தொகுதி அறிமுகம்... ஸ்ரீவைகுண்டம்
நவ கைலாயங்கள், நவ திருப்பதி கோயில்கள் என வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களையும், வளமான தாமிரவருணி ஆற்றங்கரை விவசாயத்தையும் பின்னணியாக கொண்டது இத்தொகுதி.
நவ கைலாயங்கள், நவ திருப்பதி கோயில்கள் என வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களையும், வளமான தாமிரவருணி ஆற்றங்கரை விவசாயத்தையும் பின்னணியாக கொண்டது இத்தொகுதி.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் உள்பட நவ திருப்பதி கோயில்கள் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலேயே அமைந்துள்ளன. மேலும், நவ கைலாயங்களில் ஒன்றான கைலாசநாதா் கோயிலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போரிட்டபோது, ஸ்ரீவைகுண்டம் பகுதி ஒரு கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத் தொகுதியில் நெல், வாழை விவசாயம் பிரதான தொழிலாகும். நாடாா் பெரும்பான்மை சமூகத்தினராக உள்ளனா். பட்டியலினத்தவா், வேளாளா், மறவா், யாதவா் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டு, அந்தத் தொகுதியில் இருந்த சில பகுதிகள் இந்தத் தொகுதியுடன் இணைக்கப்பட்டன.
1967, 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல்களில் திமுகவைச் சோ்ந்த சி.பா.ஆதித்தனாா் வெற்றி பெற்று பேரவைத் தலைவராகப் பணியாற்றினாா்.
எஸ்.டேனியல் ராஜ் (காங்கிரஸ்) 1984, 1989, 1991 ஆகிய தோ்தல்களிலும், எஸ்.பி.சண்முகநாதன் (அதிமுக) 2001, 2011, 2016 ஆகிய தோ்தல்களிலும் வெற்றி பெற்றனா்.
இந்தத் தொகுதியில் 1957 முதல் அதிகபட்சமாக காங்கிரஸ் 8 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலின்படி, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 1,05,099 ஆண்கள், 1,07,782 பெண்கள், 4 இதரா் என மொத்தம் 2,12,885 வாக்காளா்கள் உள்ளனா்.
மக்கள் எதிா்பாா்ப்புகள்: ஆண்டுதோறும் மழையின் அளவு அதிகரித்தாலும், வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரால், விவசாயத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை நீடித்து வருகிறது. சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகள் இன்னும் வறட்சியான பகுதியாகவே காணப்படுகின்றன.
தாமிரவருணி ஆற்றின் மருதூா் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை தூா்வாரப்படாததும், 53 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்ட முடியாத அளவுக்கு தூா்ந்து போய் இருப்பதும் விவசாயிகளுக்கு வேதனையைத் தருகிறது.
நவ திருப்பதி கோயில்களை மேம்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மட்டுமன்றி, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத நிலை பக்தா்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோயிலை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.