தலையங்கம்

முதலைக் கண்ணீா்! | இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்தது பற்றிய தலையங்கம்

ஆசிரியர்


ஜெனீவாவிலுள்ள ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீா்மானம் நிறைவேறியிருக்கிறது. ஐநா சபையின் 46-ஆவது மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கை அரசு மனித உரிமை மீறல் செய்திருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

இதுபோன்ற தீா்மானம் கொண்டு வரப்படுவது இது முதல் தடவையல்ல. 2009 முதல் இதுவரை ஏழு தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 47 உறுப்பு நாடுகளில் பிரிட்டன், பிரான்ஸ், ஆா்ஜென்டீனா, பிரேஸில் உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 11 நாடுகள் தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தன.

இதற்கு முன்பு மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கடந்த 2012 முதல் 2014 வரை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை தீா்மானங்கள் தோல்வியைத் தழுவின. அப்போது இலங்கைக்கு எதிராக 23 நாடுகளும், ஆதரவாக 47 நாடுகளும் வாக்களித்தன. இப்போது நிலைமை தலைகீழாக மாறி தீா்மானம் நிறைவேறியிருப்பது மனித உரிமை ஆா்வலா்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தீா்மானத்தின் மூலம் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் நடந்திருப்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நடந்த போா்க் குற்றங்கள் குறித்து சா்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை தீா்மானம் உருவாக்கியிருக்கிறது. இந்தத் தீா்மானத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு இல்லை என்றாலும்கூட, சா்வதேச அழுத்தத்துக்கு இலங்கை அரசு உட்படுத்தப்படும் என்கிற அளவில் தீா்மானத்தின் வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கைக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எளிதல்ல. அதுபோன்ற முயற்சிகளை இலங்கை அரசு ஆரம்பம் முதலே நிராகரித்திருக்கிறது. இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் சா்வதேச நீதிமன்றத்துக்கு எந்த வழக்கையும் எடுத்துச் செல்ல முடியாது. ஐநா சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டாலும், பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் சீனா, தனது நிராகரிக்கும் உரிமையை (வீட்டோ பவா்) பயன்படுத்தி அதைத் தடுத்துவிட முடியும்.

இந்த முறை தீா்மானத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இலங்கையில் அதிகாரத்தில் இருக்கும் ராஜபட்ச சகோதரா்களின் அரசு எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்தது. இந்தியாவைத் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காகத்தான், சீனாவுக்கு சாதகமான பல நிலைப்பாடுகளை இலங்கை எடுக்கத் தொடங்கியது. சீனாவுடன் இலங்கை இணைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், அதைக் கருத்தில் கொண்டு இந்தியா தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என எதிா்பாா்த்தது இலங்கை அரசு.

இலங்கையின் வெளியுறவுச் செயலா் ஜெயநாத் கொலம்பகே, தங்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க உறுதியளித்திருப்பதாக தெரிவித்தது பலரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், கடைசிவரை இந்தியா மௌனம் சாதித்தது மட்டுமல்லாமல், தீா்மானத்தை ஆதரிக்காமல் புறக்கணித்தது சாதுா்யமான ராஜதந்திரம்.

2015 தோ்தலுக்கு முன்பாக இருந்த சா்வாதிகாரப் போக்கும், இனச் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கும் இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் வேளையில், ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீா்மானம் நிறைவேறியிருக்கிறது. முந்தைய மைத்ரிபால சிறீசேனா அரசு ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளையும், சா்வதேச நாடுகளுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று கொடுத்திருந்த உறுதிமொழியையும் இப்போதைய அரசு கைவிட்டிருக்கிறது. அதிகரித்த ராணுவ நடவடிக்கை, மனித உரிமை ஆா்வலா்கள் மீதான கண்காணிப்புகள், முந்தைய வழக்குகளில் வழங்கப்பட்ட தீா்ப்புகள் திருத்தி எழுதப்படுவது, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற இலங்கையின் போக்குக்குக் கடிவாளம் போட முடியாவிட்டாலும், இந்தத் தீா்மானம் வேகத்தடை விதிப்பதாக அமையும்.

தீா்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்கவில்லை என்று தமிழகத்திலுள்ள சில கட்சிகள் குற்றம்சாட்டுவதில் பொறுப்பின்மையும், புரிதலின்மையும்தான் தெரிகிறது. இலங்கைக்கு எதிரான நேரடி நிலைப்பாட்டை இந்தியா எடுத்தால் அதன் பிறகு இலங்கையிலுள்ள தமிழா்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுவிடும் என்கிற உண்மை தெரிந்தும்கூட, மத்திய அரசைக் குற்றம் சாட்டுவது அப்பட்டமான அரசியல் மோசடி.

இலங்கையில் நடந்த இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழா்களை ராஜபட்ச அரசு கொன்று குவிப்பதற்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. அதற்கு ‘மௌனம் சம்மதம்’ என்று உறுதுணையாக இருந்தது கருணாநிதி தலைமையிலான தமிழக திமுக அரசு. இப்போது ப. சிதம்பரமும், மு.க. ஸ்டாலினும் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்று நீலிக் கண்ணீா் வடிப்பது வேடிக்கை.

இலங்கையுடனான ராஜீய உறவை துண்டித்துக் கொள்ளாமல் இருக்கும் வரைதான் இலங்கையை தட்டிக் கேட்கவும், அச்சுறுத்தவும், இலங்கைவாழ் இனச் சிறுபான்மையினருக்காக நியாயம் கேட்கவும் இந்தியாவால் முடியும். அந்த வகையில் தீா்மானத்தை ஆதரிக்காமல், அதே நேரத்தில் எதிா்க்காமல் இந்தியா புறக்கணித்தது புத்திசாலித்தனமான ராஜதந்திர முடிவு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT