தலையங்கம்

தோல்வியில் கிடைத்த வெற்றி! | இடநீர் மடத்தின் பீடாதிபதி குறித்த தலையங்கம்

ஆசிரியர்


கேரள மாநிலம் காசர்கோட்டிலுள்ள இடநீர் மடத்தின் பீடாதிபதி பூஜ்யஸ்ரீ கேசவானந்த பாரதி ஸ்ரீபாதகல்வாரு கடந்த ஞாயிறன்று முக்தி அடைந்தார். அவர் தேசிய அளவில் கொண்டாடப்படும் ஆன்மிகத் தலைவரல்ல. ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் அவருடைய பெயர் அழிக்க முடியாத முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அரசியல் சாசனம் குறித்த எந்தவொரு பிரச்னையோ, சர்ச்சையோ, விவாதமோ எழுந்தாலும் கேசவானந்த பாரதி வழக்கை மேற்கோள் காட்டாமல் இருக்க முடியாது என்பதால், அவர் வரலாறு படைத்துவிட்டார்.

1973 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி கேரள அரசுக்கு எதிரான  பூஜ்யஸ்ரீ கேசவானந்த பாரதி சுவாமிகளின் மனு உள்பட ஆறு ரிட் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த ரிட் மனுக்களில் முதலாவது மனுவாக இருந்தது பூஜ்யஸ்ரீ கேசவானந்த பாரதி சுவாமிகளின் மனு என்பதால், தீர்ப்பு அவரின் பெயரில் அறியப்படுகிறது. 

கேரள அரசு கொண்டுவந்த நிலச் சீர்திருத்தச் சட்டமும், அதில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களும் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் நடவடிக்கை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்பதுதான் சுவாமிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 1970 மார்ச் மாதம் 21-ஆம் தேதியிலான 135-ஆவது எண்ணுடைய ரிட் மனு. தனது மடத்துக்கு சொந்தமான 300 ஏக்கர் அசையாச் சொத்தை நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் கேரள அரசு எடுத்துக் கொண்டதுதான் சுவாமிகளின் முறையீட்டுக்குக் காரணம்.

கேசவானந்த பாரதி சுவாமிகளும் மற்றவர்களும் தொடுத்த அந்த அரசியல் சாசன வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி உள்ளிட்ட 13 நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் அதற்கு முன்னோ பின்னோ 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்படுத்தப்பட்டதில்லை. அயோத்தி வழக்கு உள்பட வேறு எந்தவொரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில், கேசவானந்த பாரதி வழக்கைப்போல 68 நாள்கள் வாதப் பிரதிவாதங்களுடன் விசாரிக்கப்பட்டதில்லை.

1972 அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கிய வாதம், 1973 மார்ச் 23-ஆம் தேதிவரை நடந்தது. இனிமேல் நேரடி வாதம் வேண்டாம், இரு தரப்பும் எழுத்து மூலம் தங்கள் வாதத்தை சமர்ப்பித்தால் போதும் என்று உத்தரவு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு ஏப்ரல் 24-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அடுத்தநாள் பணி ஓய்வு பெறவிருந்த தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரியின் தீர்ப்புதான் கேசவானந்த பாரதி வழக்கின் வரலாற்று முடிவுக்குக் காரணம்.

13 நீதிபதிகளில் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி, நீதிபதிகள் கே.எஸ். ஹெக்டே, ஏ.கே. முகர்ஜி, ஜே.எம். ஷெலட், ஏ.என். குரோவர், பி. ஜெகன்மோகன் ரெட்டி, ஹெச்.ஆர். கன்னா ஆகிய ஏழு பேர் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கினர். நீதிபதிகள் ஏ.என். ரே, டி.ஜி. பலேகர், கே.கே. மேத்யூ, எம்.ஹெச். பெக், எஸ்.என். துவிவேதி, ஒய்.வி. சந்திரசூட் ஆகிய ஆறு பேர் எதிராகத் தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை தீர்ப்பு அரசுக்கு எதிராக இருந்ததன் விளைவை அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்களின் பணிமூப்பு  அங்கீகரிக்கப்படவில்லை, அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய ஏ.என். ரே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்திரா காந்தி அரசால் நியமிக்கப்பட்டார்.

வழக்கின் முடிவு பூஜ்யஸ்ரீ கேசவானந்த பாரதி சுவாமிகளுக்கு  சாதகமாக அமையவில்லை. அரசியல் சாசனத்தைத் திருத்தி, அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மையை அகற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குக் கிடையாது என்பதுதான் பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு. அதே நேரத்தில், சொத்துரிமைக்கான அடிப்படை உரிமையை அகற்றும் திருத்தத்துக்கு அந்தத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கியது. நாடாளுமன்றத்துக்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர உரிமைகள் உண்டு என்றாலும், அதன் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்பதுதான் கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு.1951-இல் அன்றைய பண்டித நேரு அரசு ஏற்படுத்திய ஒன்பதாவது ஷெட்யூலின் கீழ் இயற்றப்படும் சட்டங்கள் நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டவை. இந்திரா காந்தி அரசு 24-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது. 25-ஆவது திருத்தம் சொத்துரிமையையும், இழப்பீட்டையும் கட்டுப்படுத்தியது. 29-ஆவது திருத்தம் நிலச் சீர்திருத்தச் சட்டங்களை ஒன்பதாவது ஷெட்டியூலின் கீழ் கொண்டுவந்து, நீதிமன்றத் தலையீட்டைக் கட்டுப்படுத்தியது.

இவையெல்லாம் தனது மடத்தின் உரிமையையும், அடிப்படை சுதந்திரத்தையும் பறிப்பவை என்பதுதான் கேசவானந்த பாரதியின் வாதம். அவரது நோக்கம் நிறைவேறாவிட்டாலும், அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மையைக் காப்பாற்றிய பெருமை சுவாமி கேசவானந்த பாரதிக்கு உண்டு. 1967 கோலக்நாத் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தடம் புரளச் செய்த மூன்று அரசியல் சாசனத் திருத்தங்களை செல்லாததாக்கியது கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு. 

அந்த வழக்கின் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், சுவாமிஜிக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய பிரபல வழக்குரைஞர் நாநி பால்கிவாலா, ஒருமுறைகூட சுவாமிஜியைச் சந்திக்கவே இல்லை என்பதுதான். இந்திய நீதித்துறை வரலாற்றில் அழிக்க முடியாத பெயர்களாகிவிட்டன கேசவானந்த பாரதியும், நாநி பால்கி வாலாவும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT