தலையங்கம்

வாழ்க நீ எம்மான்!

ஆசிரியர்

இன்று முதல் உலகம் அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டை கொண்டாட இருக்கிறது. மானுட இனத்துக்கு காந்திஜி என்கிற மாமனிதனின் மகத்தான பங்களிப்பை மீள்பார்வை பார்க்க உலகுக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, இது ஒரு வரலாற்று நிகழ்வு. 
இதற்கு முன்னால் அண்ணலின் பிறந்த நாள்கள் பல கொண்டாடப்பட்டிருக்கின்றன. 1919-இல் காந்தியடிகளின் ஐம்பதாவது பிறந்த நாள் நாடு தழுவிய அளவில் கொண்டாடப்பட்டது. 1939-இல் அண்ணல் அகவை 70-ஐ தொட்டபோதும் அன்றைய அடிமை இந்தியாவில் அவரது பிறந்த தினம் இந்திய தேசத்தின் பிறந்த தினமாகக் கருதி மக்களால் ஆராதிக்கப்பட்டது. அதேபோல காந்தியடிகளின் 75-ஆவது பிறந்த ஆண்டும், அவரது 77-ஆவது பிறந்த ஆண்டும் முக்கியமான நிகழ்வுகளாக இந்திய வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன. காந்தியடிகளின் நூற்றாண்டு விழா சுதந்திர இந்தியாவில் 1969-இல் கொண்டாடப்பட்டது.
காந்திஜியின் 70-ஆவது பிறந்த ஆண்டையொட்டி டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் காந்திஜியின் வாழ்வும் பணியும் என்கிற தலைப்பில் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நாவலாசிரியர் பர்ல் பக், சி.எஃப். ஆண்ட்ரூஸ், ரவீந்திரநாத் தாகூர், மிர்ஸா இஸ்மாயில் உள்ளிட்டோரின் கட்டுரைகளுடன் வெளிவந்த அந்தத் தொகுப்பு அத்தனை இந்திய மொழிகளிலும் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.
அதேபோல, அண்ணலின் 75-ஆவது பிறந்த ஆண்டையொட்டி பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்டித ஜவாஹர்லால் நேருவின் அணிந்துரையுடன் வெளிவந்த அந்தத் தொகுப்பில் ஆச்சார்ய கிருபளானி, கமலாதேவி சட்டோபாத்யாய, சுசீலா நய்யார், கே.ஏ. அப்பாஸ், ஓவியர் நந்தலால் போஸ் ஆகியோரின் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. அந்தத் தொகுப்பும் காந்திஜியின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி மறுபதிப்பு செய்யப்பட வேண்டும். 
காந்தியடிகள் என்கிற மாமனிதரை இரண்டு கோணத்தில் பார்க்க முடியும். அவரை நாகரிக சமுதாயத்தை ஆதரிக்காத பிற்போக்குவாதி என்றும், இன்றைய பொருளாதார முன்னேற்றத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஒவ்வாத, நடைமுறைக்கு உதவாத கொள்கைகள் என்றும் புறந்தள்ளுவோர் உண்டு. ஆனால், இன்றைய பார்மயச்சூழலாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் ஏற்பட்டிருக்கும் பின்விளைவுகளையும், பாதகங்களையும், சமூகப் பாதிப்புகளையும் சிந்தித்துப் பார்த்தால் காந்திஜியின் தொலை நோக்குச் சிந்தனை புரியும்.
காந்திஜி என்ற ஆளுமையை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர் ஆன்மிகத் தூய்மையையும் ஜனநாயக செயல் வேகத்தையும் ஒருங்கிணைத்து புதியதொரு முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்பதை வரலாறு உணர்த்துகிறது. அதனால்தான் மனித இனம் அவரை புத்தருடனும், ஏசுவுடனும், கார்ல் மார்க்ஸுடனும் இணைத்துப் பார்க்கிறது. 
மகாத்மா காந்தி என்பவர் எந்தவித அதிகாரத்தின் பின் துணையும் இல்லாமல் தனது மக்களின் ஆதரவை மட்டுமே நம்பிப் பயணித்த தலைவர். அந்த அரசியல்வாதியின் வெற்றியின் பின்னால் அவரது ஆளுமையும், மக்கள் மன்றத்தில் தனது கருத்தை உணர்த்தி ஆதரவைப் பெற முடிந்த ஆற்றலும் இருந்தது என்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
காந்தி என்பவர் தன்னை மீண்டும் மீண்டும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி சத்தியத்தின் ஆழத்தை அளவிடத் துடித்த மகான். அதனால்தான் அவரால் சத்தியாகிரகம் என்பதை சத்தியத்தின் வெளிப்பாடு என்று உலகுக்கு உணர்த்த முடிந்தது. 
வாழ்க்கையின் எல்லா தளத்திலும் அவர் சத்தியாகிரகத்தின் நடைமுறையைப் பிரயோகித்தார். வன்முறையின்மை என்கிற ஆயுதத்தின் மூலம் ஆன்மிகத்தில் ஈடுபட்ட அவர், அந்த ஆயுதத்தை இந்தியாவின் விடுதலைக்கும் பயன்படுத்தினார் என்பது மகாத்மா காந்தி என்கிற தனிநபரின் தனித்துவம். அதனால்தான் ரவீந்திரநாத் தாகூர் அவரை மகாத்மா என்றும், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் தேசப்பிதா என்றும் போற்றி மகிழ்ந்தனர்.
காந்தியடிகளின் 77-ஆவது பிறந்த ஆண்டின்போது அவருக்கு வியத்நாம் போராளி ஹோத் சி மின், பர்மாவின் சுதந்திரப் போராட்ட வீரர் ஆங் சான், பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் உள்ளிட்ட பலர் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பினர். அமெரிக்காவிலிருந்து யாரோ ஒரு சாதாரண மனிதரும் ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இன்று நான் மதிய உணவு அருந்தும்போது உங்களுக்கு வாழ்த்துக் கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. உங்கள் வாழ்க்கையால், பென்சில்வேனியா போன்ற உலகத்திலுள்ள பல்வேறு ஊர்களில் வாழும் என்னைப் போன்ற பலருடைய வாழ்க்கையும் மரியாதை பெற்றிருக்கிறது. நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய பேறு. ஜீசஸ் இன்றும் வாழ்கிறார். அவர் உங்கள் மூலம் பேசுகிறார் என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. 
நமது தினமணி நாளிதழ் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதற்காக 1934 செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கப்பட்டது என்பதால், காந்திஜியின் 150-ஆவது பிறந்த ஆண்டு நமக்கு மிக முக்கியமானது. காந்தியடிகளின் தலைமை
யிலான விடுதலைப் போரில் துணை நின்ற தினமணி, இன்று வரை அண்ணலின் அடிச்சுவட்டில் அவரது கொள்கைகளையும் கனவுகளையும் பின்பற்றி நடைபோட்டு வருகிறது. அந்த வகையில் காந்திஜியின் 150-ஆவது பிறந்த ஆண்டில் மீண்டும் ஒருமுறை அவரது கொள்கைகளின் வெற்றிக்காகப் பயணிக்க உறுதி பூணுகிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT