தலையங்கம்

வனமா? வளர்ச்சியா?

இயற்கை மனிதனுக்கு அளித்த கொடை வனம்.

ஆசிரியர்

இயற்கை மனிதனுக்கு அளித்த கொடை வனம். ஒருமுறை காடு அழிக்கப்பட்டால் மீண்டும் அதே அளவிலான காட்டை உருவாக்க இயலாது. அப்படியே உருவாக்க முனைந்தாலும் அதற்குப் பல ஆண்டுகளும், பல தலைமுறைகளும் தேவைப்படும். இதெல்லாம் ஆட்சியாளர்களுக்கும், வளர்ச்சியின் பெயரால் வனத்தை அழித்து லாபம் ஈட்டும் தொழிலதிபர்களுக்கும் தெரியாததல்ல.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பதில் மீண்டும் அரசு தயக்கம் காட்டி காலத்தைக் கடத்தி வருகிறது. இதைப் பயன்படுத்தி அசுர வேகத்தில் காடுகள் அழிக்கப்படுவதும் சுரங்கப் பணிகள் தொடர்வதும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒருமுறை மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏறத்தாழ 57,000 சதுர கி.மீ. பரப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கலாமா என்று சுற்றறிக்கை விட்டிருக்கிறது. இந்தப் பகுதிகள் சார்ந்திருக்கும் குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய ஆறு மாநிலங்களுக்கும், அவர்களது ஆட்சேபணைகளைத் தெரிவிக்க ஆறு மாத அவகாசம் அளித்திருக்கிறது. முந்தைய அனுபவங்களை வைத்துப் பார்த்தால், இது பழையபடி விவாதத்திற்கு வழிகோலுமே தவிர பிரச்னைக்கு முடிவு கட்டாது. இடைப்பட்ட காலத்தில், முழுமூச்சில் வன அழிப்பு தொடரத்தான் இடமளிக்கும்.
2012-இல் மாதவ் காட்கில் குழு மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது முதல், எந்த அளவுக்கு வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விவாதம் தொடர்ந்து வருகிறது. காட்கில் குழுவின் அறிக்கையில் இரு முறை மாற்றம் செய்தாகிவிட்டது. கால அவகாசத்தை நீட்டிப்பதற்காக, கஸ்தூரி ரங்கன் குழுவை அமைத்துப் புதிய பரிந்துரைகளையும் பெற்றாகி விட்டது. ஆனால் முடிவு மட்டும் எட்டப்படவில்லை.
அரபிக் கடலை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் நீளம் ஏறத்தாழ 1,600 கி.மீ. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் இந்த வனப்பகுதி பாதுகாக்கப்படுவது அவசியம். இந்த வனப்பகுதியில் 1,500-க்கும் அதிகமான தாவர இனங்கள் காணப்படுகின்றன. மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், ஆமை, முதலை உள்ளிட்டவை, மேலும் பறவைகள், விலங்கினங்கள் ஆகியவற்றின் தாயகமாக இருப்பவை மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள். இங்கே புதிது புதிதாகத் தாவர இனங்களும், உயிரினங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் காரணம் காட்டித்தான் காட்கில் குழு, மேற்குத் தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி முழுமையும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டதும், அவற்றை மூன்று பகுதிகளாகப் பிரித்து எந்த அளவுக்கு வளர்ச்சிப் பணிகளை அந்தந்தப் பகுதியில் மேற்கொள்ளலாம் என்பதை விவரமாகவே தெளிவுபடுத்தி இருந்தது காட்கில் அறிக்கை. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன்படி காட்கில் அறிக்கையை செயல்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருந்தும் 2012-இல் மன்மோகன் சிங் அரசு தயக்கம் காட்டியது. காட்கில் அறிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சம், மூன்று வனப் பகுதிகளில் எந்த அளவுக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமையை அந்தந்தப் பகுதி கிராமப் பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும் என்றும், சுற்றுப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குத்தான் அதை தீர்மானிக்கும் உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டிருந்ததுதான்.
ஒருபுறம் காட்கில் அறிக்கையை முடக்க அதிகார வர்க்கமும், வளர்ச்சிப் பணி என்கிற பெயரில் வனத்தை அழித்துக் கொள்ளை லாபமீட்டும் தொழிலதிபர்களும் முழுவீச்சில் ஈடுபட்டனர் என்றால், இன்னொருபுறம் அந்த அறிக்கை ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்கிற தவறான கண்ணோட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பியது. இதுதான் தருணம் என்று மன்மோகன் சிங் அரசு கஸ்தூரி ரங்கன் குழுவை அமைத்து காட்கில் அறிக்கையை மறு ஆய்வு செய்யப் பணித்தது.
காட்கில் குழுவின் பரிந்துரைகளின் முக்கியமான அம்சங்களை எல்லாம் கஸ்தூரி ரங்கன் அறிக்கை ஒதுக்கித் தள்ளிவிட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் வெறும் 37 விழுக்காடு பகுதியை மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாக குறைத்துவிட்டது. முக்கியமான பகுதியை சுரங்கப் பணிகளையும், காடுகளை அழித்துக் குடியிருப்புகளாக்குவதையும் தடையில்லாமல் செய்தது. நல்லவேளையாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தலையீட்டால் அந்த அறிக்கை முடக்கப்பட்டது.
இது ஏதோ வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் இடையேயான மோதல் என்பதுபோலத் தவறாக சித்திரிக்கப்படுகிறது. பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதிக்கும்படியான வளர்ச்சி என்பது இடைக்காலமானதாக இருக்குமே தவிர, அதன் பின்விளைவுகள் வருங்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வனங்கள் அழிக்கப்பட்டு அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவ மழையினை பாதிப்பதுடன் பருவநிலை மாற்றத்திற்கும் வழி
கோலும். ஆயிரக்கணக்கான உயிரினங்களையும், வனத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்களையும் பாதிக்கும்.
நரேந்திர மோடி அரசு வந்தபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டும் காட்கில் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
காடுகளை அழித்து அதனால் பெறப்படும் வளர்ச்சி, கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானது என்பதுகூடவா புரியவில்லை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT