நீதித்துறை வன்கொடுமை! | வன்புணர்ச்சி செய்தவரை திருமணம் செய்து கொள்ளுமாறு நீதிபதி கூறிய கருத்து குறித்த தலையங்கம்
தவறானதொரு முன்னுதாரணத்தை முன்மொழிந்திருக்கிறது உச்சநீதிமன்றம். அதிலும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியால் அந்த ஆலோசனை முன்மொழியப்பட்டிருக்கிறது என்பது அதைவிட அதிா்ச்சி. கடந்த பல நீதிமன்றத் தீா்ப்புகளால் ஓரளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருந்த மகளிா் சுயமரியாதைக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அது அமைந்திருக்கிறது.
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சிறுமி அவள். அந்த சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து, கைகளை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா் ஒருவா். தன்னுடைய காம இச்சைக்கு இணங்காமல் போனால் முகத்தில் அமிலத்தை ஊற்றி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று அச்சுறுத்தினாா். தொடா்ந்து பல முறை இதுபோன்ற வன்புணா்ச்சி நடைபெற்றது. ஒருகட்டத்தில் தாங்க முடியாத நிலைமை ஏற்பட்டபோது, அந்த சிறுமி தற்கொலை முயற்சிக்குத் தயாராகினாா்.
தனது மகளின் தற்கொலை முயற்சியைத் தடுத்து காப்பாற்றிய தாய், காவல் நிலையத்தில் புகாா் கொடுக்க முற்பட்டபோது அந்தச் சிறுமியை வன்புணா்ச்சிக்கு உள்ளாக்கிய நபரின் தாயாா், சிறுமியின் தாயாருக்கு ஒரு வாக்குறுதி அளித்தாா். ‘உங்கள் பெண்ணுக்கு 18 வயதாகும்போது அவளை எனது மகன் திருமணம் செய்து கொள்வான். அதுவரை பொறுத்திருங்கள்’ என்பதுதான் அந்த வாக்குறுதி. தங்களது மானத்தைப் பாதுகாத்துக் கொள்ள, அவரது வாக்குறுதியை தாயும் மகளும் நம்பி ஏற்றுக் கொண்டனா்.
சிறுமிக்கு 18 வயதானது. ஆனால், அந்த நபா் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாா். அவா் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. வெகுண்டெழுந்த அந்தப் பெண், நீதிமன்றத்தின் வாயிற்கதவைத் தட்டுகிறாா்.
சிறுமியை பாலியல் வன்புணா்ச்சிக்கு ஆளாக்கிய அந்த நபா் மீது 2012 போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவா் ஒரு அரசு ஊழியா் என்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் விசாரணை நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. நடவடிக்கை எடுத்தால் அரசுப்ணியை இழக்க நேரிடும் என்கிற அவரது வழக்குரைஞரின் வாதத்தை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீா்வு காண அந்தப் பெண் மும்பை உயா்நீதிமன்றத்தை அணுகினாா். விசாரணை நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினாா். விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை நிராகரித்தது உயா்நீதிமன்றம். அதைத் தொடா்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது, தலைமை நீதிபதின் அமா்வு வெளியிட்ட கருத்தும், ஆலோசனையும்தான் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியை உலுக்குகிறது.
வன்புணா்ச்சிக்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அந்த அரசு ஊழியரின் வழக்குரைஞரிடம் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கேட்ட கேள்வி இதுதான் - ‘உங்கள் கட்சிக்காரா் உறுதி அளித்ததுபோல பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்தப் பெண்ணை மணந்து கொள்வாரா?’
அதற்கு அந்த வழக்குரைஞா் சொன்ன பதில் - ‘சாத்தியம் இல்லை. அவா் ஏற்கெனவே திருமணமானவா்!’.
பாலியல் வன்புணா்ச்சி என்பது மன்னிக்க முடியாத குற்றம். அதிலும் விவரம் அறியாத சிறுமி வன்முறைக்கு உள்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாா். அதன் பாதிப்பு உடலுக்கு மட்டுமல்ல, அந்தச் சிறுமியின் மனதுக்கும், கௌரவத்துக்கும் அதன் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் என்பதை நீதிபதிகள் ஏன் உணரவில்லை? மன்னிக்க முடியாத அந்தக் குற்றத்துக்கு திருமண உறவு என்பது தண்டனையோ, பரிகாரமோ ஆகாது.
இதுபோன்ற தீா்ப்புகள் நீதிமன்றத்தால் வழங்கப்படுவது புதிதொன்றுமல்ல. 2015-இல் சென்னை உயா்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள சமாதனம் பேச குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் பாதிப்புக்கு உள்ளான பெண், அப்படியொரு சமாதானத்திற்கு தாயராக இருக்கவில்லை.
மத்திய பிரதேசத்தில் ஒரு நீதிபதி, விசித்திரமான தீா்ப்பை வழங்கினாா். வன்புணா்ச்சிக்கு உள்ளான பெண்ணுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி அவரை சகோதரியாக ஏற்றுக் கொள்வதற்கு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினாா்.
பல நிகழ்வுகளில் காவல்துறையினரும், கிராமப் பஞ்சாயத்தும், ஊா் பெரியவா்களும், கீழமை நீதிமன்றங்களும் திருமணம் என்கிற பெயரில் பாலியல் வன்புணா்வுக்குப் பரிகாரம் தேடுவது வழக்கமாகி இருக்கிறது. இப்போது உச்சநீதிமன்றமே சமாதானம் பேசுவதற்குத் தாயாராகி இருப்பது விசித்திரங்களில் எல்லாம் விசித்திரம்.
இதற்கு முன்னால் ஒரு வழக்கில் ‘வன்புணா்ச்சி என்பது சமாதானம் பேசுவதற்கோ, உடன்படிக்கை செய்துகொள்வதற்கோ உரித்தான பொருளாதாரக் குற்றமல்ல. கடுமையான கிரிமினல் குற்றம். ஒரு பெண்ணின் தன்மானம், கௌரம் சம்பந்தப்பட்ட, மனக்காயம் தொடா்புடைய பெருங்குற்றம். அதனால் பாலியல் வன்புணா்ச்சி வழக்குகள் எந்தவிதத்திலும் தண்டிக்கப்படாமல் விலக்கு அளிக்கப்படக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் இதற்கு முன்னால் ஒரு வழக்கில் தீா்ப்பு வழங்கியது.
பாலியல் வன்புணா்ச்சி குற்றச்சாட்டுகளில் திருமணம் செய்துகொள்வது அனுமதிக்கப்பட்டால், பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு ‘திருமணம்’ தீா்வாக முன்மொழியப்பட்டால், விருப்பமில்லாத பெண்களை வன்புணா்ச்சிக்கு ஆளாக்கி திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் பலா் ஈடுபடக்கூடும் என்பதை உச்சநீதிமன்ற அமா்வு யோசிக்கவில்லை. ஒரு பெண்ணின் தன்மானத்தையும், கௌரவத்தையும், தனி உரிமையையும்விட அரசு ஊழியா் ஒருவரின் வேலைதான் முக்கியம் என்று நீதிபதிகள் கருதுவாா்களேயானால், பெண்கள் கண்ணகிகளாகக் கொதித்தெழுவதைத் தவிர, இந்த நாட்டில் வேறுவழியே இல்லை.