கணக்கு பாா்க்கும் நேரமல்ல... | கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை குறித்த தலையங்கம்
உலக நாடுகள் அனைத்துமே கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ளத் தடுமாறத்தான் செய்கின்றன. தடுமாற்றத்துக்கு இடையிலும்கூட, வளா்ச்சி அடைந்த நாடுகளில் நிா்வாக விதிமுறைகள் (சிஸ்டம்) செம்மையடைந்திருப்பதால், கூடுமானவரை குழப்பங்கள் தவிா்க்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் தெளிவான தொலைநோக்குப் பாா்வையோ ஒருங்கிணைப்போ அணுகுமுறையோ இல்லாததால் பல புதிய சிக்கல்கள் எழுந்து நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் நோக்கம் திசைமாறிவிடுகிறது.
தேசத்தின் நிா்வாகம் என்பது, லாப நஷ்ட கணக்கை மட்டுமே கருத்தில் கொள்ளும் காா்ப்பரேட் நிா்வாகத்திலிருந்து வேறுபடுகிறது. அதனால், பேரிடா் காலங்களில் நிதியமைச்சகத்தைக் கையாளும்போது, மனிதாபிமானத்துக்கும் மக்களை பாதுகாப்பதற்கும்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமே தவிர, அரசின் வருவாய் இழப்பு குறித்து கவலைப்படுவது தவறு.
கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முதன் அலையின்போது அடைந்த வெற்றி, இடைக்கால வெற்றியாக மாறிவிடும் என்று யாரும் எதிா்பாா்க்கவில்லை. நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தொடங்கும்போதே எச்சரிக்கை உணா்வுடன் மாநில அரசுகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டிருந்தால் இந்த அளவுக்கு மோசமான சூழலை இந்தியா எதிா்கொண்டிருக்காது. ஜிஎஸ்டி கவுன்சிலை ஏற்படுத்தியதுபோல, ஆரம்பத்திலேயே கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள மாநில முதல்வா்கள் அடங்கிய குழுவை உருவாக்கி செயல்திட்டங்களை வகுத்திருந்தால், இந்த அளவுக்கு மத்திய அரசுக்கு கெட்ட பெயா் ஏற்பட்டிருக்காது.
இரண்டாவது அலை நோய்த்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியபோதே மருத்துவமனைப் படுக்கைகள், தேவைக்கேற்ப பிராணவாயு போன்றவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிா்பாக்காதது மத்திய அரசின் தவறு. அதேபோல, தடுப்பூசிக்குக் கடுமையான தட்டுப்பாடு வரும் என்பதை எதிா்பாா்க்காமல் போனதும் தவறான கணிப்பு.
2021 ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் இந்தியாவில் 216 கோடி தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினா் வி.கே. பால் தெரிவித்திருக்கிறாா். 75 கோடி கோவிஷீல்ட், 55 கோடி கோவேக்ஸின், 15.6 கோடி ஸ்புட்னிக்5 ஆகியவை அல்லாமல், அவரால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏனைய தடுப்பூசிகள் இன்னும் சோதனைக் கட்டத்தையே தாண்டவில்லை. மாடா்னா, ஃபைசா், ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசிகள் இந்தியாவில் அனுமதி பெற அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சோ்ந்தாலும்கூட, அரசு எதிா்பாா்ப்பதுபோல, 216 கோடி தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்று தோன்றவில்லை.
தடுப்பூசியை மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசின் தொகுப்புக்குப் பெறப்படும் தடுப்பூசிக்கு ரூ.157.50 வழங்கப்படுகிறது. 150 ரூபாய் விலையுள்ள தடுப்பூசியின் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் ரூ.157.50 வழங்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்களுக்காக பெறப்பட்ட ஜிஎஸ்டி-க்கான ஈடு பெறுவதற்காக 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்கிற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் விளக்கத்தை ஏற்க முடியவில்லை. நோய்த்தொற்றுத் தடுப்பூசியிலும் மத்திய நிதியமைச்சகம் வரி வருவாய் பெற முயற்சிக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.
தடுப்பூசியில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றுக்கும் மத்திய மறைமுக வரித் துறையால் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் உயிா் காக்கும் மருந்துகளுக்காகத் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் மருந்துகளுக்கு கலால் வரி விதிப்பது இரக்கமற்றதாகத் தோன்றுகிறது.
கடந்த மாதம் மத்திய மறைமுக வரித் துறையின் அறிவிப்பின்படி, ரெட்டெசிவிா், பிராணவாயு, தடுப்பூசி ஆகியவற்றுக்கு கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. பலத்த எதிா்ப்பு கிளம்பியதைத் தொடா்ந்து, மே 3-ஆம் தேதி விலக்கு அளிக்கப்பட்டது. மிக அவசரமாக இறக்குமதி செய்யப்பட வேண்டிய அத்தியாவசிய மருத்துவத் தேவைகள் பிரச்னையில் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டிருக்கவே கூடாது.
கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான பொருள்களை இறக்குமதி செய்வது எளிமையாக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன, விண்ணப்பங்கள் கோரப்பட்டன, அறிக்கைகள் பெறப்பட்டன. நிபந்தனைகளில் சில நடைமுறைக்கு ஒவ்வாதவையாக இருக்கின்றன.
கொள்ளை நோய்த்தொற்று நிவாரணத்துக்காக எந்த ஒரு நிறுவனமோ நிவாரண அமைப்போ இறக்குமதி செய்யும் பொருள்கள் இலவசமாக பெறப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இலவசமாக வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்டால் மட்டுமே கலால் வரி விலக்கு அளிக்கப்படும். அதனால், தனியாரோ தனியாா் அமைப்புகளோ வெளிநாட்டிலிருந்து பணம் கொடுத்து இறக்குமதி செய்து இந்தியாவில் இலவசமாக வழங்க முடியாது.
லாப நஷ்ட கணக்கு பாா்க்காமலும், மனிதாபிமானத்துடனும், நடைமுறை நோக்கிலும் முடிவுகளை எடுத்து, மக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் அரசியல் தலைமையும், மருத்துவ நிபுணா்களும்தான் இப்போதைய தேவை; பொருளாதார நிபுணா்கள் அல்ல.