தலையங்கம்

இப்படியும் இருக்குமோ?

ஆசிரியர்

பதினேழாவது மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இரண்டாவது அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. அமைச்சரவை குறித்தும், அமைச்சர்களின் இலாகாக்கள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்படும் அளவுக்கு, பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள் குறித்த பார்வையோ, ஆய்வோ இல்லாமல் இருக்கிறது. 
ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்திருக்கும் மகத்தான ஆதரவால் 2014-இல் அந்தக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பலர் இன்று மக்களவை உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்கள். அதனால், ஒப்பிட்டு நோக்கும்போது 16-ஆவது மக்களவைக்கும், 17-ஆவது மக்களவைக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். 
மக்களவையின் 542 உறுப்பினர்களில் 233 உறுப்பினர்கள் முதல்முறையாக மக்களவைக்குப் போட்டியிட்டவர்கள். 277 பேர் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். 44 பேர் இதற்கு முன்னால் போட்டியிட்டும் தேர்வாகாமல், இந்த மக்களவைத் தேர்தலில் தேர்வானவர்கள். பல உறுப்பினர்கள் 
மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ஆதரவு. பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்ட 226 பேர் இந்த முறையும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவை உறுப்பினர்களில் 118 பேர் குறைந்தது மூன்று முறையும் அதற்கு அதிகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். பாஜகவைச் சேர்ந்த மேனகா காந்தி (சுல்தான்பூர்), சந்தோஷ் குமார் கங்குவார் (பரேலி) இருவரும் எட்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத ரீதியாகப் பகுப்பதாக இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவை உறுப்பினர்களில் 90.4% இந்துக்கள். கடந்த 2014-ஐவிட முஸ்லிம்கள் ஐந்து பேர் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது அவர்களது விகிதம் 4.2%-லிருந்து 5.2%-ஆக அதிகரித்திருக்கிறது. ஏனைய மதச்சிறுபான்மையினரான சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் மொத்த மக்களவை உறுப்பினர்களில் 4%. 
கடந்த மக்களவையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11.6%-லிருந்து 14.6%-ஆக அதிகரித்திருக்கிறது. எண்ணிக்கை 61-லிருந்து 78-ஆகியிருக்கிறது. 17-ஆவது மக்களவையில் அதிகரித்திருக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றின் சார்பில் கூடுதலாக மகளிர் போட்டியிட்டதும் வெற்றி பெற்றதும் முக்கியமான காரணம். பாஜகவின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30-லிருந்து 41-ஆகவும் (10% - 13%). காங்கிரஸ் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 பேரிலிருந்து 6-ஆகவும் (9%-லிருந்து 11%) அதிகரித்திருக்கிறது.
இதை மிகப் பெரிய மாற்றம் என்று கருதவோ, போற்றவோ முடியவில்லை. 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்ட 2019 மக்களவைத் தேர்தலில், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 724 மட்டுமே. பல மாநிலங்களில் ஆண்களைவிட அதிகமாகப் பெண்கள் வாக்களித்திருந்தும்கூட, வேட்பாளர்களாகவும், வெற்றி பெற்றவர்களாகவும் பங்கு பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதற்கேற்ப இல்லை என்கிற உண்மை சுடுகிறது. 
காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தாலும்கூட, மிக அதிகமான அளவில் (54) பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தது. பாஜகவின் சார்பில் ஏறக்குறைய அதே அளவில் (53) பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் 24 மகளிரும், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 23 பேரும், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் 10 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேரும் தேர்தலில் களம் கண்டனர். 222 பெண்கள் சுயேச்சைகளாகப்போட்டியிட்டனர். 
மிகப் பெரிய அளவில் பெண்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டும்கூட, 78 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. 
2009-இல் 59 மகளிரும், 2014-இல் 61 மகளிரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது மக்களவைப் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்திருக்கிறது என்பது, பாராட்டும்படியாக இல்லாவிட்டாலும் ஆறுதல் அளிக்கிறது.
இந்தியத் தேர்தல்களில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு பெண்கள் வெற்றி பெறுகிறார்கள். ஆனாலும்கூட, எந்த ஓர் அரசியல் கட்சியும் தேர்தல் பிரசாரத்தின்போதும், ஆட்சியிலும், பெண்கள் பிரச்னைகள் குறித்துப் போதிய கவனம்  செலுத்துவதில்லை. சேலை, தையல் இயந்திரங்கள் போன்ற இலவசங்கள் வழங்குதல், பணம் கொடுப்பது என்று பெண்களைக் கவர்ந்து அவர்களது வாக்குகளைப் பெற முயற்சிக்கும் அரசியல் கட்சிகள், மகளிரின் பொருளாதார முன்னேற்றம் குறித்தும், அவர்களது பிரச்னைகள் குறித்தும் கவலைப்படுவதில்லை.
மிகப் பெரிய அளவில் பெண்கள் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் படித்துப் பட்டம் பெற்றாலும்கூட, அதற்கேற்ற வேலைவாய்ப்பு இல்லாத நிலைமை காணப்படுகிறது. அகில இந்திய அளவில் மகளிரை முன்னிறுத்தி அவர்களது வேலைவாய்ப்புக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் தேவையான திட்டங்களை வகுத்து  வழிகாட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சகமோ, மகளிர் குழந்தைகள் நல அமைச்சகமோ முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை. 
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியை, இந்த முறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக நியமித்திருப்பது பலரையும் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. மகளிர் நல மேம்பாட்டுக்கு புதிய அரசு முன்னுரிமை வழங்குவதன் வெளிப்பாடாக இந்த முடிவு இருக்குமேயானால், பாராட்டுக்குரிய முடிவு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT