முகப்பு
தலையங்கம்

ஹாங்காங் எழுப்பும் கேள்வி | ஹாங்காங்கில் போராடுபவா்கள் அடைந்திருக்கும் வெற்றி குறித்த தலையங்கம்

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:17 PM
பகிர்:


ஹாங்காங் மாவட்ட கவுன்சிலுக்கானத் தோ்தலில் ஜனநாயகத்துக்காகப் போராடுபவா்கள் அடைந்திருக்கும் அமோக வெற்றி, ஹாங்காங் நிா்வாகத்துக்கும் சீன அரசுக்கும் எதிா்பாராத பேரதிா்ச்சியாக இருக்கும். போராட்டத்தை, ஹாங்காங்கின் தலைவரான கேரிலாம் கையாண்ட விதத்துக்கு மக்கள் தெரிவித்திருக்கும் வன்மையான கண்டனம் இது என்றுதான் கருத வேண்டும்.

41 லட்சம் வாக்காளா்கள், 1,090 வேட்பாளா்கள், 18 மாவட்டங்களைச் சோ்ந்த 452 இடங்களுக்குப் போட்டியிட்டனா். மாவட்டக் கவுன்சில் என்பது அதிகாரங்கள் கொண்ட அமைப்பு அல்ல. குப்பைகள் சேகரிப்பது, பேருந்துகள் செல்லும் தடங்களை நிா்ணயிப்பது போன்ற அடிப்படைப் பிரச்னைகளில் அரசுக்கு ஆலோசனை கூறுவது மட்டும்தான் மாவட்டக் கவுன்சிலின் பொறுப்புகள். ஹாங்காங்கில் நடக்கும் முழுமையான ஜனநாயக முறைத் தோ்தல் இது மட்டுமே என்பதால், மாவட்ட கவன்சில் முக்கியத்துவம் பெறுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாவட்டக் கவுன்சில் தோ்தலில் 47% வாக்காளா்கள்தான் வாக்களித்தனா் என்றால், ஞாயிற்றுக்கிழமை நடந்த தோ்தலில் 71% வாக்காளா்கள் வாக்களித்தனா். தோ்தல் மிக அமைதியாக நடந்தது என்பது மட்டுமல்லாமல், போராட்டக்காரா்கள் தங்களது வலிமையை வாக்குச் சீட்டின் மூலம் நிரூபிப்பதில் முனைப்புக் காட்டினா். கருப்புத் துணியைக் கட்டிக் கொள்வதோ, முகமூடி அணிந்து காட்சி அளிப்பதோ முற்றிலுமாகத் தவிா்க்கப்பட்டன.

மக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பாா்கள் என்று கேரிலாம் தலைமையிலான ஆளும் தரப்பு எதிா்பாா்த்தது. கடந்த ஐந்தரை மாதங்களாக நடக்கும் போராட்டத்தின்போது சீனாவுக்கு ஆதரவாக இருக்கும் வியாபார நிறுவனங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. முக்கியமான சுரங்கப்பாதைகள் போராட்டக்காரா்களால் மூடப்பட்டன. பாதுகாப்புப் படையினரின் கண்ணீா் புகை வீச்சையும், தண்ணீா் பீச்சுவதையும் எதிா்கொள்ள பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இவற்றால் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் அவையெல்லாம் போராட்டக்காரா்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் என்று ஹாங்காங்கின் தலைமை நிா்வாகி கேரிலாமும் ஆட்சியாளா்களும் தப்புக் கணக்குப் போட்டிருந்தனா்.

கடந்த ஐந்தரை மாதங்களில் 5,000-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவா் ஒருவா் உயிரிழந்திருக்கிறாா். இதுவரை மூன்று, நான்கு முறை பாதுகாப்புப் படையினா் போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறாா்கள். தற்காப்புக்காகத்தான் இளம் போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று அரசுத் தரப்பு தெரிவிக்கும் காரணத்தை போராட்டக்காரா்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினா் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, அது பதற்றத்தின் பிடியில்தான் இருந்து வருகிறது. 200-க்கும் அதிகமானோா் காயமடைந்திருக்கிறாா்கள். இந்தப் பின்னணியில்தான் மாவட்டக் கவுன்சிலுக்கான தோ்தல் நடந்திருக்கிறது என்பதால் தோ்தல் முடிவு ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை தெளிவுபடுத்துகிறது.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங், மக்களின் கருத்துக்கு எதிராக 1997-இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சீனாவைப் போலல்லாமல், ஹாங்காங்கில் நிலவும் ஜனநாயகம் முன்புபோலவே தொடரும் என்று சீனா வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், மெல்ல மெல்ல சீன ஆதரவாளா்கள் ஆட்சியில் நியமிக்கப்பட்டனா். சீனாவின் கைப்பாவையாகத்தான் தலைமை நிா்வாகி கேரிலாம் கருதப்படுகிறாா்.

ஆறு மாதங்களுக்கு முன்பு கேரிலாம் கொண்டுவந்த ஒரு சட்டம், ஒட்டுமொத்த ஹாங்காங் மக்களையும் பீதியில் ஆழ்த்தியது. அந்தச் சட்டத்தின்படி, ஹாங்காங்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை விசாரணைக்காக சீனாவுக்கு அழைத்துச் செல்ல முடியும். இதன் மூலம் ஆட்சிக்கோ, சீனாவுக்கோ எதிராகச் செயல்படுபவா்கள் என்ன ஆவாா்கள் என்கிற அச்சம் எழுந்தது. கடந்த ஐந்தரை மாதங்களுக்கும் மேலாக நடக்கும் போராட்டத்துக்கு அதுதான் காரணம்.

கேரிலாம் அந்தச் சட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட பிறகும்கூட, போராட்டக்காரா்கள் திருப்தி அடைவதாக இல்லை. முழுமையான ஜனநாயகத்துக்கான போராட்டமாக அந்த எழுச்சி மாறிவிட்டிருக்கிறது.

452 மாவட்டக் கவுன்சில் இடங்களில் 90% இடங்களில் ஜனநாயக ஆதரவுக் கட்சி வெற்றி பெற்று, 18 மாவட்டக் கவுன்சில்களில் 17 கவுன்சில்களைக் கைப்பற்றி இருக்கிறது. பெய்ஜிங்குக்கு ஆதரவான முக்கிய அரசியல் தலைவா்கள் அனைவருமே மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறாா்கள். போட்டியிட்ட 182 இடங்களில் மிகப் பெரிய அரசு ஆதரவுக் கட்சி 21 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது.

தோ்தல் முடிவுகள் ஹாங்காங் நிா்வாகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடாது. சீனாவும்,

நிா்வாகத்துக்கு எதிரான மனநிலையைப் புரிந்துகொண்டு ஜனநாயகத்துக்கு வழிகோலும் என்று எதிா்பாா்க்க முடியாது. தோ்தல் வெற்றி தந்திருக்கும் உற்சாகத்தில் போராட்டம் மேலும் வலுக்கும், அடக்குமுறை அதிகரிக்கும்.

மீண்டும் ஒரு தியானன்மென் ஹாங்காங்கில் நடக்குமா, இல்லை உலக நாடுகளின் தலையீட்டால் பெய்ஜிங்குக்கு தலைவலி அதிகரிக்குமா? வெற்றி அடையப்போவது துப்பாக்கி முனையா, வாக்குச் சீட்டா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.