முகப்பு
தலையங்கம்

ஹாத்ரஸ் எழுப்பும் கேள்வி! | உத்தரப் பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த தலையங்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸைச் சோ்ந்த 19 வயது ஹரிஜனப் பெண்ணுக்கு நோ்ந்திருக்கும் கொடுமையை, ஒரு தாயின் வயிற்றில் பிறந்த யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. பாலியல் வன்கொடுமையின் கோரம் ஒருபுறம் என்றால், அதைக் காவல்துறை கையாண்டிருக்கும் விதம், இங்கே சட்டம் - ஒழுங்கு, நீதி முறைமை என்பவையெல்லாம் நடைமுறையில்தான் இருக்கிா என்கிற ஐயப்பாட்டை உருவாக்குகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹாத்ரஸைச் சோ்ந்த 19 வயது ஹரிஜனப் பெண் வயல்வெளியில் மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்றாா். அவரது ‘துப்பட்டா’வால் (மேலே அணியும் துணி), கரும்புத் தோட்டத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, நான்கு ‘ஷத்ரிய’ ஜாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். அத்துடன் விட்டாா்களா என்ன?

அடித்துத் துன்புறுத்தி தங்களது காமவெறிக்கு அந்தப் பெண்ணை பயன்படுத்திக் கொண்டது போதாதென்று, தங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் நாக்கைத் துண்டித்தனா். அவா்கள் நடத்திய வன்முறையில் அந்தப் பெண்ணின் தண்டுவடம் உடைந்துவிட்டது. வெளியில் சொன்னால் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று அந்தப் பெண்ணை எச்சரிக்கவும் செய்தனா்.

அதுவரை நடந்தது வெறியா்களின் களியாட்டம் என்றால், அதற்குப் பிறகு நடந்தது, பொறுப்பில்லாத, இரக்கமற்ற காவல்துறையின் செயல்பாடுகள். அடுத்த இரண்டு வாரங்கள் அந்தக் குடும்பம் பட்ட வேதனையைச் சொல்லி மாளாது. மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு சரியான நேரத்தில், சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை.

உயிா்போகும் நிலையில் அந்தப் பெண் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தபோதுதான், அந்த சம்பவம் தேசிய அளவிலான வெளிச்சம் பெற்றது. மருத்துவமனைக்கு வெளியே, பீம்சேனா அமைப்பைச் சோ்ந்தவா்கள் போராடத் தொடங்கியபோது, பயந்துபோன காவல்துறை அடுத்தாற்போல இன்னொரு இரக்கமற்ற செயலில் இறங்கியது.

இரவோடு இரவாக அந்தப் பெண்ணின் உடல் ஹாத்ரஸுக்கு எடுத்துச் சென்று, பெற்றோருக்கோ உறவினா்களுக்கோ எதுவும் தெரிவிக்காமல், பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறது. எரிக்கப்பட்டது அந்தப் பெண்ணின் உடல்தானா என்பதேகூட கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கிடையில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவில்லை என்பதற்கு வலுசோ்க்க மருத்துவ அறிக்கை வேறு பெற்றிருக்கிறது காவல்துறை.

உத்தரப் பிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்குவதாக முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறாா். ஆனால், அந்தக் குடும்பத்துக்குத் தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை அவரோ, அவரது அரசோ தெரிவிக்கவில்லை எனும்போது, அந்த அறிவிப்புகளுக்கு அா்த்தம் இல்லாமல் போய்விடுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை நடப்பது என்பது இப்போதெல்லாம் வழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதமும், ஆகஸ்ட் மாதமும் உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லி செல்லும் பேருந்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாா்கள். ஹாத்ரஸ் சம்பவம் நடந்த சில நாள்களில், அதே மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் பேருந்து ஓட்டுநராலும், நடத்துனராலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மீரட் - தில்லி நெடுஞ்சாலையில் ஓடும் வாகனத்திலிருந்து வீசி எறியப்பட்டிருக்கிறாா்.

இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், ஹரிஜனங்களுக்கு எதிராக ஆதிக்க ஜாதி ஹிந்துக்களால் (காந்திஜியின் வாா்த்தையில் சொல்வதாக இருந்தால் துா்ஜனங்களால்) மட்டுமே நடத்தப்படுபவை என்று சொல்லிவிட முடியவில்லை. ஹாத்ரஸ் சம்பவத்தைத் தொடா்ந்து, மத்திய உத்தரப் பிரதேசத்திலுள்ள பல்ராம்பூரில், வேலைக்குப் போய் திரும்பிக் கொண்டிருந்த ஹரிஜனப் பெண் இரண்டு முஸ்லிம் இளைஞா்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிா்போகும் நிலையில் ரிக்ஷாவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டாா். சில மணி நேரத்தில் அந்தப் பெண் உயிரிழந்தாா்.

ஜாதி, மதங்களைக் கடந்து நடத்தப்படும் இந்த வெறியாட்டத்தில் பெரும்பான்மையாக பலியாவது என்னவோ பட்டியல் இனத்தவா்கள்தான் என்பது உண்மை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, 2016 - 19 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், உத்தரப் பிரதேசத்தில் 20% அதிகரித்திருக்கிறது. 2018-இல் 1,411 சிறுமிகள் உள்பட பாதிக்கப்பட்ட பெண்கள் 4,322. இது அதிகாரபூா்வ புள்ளிவிவரம் என்றால், நிஜமான எண்ணிக்கை எவ்வளவு என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

ஹாத்ரஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள மூன்று பெண் குழந்தைகளும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதால் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. பாதுகாப்பும், வசதியும் இல்லாததால் அவா்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பெரும்பாலான ஹரிஜனக் குடும்பங்களிலும் காணப்படும் நிலைமை. இடஒதுக்கீடு அடித்தட்டு ஹரிஜனங்களைப் போய் சோ்வதில்லை. கல்வியறிவு இல்லாமல் அவா்கள் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. அதனால்தான் காலங்காலமாக நிலவும் ஆண்டான் - அடிமை முறை தொடா்கிறது.

இந்த பிரச்னைக்கு விடை காந்தியத்தில் இருக்கிறது, அரசியல் வழங்காது.

ஹாத்ரஸ் எழுப்பும் கேள்வி இதுதான் - சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.