முகப்பு
தலையங்கம்

தேர்தலும் நோய்த்தொற்றும்! | மீண்டும் கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவல் குறித்த தலையங்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

பரபரப்பான தேர்தல் பிரசாரம் தொடங்க இருக்கும் நிலையில், மீண்டும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஆறு நாள்களாக தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், சுமார் 20,000-க்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதும் தேர்தல் பரபரப்பில் கவனம் பெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கடந்த ஒரு வாரகாலமாக கொவைட் 19 தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மொத்த பாதிப்பில் மேலே குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் மட்டும் ஐந்தில் நான்கு பங்கினருக்கும் அதிகமாக இருக்கிறார்கள். கடந்த முறை நோய்த்தொற்று பரவிய அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, இதேபோல கட்டுக்கடங்காமல் பரவினால், ஒருசில வாரங்களில் இன்னொரு அலை உருவாகி அது பொது முடக்கத்துக்கு வழிகோலக்கூடும். அதனால், போர்க்கால நடவடிக்கை எடுத்து நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம். 

வளர்ச்சி அடையும் நாடான இந்தியா, உலகமே பார்த்து வியக்கும்வண்ணம் ஜனவரி 16-ஆம் தேதி தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கியது. விரல்விட்டு எண்ணக்கூடிய வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு நிகராக நம்மால் தடுப்பூசி கண்டுபிடிக்க முடிந்தது என்பதும், கோடிக்கணக்கில் தடுப்பூசிகளைத் தயாரித்து நம்மைவிட வளர்ச்சியில் பின்தங்கிய சிறிய நாடுகளுக்கு உதவ முடிந்தது என்பதும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதப்பட வைக்கும் சாதனைகள்.

முதல் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2.26 கோடி. பலர் இரண்டாவது முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாவது கட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் இந்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டோரும், சர்க்கரை நோய், இதய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களும் இரண்டாம் கட்டத்தில் இணைக்கப்பட்டனர். சுமார் 27 கோடி பேர் இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 9 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கடந்த 10 நாள்களில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 

தடுப்பூசி போடப்படும் வேகத்தையும், கொள்ளை நோய்த்தொற்று மீண்டும் பரவத் தொடங்கியிருக்கும் வேகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகப் பெரிய இடைவெளி தென்படுகிறது. அதனால், தடுப்பூசித் திட்டம் நிறைவேற்றப்படும் வேகம் மிக அவசரமாக அதிகரிக்கப்பட்டாக வேண்டும். தீநுண்மிப் பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் மீண்டும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும். தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தி நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும். 

தினசரி நோய்த்தொற்றுப் பரவலுடைய உச்சகட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எட்டப்பட்டது. அதற்குப் பிறகு படிப்படியாக அதன் வீரியம் குறைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டதே தவிர, பாதிப்புகள் கணிசமாகவே குறைந்துவிட்டன. ஸ்தம்பித்திருந்த நிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நோய்த்தொற்றும் பொது முடக்கமும் மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாக பாதித்திருந்த நிலையில், இயல்பு வாழ்க்கை திரும்பினால் மட்டுமே பொருளாதாரம் மீண்டெழ முடியும் என்கிற எதார்த்தத்தை அரசு எதிர்கொண்டது.

நோய்த்தொற்று குறையத் தொடங்கிவிட்டது என்கிற தைரியத்தில் நிர்வாகத்தின் முனைப்பும், மக்களின் ஆர்வமும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதில்தான் குறியாக இருந்தன. அரசு நிர்வாகமும் சரி, மக்களும் சரி கொள்ளை நோய்த்தொற்றின் ஆபத்து கடந்துவிட்டது என்கிற மனநிலைக்கு வந்துவிட்டனர். தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொவைட் 19-க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு மெத்தனப்போக்கு அதிகரித்தது, 

இப்போது மீண்டும் நோய்த்தொற்றுப் பரவலுக்கு வழிகோலியிருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது. 

ஓராண்டுக்கு முன்பு நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது இருந்ததைப்போல அல்லாமல் இப்போது கொவைட் 19-ஐ எதிர்கொள்வதற்கு எல்லா வகையிலும் நாம் தேர்ச்சி பெற்றிருக்கிறோம்; தயாராகவும் இருக்கிறோம். மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கொவைட் 19 குறித்த  முழுமையான புரிதலுடன் இருக்கிறார்கள். 

பிரச்னை அதுவல்ல, வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்தாக வேண்டும். இப்போதைய தடுப்பூசித் திட்டத்தின் வேகம் தொடருமானால், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையினரில் பாதி பேருக்கு தடுப்பூசி போட்டு முடிப்பதற்கே இன்னும் ஓராண்டு தேவைப்படும். அது நோய்ப்பரவலுக்கு வழிகோலும். 

தடுப்பூசித் திட்டத்தின் வேகம் மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்புபோல் தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் அதிகரித்தாக வேண்டும். இல்லையென்றால், கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கு தேர்தல் காரணமாகிவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.