முகப்பு
தலையங்கம்

மின்னணு ஆபத்து! | மின்னணுக் கழிவு குறித்த தலையங்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் இந்தியா, ஒரு முக்கியமான பிரச்னை குறித்த சிந்தனையே இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. 

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் உருவாகியிருக்கும் "வீட்டிலிருந்து வேலை பார்க்கும்' கலாசாரம், தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரித்திருக்கிறது. போதாக்குறைக்கு இணையமுறைக் கல்வியும், இணைய வர்த்தகமும் இணைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் தொழில்நுட்ப சார்பு அதிகரித்திருப்பதில் வியப்பில்லை. 

அவற்றின் விளைவாக அறிதிறன்பேசிகள், மடிக்கணினிகள், அறிதிறன் கணினிகள் போன்றவை இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு சந்தைப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்திருக்கின்றன. எல்லாமே இணைய வழியில் நடத்த முடியும் என்கிற இணைய சார்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், மின்னணுப் பொருள்களின் மீதான ஈர்ப்பும் அதிகரித்திருக்கிறது; கூடவே மின்னணுக் கழிவுகளும். 

மின்னல் வேகத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய புதிய தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள், அதற்கேற்ப தங்களையும் மேம்படுத்திக்கொள்ள பொதுமக்களைத் தூண்டுகின்றன. புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகப்படுத்தப்படும் நிலையில், உலக அளவில் மின்னணு சாதனங்கள் மேம்படுத்தப்படுகின்றன அல்லது புதிதாக வாங்கப்படுகின்றன. 

எண்மம் சார்ந்த நுகர்வோரின் மின்னணுக் கருவிகளின் சார்பு புதிய புதிய கண்டுபிடிப்புகளுடன் அதிகரிப்பதுபோல, மின்னணுக் கழிவுகளின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதில்லை. இதுதான் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்.

ஐ.நா.வின் சர்வதேச மின்னணுக் கழிவுகள் கண்காணிப்பு அமைப்பு, உலக அளவிலான மின்னணுக் கழிவு உருவாகும் நாடுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது இடத்தை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் உருவாகும் மின்னணுக் கழிவுகளுக்கு ஏற்ப அவற்றை மறுசுழற்சி செய்வதற்கோ, கையாள்வதற்கோ முயற்சி எடுக்கப்படாமல் இருப்பது மின்னணுக் கதிர்வீச்சு ஆபத்தை ஏற்படுத்துவதாக எச்சரிக்கிறது அந்த அமைப்பு.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அறிதிறன்பேசிகளின் வளர்ச்சியும் அவற்றின் குறைபாடுகளை மறைத்து விடுகின்றன. மின்னணுக் கழிவு மறுசுழற்சி என்பது இந்தியாவில் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை. இதற்காக அறிவிக்கப்பட்ட சட்டங்களும் கடுமையாக இல்லாமல் இருப்பதால் முறைசாராத மறுசுழற்சி நடைபெறுகிறதே தவிர, முறையான, திட்டமிட்ட மின்னணுக் கழிவு மறுசுழற்சி முக்கியத்துவம் பெறவில்லை.

ஆண்டுதோறும் இந்தியாவில் குறைந்தது 30 லட்சம் டன் அளவில் மின்னணுக் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் சுற்றுச் சூழலை பாதிக்காத அளவில் எட்டு லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. 

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும்கூட மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி என்பது முன்னுரிமை பெறாத நிலைதான் காணப்படுகிறது. சர்வதேச அளிவல் உருவாகும் 5.3 கோடி டன் மின்னணுக் கழிவுகளில், வெறும் 17% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட பல விலை உயர்ந்த உலோகங்கள் காணப்படுகின்றன என்பதும், அதனால் ஏறத்தாழ 62 பில்லியன் டாலர் அளவிலான இழப்பு ஏற்படுகிறது என்பதும் ஏனோ கவனம் பெறவில்லை.
கொவைட் 19 கொள்ளை நோய் காரணமாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து குறு, சிறு தொழில்முனைவோர், சிறு வியாபாரிகள் வரை தங்களது ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்குக் கூடுதலாக வன்பொருள்கள் வாங்க வேண்டி வந்ததால், நிதிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பயன்பாட்டில் இருந்த பல லட்சம் மேஜை கணினிகளும், அச்சு இயந்திரங்களும், பழைய மின்னணு உபகரணங்களும் தேவையில்லாததால் நிராகரிக்கப்பட்டன. அவையெல்லாம் மின்னணுக் கழிவுகளாக உருவெடுத்திருக்கின்றன. 

தொழில்துறையில் மட்டுமல்ல, வீடுகளிலும்கூட குழந்தைகள் இணைய வழி வகுப்புகளில் பங்குபெறுவதற்காக பெரும்பாலான பெற்றோர் புதிதாக அறிதிறன்பேசிகள் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த மின்னணுக் கருவிகள், கையடக்கமாகவும், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் விதத்தில் அமைந்திருக்கின்றன என்றாலும்கூட, அவற்றின் பயன்பாடு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும்தான். கூடுதல் பயன்பாடு செயல்திறன் குறைவை ஏற்படுத்துவதால், மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலான நுகர்வோர் மின்னணு சாதனங்களை திறன் குறைவதற்கு முன்பே தூக்கி எறிந்து, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துக்கு மாறிவிடுகிறார்கள்.

2011-லும், 2016-லும் மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகள் அறிவிக்கப்பட்டன என்றாலும், அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. "வீட்டிலிருந்து வேலை' என்கிற புதிய வழக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், நிறுவனங்களில் மின்னணுக் கழிவுகளை சேகரிக்கும் வாய்ப்பு குறைகிறது. பெரும்பாலானோர் வீட்டுக் குப்பைகளுடன் மின்னணுக் கழிவுகளையும் அப்புறப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் ஆபத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லக்கூடும்.

மின்னணுக் கழிவுகளை தனியாகப் பிரித்து அகற்றுவது நுகர்வோரின் கடமை. ஒவ்வொரு மின்னணு விற்பனையாளரும் தனது கடையில் மின்னணுக் கழிவுகளை சேகரிப்பதற்கும், அவற்றை  மறுசுழற்சி செய்வதற்கு அனுப்புவதற்கும் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மின்னணுக் கழிவுகள் குறித்து உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், நகராட்சி அமைப்புகளும், அரசும், நுகர்வோரும் கவலைப்பட்டாக வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →