இடங்
களைப் பெற்றுவிட்டிருந்தாலோ காங்கிரஸின் நிலைமை மிகவும் தர்மசங்கடமாகப் போயிருக்கும். பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங்கின் தலைமையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதால், காங்கிரஸ் தலைமைக்கு எதிரான மனநிலை கட்சியில் ஏற்படாமல் இருக்கிறது.
"நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் எதிர்கொள்ள தேசிய அளவிலான செல்வாக்கும் அங்கீகாரமும் உள்ள தலைவர் யாருமில்லாத நிலையில் 2019-இல் பா.ஜ.க.வை வீழ்த்தும் எண்ணத்தைக் கைவிட்டு 2024 குறித்துத் திட்டமிட வேண்டியதுதான்' என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்திருப்பது விரக்தியினால் மட்டுமல்ல, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் அளவிலான பலசாலி அல்ல என்பதையும் மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார், அவ்வளவே.
எப்படி 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸýக்கு தி.மு.க. 41 இடங்களை ஒதுக்கியும், காங்கிரஸால் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததோ, அதே நிலைமைதான் இப்போது உத்தரப் பிரதேசத்திலும் ஏற்பட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸýக்கு சமாஜவாதி கட்சி 105 இடங்களை ஒதுக்கியது. ஆனால் காங்கிரஸால் வெறும் ஏழு இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற முடிந்திருக்கிறது. அதனால்தான், காங்கிரஸýடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் தாங்கள் மேலும் 50 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று முலாயம் சிங் யாதவ் கூறுகிறார்.
கடந்த 2012 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 11.5% வாக்குகளைப் பெற்று 28 இடங்களை வென்ற காங்கிரஸால், இந்தமுறை சமாஜவாதி கட்சியின் கூட்டணி இருந்துங்கூட வெறும் 6.2% வாக்குகளும் 7 இடங்களும்தான் பெற முடிந்திருக்கிறது. இந்திரா காந்தி காலத்திலிருந்து நேரு குடும்பத்தின் கோட்டை என்று கருதப்படும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் உள்ள பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளை இழந்திருக்கிறது என்றால் எந்த அளவிலான செல்வாக்குச் சரிவை காங்கிரஸ் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது புரியும்.
2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஆளும் கட்சிக்கு அவகாசமே அளிக்காமல் ஆரம்பம் முதல், மோடி அரசின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பது என்பதையும், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்குவது என்பதையும் எதிர்க்கட்சிக்கான அடையாளம் என்று காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கருதியதுதான் இந்த அளவுக்குக் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்திருப்பதற்கான முக்கிய காரணம்.
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவாவில் 17 இடங்களில் வென்று அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாகக் காங்கிரஸ் இருக்கிறது. ஆட்சியிலிருந்த பா.ஜ.க. பின்னடைவைச் சந்தித்து 13 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிப்படும்போதே தலா 3 இடங்களை வென்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகளான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா முன்னேற்றக் கட்சி ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு, அவற்றின் ஆதரவை பா.ஜ.க. பெற்றுவிட்டது. மேலிடத்தின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருந்த மாநில காங்கிரஸ் தலைமை சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவைக்கூட நாடாமல் இருந்தது. பா.ஜ.க. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்திரா காந்தி போன்று தேசிய அளவிலானசெல்வாக்குப் பெற்றவராக ராகுல் காந்தி இல்லை. ராகுல் காந்தியின் பிரசாரங்கள் எடுபடுவதில்லை. ஆனாலும்கூட, நேரு குடும்பத்தின் அடையாளம் இல்லாமல் காங்கிரஸே ஒருங்கிணைத்து வைப்பது இயலாது என்கிற மனநிலைதான் பரவலாகக் காணப்படுகிறது. காங்கிரஸின் பிரச்னை இதுதான். முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத் தலைமைக்கு இல்லை. தேசியத் தலைமையும் சந்தர்ப்பத்தை உணர்ந்து செயல்படுவதில்லை.
எல்லா மாநிலங்களிலும் தனிப்பட்ட செல்வாக்குள்ள தலைவர்களை முன்னிறுத்துவது அல்லது அடையாளம் காண்பது என்பதில்தான் காங்கிரஸின் வருங்காலம் அடங்கியிருக்கிறது. மோடி எதிர்ப்பு மட்டுமே காங்கிரûஸக் கரை சேர்க்காது என்பதைத்தான் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எடுத்துரைக்கின்றன.
முறையான உள்கட்சித் தேர்தல் நடத்தி, தொண்டர்கள் மத்தியில் செல்வாக்குள்ள மாநிலத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படும் நிலைமை ஏற்படாவிட்டால், ஒமர் அப்துல்லா கூறும் 2024 தேர்தலிலும்கூட காங்கிரஸால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.